Sunday, May 24, 2009

திருக்குறள் -அருஞ்சொற்பொருள்

(குறிப்பு- தமிழில் ஒரு சில சொற்கள், ஒரே சொல் பல பொருட்களைத் தரும். ஆனால் இப்பகுதியில் உள்ள சொற்களுக்கான பொருள் அந்தந்த குறளுக்கு என்ன அர்த்தமோ அவற்றை மட்டுமே தந்துள்ளோம்.)

கடவுள் வாழ்த்து 1

வாலறிவன் - கடவுள் வால் - மிகுதி, பெரிய;
வாலறிவன் - பேரறிவுடையவன், மிகுந்த ஞானமுடையவன்

நற்றாள் - நல்ல(தூய) பாதம்; இறைவனின் திருவடி
இடும்பை - துன்பம்
யாண்டும் - எந்த நாளும்
இருவினை - நல்வினை, தீவினை
ஐம்பொறி - ஐம்புலன்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி)
ஆழி - பெருங்கடல்
எண்குணம் - தன்வயம், தூயஉடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் (பற்று) இன்மை, பேரருள், முடிவிலா ஆற்றல், வரம்பில் இன்பம்.

வான் சிறப்பு 2

அமிழ்தம் - சாவா மருந்து
பாற்று - உரித்தானது
து -துஞ்சுதல் (உண்ணுதல்)
விரிநீர் - கடல் நீர்
உடற்றும் - வருத்தும்.
சார்வாய் - ஆதரவாய்
விசும்பு - வானம்
வானோர் -தேவர்கள்
வறக்கு - வறுமை

நீத்தார் பெருமை 3

நீத்தார் - ஆசைகளைத் துறந்தவர்
பனுவல் - நூல்
உரன் - அறிவு
தோட்டி - துறட்டி(அங்குசம்)
கோமான் - அரசன்
வெகுளி - கோபம்

அறன் வலியுறுத்தல் 4

ஆக்கம் - நன்மை
ஓவாது - இடையறாது
பொன்றுங்கால் - இறுதிக்காலம்
பொன்றா - நீங்காத
சிவிகை - பல்லக்கு


இல்வாழ்க்கை 5

துவ்வாதவர் - உணவுக்குத் துப்பில்லாதவர் (வறுமைப் பட்டவர்)
தென்புலத்தார் - பிதிரர்
விருந்தொக்கல் - விருந்தினர், சுற்றத்தார்
பாத்தூண் - பகுத்துண்


வாழ்க்கைத் துணைநலம் 6


கொழுநன் - கணவன்
புத்தேளிர் - கடவுளர்
ஏறு - ஆண்சிங்கம்
பீடு - பெருமை

அன்புடைமை 8

பூசல் - பலரும் அறிய (வெளிப்படையாக)
வையகம் - உலகம்
மறம் - வீரம்
என்பு - எலும்பு
வன்பாற் - காய்ந்த பாலை நிலம்
வற்றல் மரம் - காய்ந்த மரம்


விருந்தோம்பல் 9

வேளாண்மை - உபகாரம்
சாவா மருந்து - அமிழ்தம்
பருவந்து - வருந்துதல் (வறுமையால்)
செய்யாள் - திருமகள்
இல் - வீடு
வித்து - விதை
மிச்சில் மிசைவான் - மிகுதியை(எஞ்சியதை) உண்பவன்
பரிந்தோம்பி(பரிந்து ஓம்பி)- வருந்திக் காத்து
வேள்வி - ஐம்பெரும் வேள்வி
1. பிரமயாகம் - வேதமோதுதல்
2.
தேவயாகம் - ஓமம் வளர்த்தல்
3. மானுடயாகம் - விருந்தோம்பல்
4. பிதிர்யாகம் - நீர்க்கடனாற்றல்
5. பூதயாகம் - பலியீதல் (பூத உடலைக் காணிக்கையாக்குதல்)


இனியவை கூறல் 10

ஈரம் அளைஇ - அன்போடு கலந்து
படிறு இலஆம் - வஞ்சனை இல்லாத
துவ்வாமை - வறுமை


செய்ந்நன்றி அறிதல் 11

வையகம், ஞாலம் - உலகம்
தூக்கின் - ஆராயின்
தினை - ஒரு வகை தானியம்

நடுவு நிலைமை 12

செப்பம் - சட்டம், ஒழுங்கு
ஆக்கம் - செல்வம்
எச்சம் - சந்ததியார்
(நடுவு இகந்து ஆம்)
நடுவு, செப்பம் - நடுவு நிலைமை
இகந்து - நீங்குதலால்
ஆம் - உண்டாகின்ற
ஒரீஇ - நீங்கி
நடுஆக - நடுவாக
கெடுஆக - வறுமையாக
கோடாமை - சாயாமை
அணி - அழகு
கோட்டம் - கோணுதல்
ஒருதலையா - உறுதியாக


அடக்கமுடைமை 13

ஊங்கு - மேற்பட்ட
ஏமாப்பு - பாதுகாப்பு
கதம் - சினம்
செவ்வி - தகுந்த காலம்


ஒழுக்கமுடைமை 14

விழுப்பம் - சிறப்பு, மேன்மை
ஒல்கார் - குன்றார், சுருங்கார்
ஏதம் - குற்றம்
உரவோர் - மனவலிமையுடையோர்
இடும்பை - துன்பம்
ஒல்லா - இயலாதது


பிறனில் விழையாமை 15

பெட்டு - இச்சித்து
ஒழுகும் - நடக்கும்
பேதைமை - அறியாமை
மன்ற - நிச்சயமாக
விளியாது - அழியாது
இகவாவாம் - நீங்காவாம்
நயவாதவன் - விரும்பாதவன்
நாமநீர் - கடல்(உப்பு) நீர்
வைப்பு - உலகம்
விளிந்தவர் - உயிரற்றவர்


பொறையுடைமை 16

அகழ்வார் - தோண்டுபவர்
ஒறுத்தல் - தண்டித்தல்
பொதிந்து - இடைவிடாது
பொன்று - இறப்பு
நோ - துன்பம்
நொந்து - வருந்தி
நோற்கிற்பவர் - பொறுப்பவர்
பொறை - பொறுமை

அழுக்காறாமை 17

விழுப்பு - சிறப்பு
அன்மை - இல்லாமை
செய்யவள் - திருமகள்
ஏதம் - துன்பம்
தவ்வை - தமக்கை(அக்காள்)
திருச்செற்று - செல்வத்தைக் கெடுத்து (திரு - செல்வம்)

வெஃகாமை 18

வெஃகின் - விரும்பின்
பொன்றி - கெடுத்து
புலம் - ஐம்புலன்(மெய், வாய், கண், மூக்கு, செவி)
புன்மை - குற்றம்
இறல் - அழிவு
விறல் - வெற்றி
செருக்கு - செல்வம்


புறங்கூறாமை 19


தேற்றாதவர் - அறியாதவர்
துன்னியார் - நெருங்கிய நண்பர்
ஏதிலார் - அயலார்
பொறை - பாரம்

பயனில சொல்லாமை 20

பல்லார் - பலர்
முனிய - வெறுக்க
எள்ளப்படும் - இகழப்படும்
நட்டார் - நண்பர்
பாரித்து - விரித்து
பதடி - பதர்
மருள் - மயக்கம்
மாசு - குற்றம்
பொச்சாந்தும் - மறந்தும்

தீவினையச்சம் 21

விழுமியார் - மேலோர்
பயத்தல் - தருதல் (பயக்கும் - அளிக்கும்)
செறுவார் - வருத்துவோர்
சூழற்க - எண்ணாதிருக்க (சூழும் - எண்ணும்)
வீயாது - நீங்காமல்
அடும் - கொல்லும்
வீயாது - விடாது வந்து
துன்னற்க - செய்யாதிருக்க

ஒப்புரவு அறிதல் 22

கடப்பாடு, ஒப்புரவு - உபகாரம்
கைம்மாறு - பிரதியுபகாரம்
தாளாற்றி - முயற்சி செய்து
புத்தேள் உலகம் - தேவருலகம்
ஊருணி - ஊர் மக்கள் நீரருந்தும் குளம்
ஒல்கார் - தளரார்

ஈகை 23


வைப்புழி - வைக்குமிடம்
மரீஇயவனை - பழகியவனை
வன்கணவர் - அருளிலாதவர்
தமியர் - தனித்தவர்
இயையா - இயலாத

புகழ் 24

பொன்றாது - அழியாது
சாக்காடு - மரணம்
நத்தம் - பெருக்கம்
யாக்கை - தேகம், உடல்
இசை - புகழ்
வசை - பழிச் சொல்

அருள் உடைமை 25

பூரியார் - இழிந்தவர்
அல்லல் - துன்பம்
வளி - காற்று
மல்லல் - வளமான
மா - பெரிய
கரி - சான்று
தெருளாதான் - ஞானமில்லாதவன்

புலால் மறுத்தல் 26

ஊண் - உடல்
கோறல் - கொல்லுதல்
அளறு - நரகம்
அண்ணாத்தல் - வாய் திறத்தல்
தலைப்பிரிந்த - நீங்கிய
வேட்டல் - யாகஞ்செய்தல்

தவம் 27

நோன்றல் - பொறுத்தல்
உறுகண் - துன்பம்
அவம் - வீண்,கேடு
துப்புரவு - உணவு, மருந்து, உறைவிடம்
ஒன்னார் - பகைவர்
தெறல் - கெடச்செய்தல்
கூற்றம் - யமன்

கூடாவொழுக்கம் 28

படிற்றொழுக்கம் - மறைந்த ஒழுக்கம்( பொய்யான நடத்தை)
அகம் - உள்ளம்
நிலைமையான் - இயல்புடையவன்
பெற்றம் - பசு
புள் - பறவை
சிமிழ்த்தல் - பிடித்தல்
அற்று - உவமஉருபு(போன்றது, ஒத்தது)
எற்றெற்றென்று - (எற்று +எற்று+என்று) என்ன செய்தோம், என்ன செய்தோமென்று
வன்கணார் - கொடியவர்(இரக்கமில்லாதவர்)
மாசு - குற்றம்
மாந்தர் - மக்கள்
கணை - அம்பு
செவ்விது - செம்மையானது
ஆங்கு - அவ்வகையே

கள்ளாமை 29

எனைத்தொன்றும் - எத்தகைய பொருளையும்
உள்ளல் - எண்ணுதல்
விழுமம் - துன்பம்
பொச்சாப்பு - சோர்வு
கார் - இருள்
கரவு - வஞ்சனை
வீவர் - கெடுவர்
தேற்றாதவர் - அறியாதவர்
தள்ளும் - தவறிப்போகும்
புத்தேள் உலகு - தேவருலகம்

வாய்மை 30

புரைதீர்ந்த - குற்றமில்லாத

வெகுளாமை 31

வெகுளி - சினம் (கோபம்)
ஏமம் - பாதுகாவல்
புணை - தெப்பம்
இணர் - பல சுடர்களையுடைய
தோய்வன்ன - தழுவினாற் போன்ற
புணரின் - கூடுமாயின்
உள்ளான் - நினையான்

இன்னா செய்யாமை 32

இன்னா - துன்பம்
கோள் - கொள்கை
மறுத்து - மீண்டு
உய்யா - மீளா
விழுமம் - துன்பம்
ஒறுத்தல் - தண்டித்தல்

கொல்லாமை 33

கோறல் - கொல்லுதல்
ஓம்புதல் - காப்பாற்றுதல்
புலைவினையர் - இழிதொழிலார்
செயிருடம்பு - நோயுடம்பு

நிலையாமை 34

புல்லறிவு - அற்ப அறிவு
கடை - இழிவு
குழாத்து - கூட்டம் கூடுதல்
விளிந்தது - கலைந்து போகுதல்
அற்கா - நிலையில்லாத
ஈரும் - அறுக்கும்
நாச்செற்று - நாவை அடக்கி
விக்குள் - விக்கல்
நெருநல் - நேற்று
குடம்பை - கூடு
சாக்காடு - மரணம்
புக்கில் - நிலையான இருப்பிடம்
துச்சில் - ஒதுக்கிடம்

துறவு 35

ஈண்டு - இப்பிறப்பில்
மயலாகும் - மயக்கத்துக்கு ஏதுவாகும்
செருக்கு - மயக்கம்
தலைப்பட்டார் - முக்தியடைந்தவர்
மற்று - பற்றுகள் அறாதபொழுது

மெய் உணர்தல் 36

மருளான் - அறிவு மயக்கம்
மாணா - மாட்சிமையற்ற
பயம் - பயன்
ஈண்டு - இம்மை
பேதைமை -அறியாமை

அவா அறுத்தல் 37

அவா - ஆசை
ஆண்டு - மேலுலகம்
தவாவினை - நல்வினை
தவாது - முடிவில்லாமல்
ஆரா - நிறைவுறாது
பேரா - நிலையான

ஊழ் 38

அசைவின்மை - முயற்சி
ஊழ் - பழவினை
அகற்றும் - விசாலப்படுத்தும்
திரு - செல்வம்
தெள்ளியர் - அறிவுடையோர்
பரியினும் - வருந்திக் காப்பாற்றினாலும்
பால் - ஊழ்

இறைமாட்சி 39

கூழ் - பொன், உணவு
எஞ்சாமை - குறைவின்றி
மீக்கூறுதல் - உயர்த்திச்சொல்லல்
கண்டனை - (வேண்டாமெனத்) தள்ளுதல்
கைப்ப - அலங்காரமான

கல்லாமை 41

அரங்கம் - ஆடுமிடம்
வட்டாடுதல் - சூதாடுதல்
ஒட்பம் - அறிவு
கழிய - மிகவும்
தகைமை - உயர்வு
மாத்திரையார் - அளவுடன் இருப்பவர்
பாடு - பெருமை
அனையர் - ஒப்பர்
இலங்க - விளங்க

கேள்வி 42

அவி உணவு - வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் உணவு, அவிர்பாகம

ஒற்கம் - தளர்ந்த, வறுமை
இழுக்கல் - வழுக்கல்
உழி - நிலம்
ஈண்டிய - செறிந்த
தோட்கப்படாத - துளைக்கப்படாத
நுணங்கிய - நுட்பமாகிய
இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆய்ந்தறிந்து
அவிதல் - ஒழிதல்

அறிவுடைமை 43

அற்றம் - அழிவு
ஒரீஇ - விலக்கி
தழீஇ - தழுவுதல்
ஒட்பம் - அறிவு
கூம்பல் - சுருங்குதல்

குற்றம் கடிதல் 44

பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை
இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
இறை - அரசன்
அற்றம் - அழிவு
வைத்தூறு - வைக்கோல்
உயல் - இருத்தல்
வியவற்க - மதியாதிருக்க
நயவற்க - விரும்பாதிருக்க
காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்

பெரியோரைத் துணைக்கோடல் 45

கேண்மை - நட்பு
பெற்றியார் - தன்மையுடையவர்
சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்
செற்றார் - பகைவர்
ஏமரா - காவலற்ற
பெற்றியார் - தன்மையுடையவர்
உறாமை - வாராதபடி

சிற்றினம் சேராமை 46

தூவா - பற்றுக்கோடு, சார்பு

தெரிந்து செயல்வகை 47

இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம்
வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப்படும் - தவறாக முடியும்

வலியறிதல் 48

ஒல்வது - இயன்றது
முரிந்தார் - முடியாது நின்றார்
ஆங்கு - அயலார்
பெய் - ஏற்றுதல்
சாகாடு - வண்டி
சால - மிகவும்
இட்டிது - சிறியது
வல்லை - விரைந்து

காலமறிதல் 49

ஆர்க்குங் கயிறு - கட்டும் கயிறு
கருவி - காரணம்
தகர் - செம்மறி ஆட்டுக் கிடா
பொள்ளென - விரைவுக்குறிச் சொல் (எ-கா பொள்ளென விடிந்து விட்டது)
வேர் - சினம்
ஒள்ளியவர் - அறிவுடையவர்
சீர்த்த - வாய்த்த

இடனறிதல் 50

மொய்ம்பு - வலிமை
ஆற்றார் - அறிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து
துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்
அடும் - கொல்லும்

தெரிந்து தெளிதல் 51

ஆசு - குற்றம்
வெளிறு - அறியாமை
ஓம்புக - தவிர்த்திடுக (ஓம்பல் - காத்தல்)
காதன்மை - அன்புடைமை
கந்தா - வழியாக, அடிப்படையாக

தெரிந்து வினையாடல் 52

உற்றவை - தடைகள்

சுற்றம் தழால் 53

மருங்கு - நெருங்கிய, உடன் இருத்தல்

பொச்சாவாமை 54

இறந்த - அடங்காத
பொச்சாப்பு - மறதி
நிச்ச - நாள்தோறும்
நிரப்பு - இரந்து
இழுக்கு - மறதி
மைந்து - வலிமை
உள்ளியது - எண்ணியது, குறிக்கோள்

செங்கோன்மை 55

கண்ணோடாது - இரக்கப்படாமல்
இறைபுரிந்து - அனைவருக்கும் பொதுவாக, நடுநிலையாக
உளி - விதிமுறை
தொக்கு - சேர்ந்து, கூடி
முட்டா - முட்டாது, தடை இல்லாமல்

கொடுங்கோன்மை 56

சூழாது - எண்ணாது
கூழ் - செல்வம்
எற்று - எவ்வாறு
அற்று - அவ்வாறு
உறை - பருவ மழை
ஒல்லாது - பொருந்தாது
ஆ - பசு
அறுதொழிலோர் - ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் ஆகிய ஆறுவகையான தொழில் செய்வோர்

வெருவந்த செய்யாமை 57

வருவந்த - அஞ்சத்தக்க
ஒருவந்தம் - உறுதியாக
செவ்வி - காலம்
செரு - பகை
சிறை - காவல்
பொறை - சுமை

கண்ணோட்டம் 58

கண்ணோட்டம் - இரக்கம்

ஒற்றாடல் 59

இறந்த - புக இயலாத

ஊக்கமுடைமை 60

ஒல்கார் - தளராதவர்
உரவோர் - ஊக்கமுடையோர்
பரியது - பெரியது
கோட்டு - கொம்பு
வெரூஉம் - வெருளும்
வெறுக்கை - மிகுதி

மடியின்மை 61

மடி - சோம்பல்
மாசூர - மாசு ஊர
மாசு - இருள்
ஊர - அடர
மாண்ட - சிறந்த

ஆள்வினையுடைமை 62

அசாவாமை - அசராமல்
ஓம்பல் - ஒழித்தல்
தாள் - முயற்சி

அமைச்சு 64

ஆன்ற - நிறைந்த
தெவ்வோர் - பகைவர்
திறப்பாடு - செயல்திறன்

சொல்வன்மை 65

ஞாலம் - உலகம்
இணர் - கொத்து
ஊழ்த்தும் - மலர்ந்திருந்தும்

வினைத்தூய்மை 66

ஒருவுதல் - ஒழித்தல்
ஆதும் - மென்மேலும் உயர்தல், மேலாகக் கடவோம்
மாழ்கும் - கெடுதற்குக் காரணமாகும்
ஓதல் - ஒழித்தல்
இளி - இழிவு
கழிநல்குரவு - மிகுந்த வறுமை
கடிந்த - நீக்கிய
கடிந்து ஓரார் - விலக்கார்
பீழை - துன்பம்
இரீஇ - காத்தல்

வினைத்திட்பம் 67

கொட்கின் - வெளிப்படுமாயின்
ஏற்றா - தீராத
வீறு - சிறப்பு
உறவரினும் - மிகவரினும்

வினைசெயல்வகை 68

தெறும் - கெடுக்கும்
நனைகவுள் - நனைந்த கன்னமுடைய யானை


தூது 69

தொகச்சொல்லி - தொகுத்துச்சொல்லி
தூவாத - இன்னாத
நகச்சொல்லி, செலச்சொல்லி - மனமகிழச்சொல்லி
வடுமாற்றம் - தாழ்வான வார்த்தை
வன்கணவன் - வலிமையுடையவன்
இறைவன் - மன்னன்

மன்னரைச்சேர்ந்தொழுகல் 70

இகல் - மாறுபடும் இயல்புடைய
மன்னிய - நிலைப்பெற்ற
போற்றல் - காத்தல்
கடுத்தபின் - சந்தேகித்த பின்
தேற்றல் - தெளிவித்தல்
அவித்து - நீக்கி
ஆன்ற - நிறைந்த
ஓரார் - கேளாமல்
மறை - ரகசியம்
வேட்பன - விரும்புவன
எஞ்ஞான்றும் - எந்த நாளும்
இனையர் - இளையவர்
இனமுறையர் - இன்ன முறையினர்
துளக்கற்ற - அசைவற்ற
கெழுதகைமை - உரிமை

குறிப்பறிதல் 71

கடுத்தது - சினந்தது
முதுக்குறைந்தது - அறிவுமிகுந்தது
உவப்பு - மகிழ்ச்சி

அவை அறிதல் 72

முந்து - முற்பட்டு
கிளவா - சொல்லாத
செறிவு - அடக்கம்
வியன்புலம் - விரிந்த நூற்பொருள்
பொச்சாந்தும் - மறந்தும்
செல - மனங்கொள்ள
அங்கணம் - முற்றம்
உக்க - வீழ்ந்த
கோட்டிக் கொளல் - சொல்லாதிருத்தல்

அவை அஞ்சாமை 73

என் - என்ன
ஒள்வாள் - கூரிய வாள்( ஒளிபொருந்திய வாள்)
களன் - சபை
செல - ஏற்க

நாடு 74

பெள் - விருப்பம்
பெட்டக்க - விரும்பத்தக்க( பெள்+தக்க)
இறை - வரி

பொருள் செயல் வகை 76

இருள் - துன்பம்
தேயம் - இடம்
ஒன்னார், புல்லார் - பகைவர்
உல்கு - தீர்வை
தெறு - திறை, வரி
ஒள்பொருள் - நல்வழியில் வந்த சிறந்த பொருள்
காழ்ப்ப - மிகுதியாக

படைமாட்சி 77

உவரி - கடல்
தானை - சேனை
அடல் - போர்க்குணம்

படைச்செருக்கு 78

என்னை - (என்+ஐ) என் தலைவன்
ஐ - தலைவன்
தெவ்விர் - பகைவர்
எஃகு - கூர்மை, நுண்ணிய, சிறப்பு
ஒட்டு - அற்பம்
யாப்பு - கட்டுதல், அணிதல்
காரிகை - பெண், அழகு

நட்பு 79

நவில் - கற்றல்
கிழமை - உரிமை
அவை - உலக நடைமுறைக்கு மாறாக, தீய வழி
உழப்பது - படுவது, துய்ப்பது
கொட்பு - வேறுபாடு, எல்லை
ஒல்லும் வாய் - எல்லைவரை, இயன்ற வரை

நட்பு ஆராய்தல் 80

இனன் - சுற்றம்
ஊதியம் - பேறு
அடு - அழிதல்
காலை - பொழுது
மருவு - தழுவு
ஒருவு - தவிர்

பழைமை 81

கீழ்ந்திடா - சிதைந்திடாத

தீ நட்பு 82

அமரகத்து - போர்க்களத்து
கல்லாமா - கல்லா+மா - கல்லாத விலங்கு
ஏதின்மை - பகைமை
குறுகுதல் - குறைதல்
ஓம்பல் - தவிர்த்தல்

கூடா நட்பு 83

நேரா - கூடாமல், நிகழாமல்
நிரந்தவர் - கூடியவர்
மாணார் - சிறப்பில்லாத பகைவர்
ஒட்டார் - பகைவர்
ஒல்லை - விரைவில்

பேதைமை 84

பேதைமை - அறிவிலி, அறியாமை
காதன்மை - ஆசை
நார் - அன்பு
புனை - தளை, கால் விலங்கு
மையல் - மனநிலை தவறியவன், பித்தன்
பீழை - துன்பம், வருத்தம்
கழாஅ - கழுவாத
பள்ளி - படுக்கை

இகல் 86

பாரிக்கும் - வளர்க்கும்
இகல் - மாறுபாடு
தவல் - அழிவு
தாவில் விளக்கம் - கெடுதலில்லா புகழ்
மிகல் ஊக்கும் - வெல்ல நினைக்கும்
நகலான் - நட்பில்

பகைமாட்சி 87

செறு - வெற்றி
இகவா - நீங்கா
சேண் - உயர்வுள்ள
வெகுளும் - பகைக்கும்

பகைத்திறம் தெரிதல் 88

ஏமுற்றவர் - பித்துப் பிடித்தவர், பித்தன்
தமியன் - தனித்தவன்
காழ்த்த - முதிர்ந்த

உட்பகை 89

தமர் நீர - தழுவ வேண்டிய சுற்றத்தாரின் இயல்புகள்
பொன்றாமை - இறவாமை
பொருத - தேய்க்கப்பட்ட
பகவு - பிளவு
குடங்கருள் - குடிசைக்குள்

பெண்வழிச்சேறல் 91

இமையார் - தேவர்
பாடிலர் - ஆண்மையற்றவர்
நட்டார் - நண்பர்

வரைவில் மகளிர் 92

தகை - ஆடல் பாடல்
செருக்கி - களித்து, மகிழ்ந்து
பூரியார் - கீழ்மக்கள்
கவறு - சூது

கள்ளுண்ணாமை 93

உட்கம் - அச்சம்

சூது 94

ஆறு - வழி
ஆயம் - ஆதாயம்
ஓவாது - இடைவிடாது
சீர் - புகழ்
கழகம் - களம்(ஆடுமிடம்)
தருக்கி - மேற்கொண்டு
இவறியார் - கைவிடாதவர்
அகடு - வயிறு
ஆரார் - நிறைவுபெறார்
அல்லல் - துன்பம்
முகடி - மூதேவி
ஆயம் - சூது

- இவ்வதிகாரத்தில் 'ஆயம்' என்னும் ஒரே சொல் இருவேறு அர்த்தங்களைக் கொண்டு வருவதைப் பாருங்கள். அதன் அருகிலுள்ள மற்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மருந்து 95

வளி முதலா மூன்று - வாதம், பித்தம், சிலேத்துமம்
அற்றல் - சீரணித்தல்

குடிமை 96

இழுக்கு - தவறுதல்
சலம் - வஞ்சனை
சால்பு - மேன்மை
விசும்பு - வானம்
மறு - களங்கம்
நார் - அன்பு

மானம் 97

பேராண்மை - மானம்
குன்று - சிறிய மலை
குன்றுதல் - குறைதல்
குன்றி - குன்றி மணி (குண்டு மணி), நுண்ணிய அளவு
பீடு - வலிமை, பெருமை

பெருமை 98

ஒளி - புகழ்
ஆற்றுதல் - செய்தல்
ஆறு - வழி
இறப்பு - மிகுதி
அற்றம் - கெடுதல், குறைகள்

சான்றாண்மை 99

கடன் - கடமை
துலையார் - தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்
ஊழி - உலகம் நீரில் அமிழ்தல்
ஆழி - கடல்

பண்புடைமை 100

எண்பதம் - எளியவராய் இருத்தல்
வெறுத்தக்க - நெருங்கத்தக்க
நயன் - நீதி

நன்றியில் செல்வம் 101

ஈட்டம் - பொருளீட்டல்
இவறி - ஆசைப்பட்டு
இசை - புகழ்
ஏதம் - நோய்
தமியள் - தனியாய் இருப்பவள்
துனி - வறுமை

நாணுடைமை 102

திரு நுதல் - அழகிய நெற்றி
மரப்பாவை - மரப்பாச்சி பொம்மை

குடிசெயல் வகை 103

துவ்வுதல் - நீங்குதல் (துவ்வா என்பதன் எதிர்ப்பதம்)
மடி - ஆடை
அமரகம் - போர்க்களம்
வன்கண்ணார் - வலிமை மிகுந்தவர்

உழவு 104

உழந்து - வருந்தி
அலகு - கருவி, ஆயுதம்
கரவாது - மறைக்காது
மாலை - இயல்பு
தொடிப்புழுதி - ஒரு வகை அளவு முறை
உணக்கல் - உலர்த்துதல்
கிழவன் - உரிமையாளன்
புலந்து - வெறுத்து

நல்குரவு 105

தொல்வரவு - பழைய உறவு
தோல் - சொல்
நசை - ஆசை
நல்கூர்ந்தார் - வறியவர்
நெருநல் - நேற்று
நிரப்பு - வறுமை
கண்பாடு - தூக்கம்
துவற - முழுமையாக
காடி - கஞ்சி

இரவு 106

கரப்பு - மறைத்தல்
கரி - சான்று

இரவச்சம் 107

அடுபுற்கை - சிறு அரிசிக் கஞ்சி
ஏமாப்பு இல் - காவலற்ற
பக்கு - பிளந்து

கயமை 108

அகப்பட்டி - உள் அடங்குவர், தம்மினும் கீழோர்
கொடிறு - கன்னம், கதுப்பு

தகையணங்குறுத்தல் 109

அணங்கு - பெண்
கொல் - தெய்வம்
மாதர் - மானுடப்பெண்
மாலும் - மயங்கும்
தானை - சேனை
பண்டு - கண்டு
கூற்று - எமன்
தகையால் - குணங்கள்
பேரமர் - பெரிய வாய்
கட்டு - கண்கள்
அமர்த்தன - மாறுபட்டிருந்தன
கோடம் - வளைவு; கோடா - வளையாமல்
அஞர் - துயர்
கடாக்களிறு - மத யானை
கட்படாம் - முகப்படாம்
துகில் - ஆடை
ஒண்ணுதற் - ஒளி பொருந்திய நெற்றி(ஒள்+நுதல்)
ஞாட்பு - போர்க்களம்
நண்ணார் - எதிர்த்தவர்
உட்கும் - அஞ்சுவதற்கு ஏதுவாகும்
அடு நறவு - காய்ச்சப்பட்ட மது

குறிப்பறிதல் 110

செம்பாகம் - சரிபாதி
இறைஞ்சினாள் - நாணித் தலை குனிந்தாள்
அட்டிய - வார்த்த
உறாதவர் - அயலார்
செறார் - பகையாதவர்
ஒல்லை - விரைந்து
அசையியற்கு -மெல்லிய சாயலையுடையவளுக்கு
ஏர் - அழகு
பசையினள் -இரங்கினள்


புணர்ச்சி மகிழ்தல் 111

தெறும் - சுடும்
குறுகும் - நெருங்கும்
யாண்டு - எவ்வுலகில்
வேட்ட - விரும்பிய
தோடு - மலர்
கதுப்பினாள் - கூந்தலையுடையவள்
போழப்படா - இடையறுக்கப்படாத
முயக்கு - புணர்ச்சி
செறிதோறும் - புணரப்புணர
சேயிழை - செம்பொன் ஆபரணம்
மாட்டு - பெண்

நலம் புனைந்துரைத்தல் 112

மையாத்தி - மயங்குகின்றாய்
முறி - தளிர் வண்ணம்
முறுவல் - பல்
முத்தம் - முத்து
வெறிநாற்றம் - இனிய மணம்
வேய் - மூங்கில்
மாண் - மாட்சிமை
பெய்தாள் - சூடினாள்
நுசுப்பு - இடை
படாஅ - ஒலியா

காதல் சிறப்புரைத்தல் 113

வீழும் - விரும்பும்
கரப்பாக்கு - மறைதல்
ஏதிலர் - அன்பற்றவர்

நாணுத்துறவுரைத்தல் 114

மடலேறுதல் - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை
பண்டு - முன்பு
படல் - உறக்கம்
மறுகில் - வீதியில்
மருண்டு - மயங்கி
மறுகும் - சுற்றுகின்றது(திரிகின்றது)

அலர் அறிவுறுத்தல் 115

அலர், கவ்வை, கௌவை - பழிச்சொல்
தவ்வென்னும் - சுருங்கிப் போகும்

பிரிவாற்றாமை 116

பார்வல் - பார்வை
ஓம்பு - காப்பாற்று
நசை - ஆசை
துறைவன் - தலைவன்
தூற்றாகொல் - அறிவியாவோ
இறவா - கழலா நின்ற
இனன் - தோழியர்

படர் மெலிந்து இரங்கல் 117

காவா - காவடித் தண்டு
துப்பு - துன்பஞ்செய்தற்குரிய பகைமை

கண் விதுப்பு அழிதல் 118

அஞர் - துன்பம்

பசப்புறு பருவரல் 119

கொண்கன் - தலைவன்

தனிப்படர் மிகுதி 120

காழ் - வித்து
கா - காவடி
பருவரல் - நோய்
பைதல் - துன்பம்

பொழுதுகண்டு இரங்கல் 123

அழல் - நெருப்பு
பைதல் - நோய்

உறுப்பு நலன் அழிதல் 124

சேண் - தூரம்
பசந்து - நிறம் வேறுபட்டு
தணந்தமை - பிரிந்தமை
தொல்கவின் - பழைய அழகு
பணை - பெருமை
பைந்தொடி - வளையல்
போழ - நுழைந்த
பருவரல் - துன்பம்

நெஞ்சோடு கிளத்தல் 125

சேறி - செல்
செற்றார் - வெறுத்தவர்
உற்று - விரும்பி
உழை - இடம்

நிறையழிதல் 126

கணிச்சி - உளி
யாமம் - இரவு
மன்று - பொதுவில்
செற்றார் - விலகியவர்
எற்று - எத்தகையது
பெட்ப - விரும்பியவை
புலப்பல் - பிணங்குதல்
பில்லினேன் - தழுவுதல்
நிணம் - நெய், கொழுப்பு

அவர்வயின் விதும்பல் 127

சேண் - தொலைவு
இலங்கிழாய் - ஒளிவீசும் அணி
கலன் - தோளில் அணியும் நகை
காரிகை - பெண், அழகு
கொண்கன் - தலைவன்
பசப்பு - பசலை நோய்(பிரிவுக் காலத்தில் மகளிரின் அழகைக் குன்றச் செய்யும் நோய்)

குறிப்பு அறிவுறுத்தல் 128

கரத்தல் - மறைத்தல்
கையிகந்து - கைமீறி
ஒல்லா - உடன்படாமல்
உண்கண் - மை எழுதிய கண்கள்
காம்பு - மூங்கில்
ஏர் - ஒத்த
முகை - அரும்பு
தொடி - வளையல்
நெருநல் - நேற்று

புணர்ச்சி விதும்பல் 129

பேணல் - மதித்தல்
பெட்பு - விருப்பம்
துனிதல் - வெறுத்தல்
புல்லுதல் - புணர்தல்
விதுப்பு - விரைதல்

நெஞ்சோடு புலத்தல் 130

உறாதவர் - விரும்பாதவர்
செறு - சினம்
சேறி - போகிறாய்
சூழ்வார் - கலந்து பேசுபவர்
துனி - வெறுத்து
துவ்வாய் - துய்க்க மாட்டாய்
உறா - நீங்காத
தஞ்சம் - எளிது
ஏதிலார் - அந்நியர்

புலவி 131


அலந்தார் - அழிந்தவர்
ஏர் - அழகு
வீழுநர் - அன்புடையவர்
உணங்க - வாட

புலவி நுணுக்கம் 132

கோட்டுப் பூ - வளைந்த மாலை
செறுப்ப - அடக்குதல்

ஊடல் உவகை 133

முயங்க - வியர்க்க

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த இடுகையில் இருந்து ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தொடுப்புகள் கொடுத்தால் பதிவில் இலகுவாக உலாவப் பயன்படும்

தமிழ் said...

ரொம்ப நாளாச்சு, வேலை நிமிர்த்தமாக...

கண்டிப்பாக, தாங்கள் கூறியதை விரைவில் தர முயற்சிக்கிறேன்.

நன்றி

பனித்துளி சங்கர் said...

ஆஹா மிகவும் அருமையான பதிவு !
அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !

Radhakrishnan said...

பிரமிப்பு :)