Tuesday, June 17, 2008

வெண்பா - துவக்கப்படி

முன்பு கல்லூரி நண்பர்கள் குழுமத்தில் இட்ட மின்னஞ்சல் கீழே தருகிறேன்.

வெண்பா இலக்கணம் எளிதான ஒன்று. நீ சொன்ன 'rhythamic' அந்த இலக்கணத்தின் படி எழுதுனா தன்னால வந்துரும், பெரும்பாலும். அதை செப்பலோசைன்னு சொல்றாங்க.

இப்ப முதல் பாடமா ஒரு செய்யுளின் அடிப்படையை பாக்கலாம். அசை என்னும் உறுப்புதான் அந்த அடிப்படை. (எங்கயாவது தப்பு விட்டுருந்தேன்னா, தெரிஞ்சவங்க குட்டுங்க)

இரண்டு அசைகள் உண்டு. நேரசை, நிரையசை.
தனிக்குறில், தனி நெடில் நேரசை எனப்படும். அடுத்தடுத்து வரும் குறில், குறில் தொடர்ந்த நெடில் நிரையசை. புள்ளி வைத்த எழுத்துக்களுக்கு அசை மதிப்பு கிடையாது.

இப்ப சில காட்டுகளைப் பாக்கலாம்.
நேர், பார், ஏ, நீ - நேரசை - தனிநெடில், புள்ளியைத் தவிர்க்கலாம்.
குறில், அவர், இடு, அணல் - நிரையசை - குறில் தொடர்ந்து வருகிறது
நிரை, இசை, (கூ)வுமே - நிரையசை - குறில் தொடர்ந்த நெடில் (ஐகாரக்குறுக்கம்? எடுத்துக் காட்டுறதுக்குள்ள கண்ணைக் கட்டுது ;-)

அசைகள் தனித்தோ, சேர்ந்தோ வந்தால் சீர் எனப்படும். பெரும்பாலும் ஒரு சொல்லை ஒரு சீராகக் கொள்ளலாம்.

சுங்கம் தவிர்க்கவா சுட்டினேன்? இந்தத் தொடரில் மூன்று சீர்கள் உள்ளன. அவற்றை கீழ்வருமாறு அசை பிரிக்கலாம்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்?
நேர்/நேர் நிரை/நிரை நேர்/நிரை

இந்த சீர்களை நினைவில் வைத்துக் கொள்ள இன்னொரு உத்தி உண்டு.
நேர்நேர் - தேமா (தே/மா)
நேர்நிரை - கூவிளம்(கூ/விளம்)
நிரைநேர் - புளிமா(புளி/மா)
நிரைநிரை - கருவிளம்(கரு/விளம்)
நேர்நேர்நேர் - தேமாங்காய்(தே/மாங்/காய்)
நிரைநேர்நேர் - புளிமாங்காய்(புளி/மாங்/காய்)
நிரைநிரைநேர் - கருவிளங்காய்(கரு/விளங்/காய்)
நிரைநேர்நேர் - கூவிளங்காய்(கூ/விளங்/காய்)

குறிப்பு - வெண்பாவில் கனிச் சீர் (தேமாங்கனி முதலியவை) மற்றும் நாலசைச் சீர்கள் வராது. எனவே தவிர்த்திருக்கிறேன்.

தேமாவும், புளிமாவும் பொருளற்ற குறிச்சொற்கள். ஒரு சீரை அடையாளம் காண உதவும், அவ்வளவே. எப்படி அடையாளம் காட்டுகிறது?

தேமாவைப் பிரித்தால் தே/மா, நேர் நேர் - அவ்வளவு தான். அதுபோலவே மற்ற சீர்ப் பெயர்களும். முழுப்பாடலையும் கீழே இவ்வாறு அசை/சீர் பிரித்திருக்கிறேன், சரி பாருங்கள்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்? அன்/பர்/கள்
நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர்
தேமா கருவிளம் கூவிளம் தேமாங்காய்

சங்/கம் கவ/னிக்/கத் தான்/தந்/தேன் - வெண்/பா
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா

விளை/யா/டி ஒன்/றிட/வே, நண்/பா/வுன் அஞ்/சல்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா

விதை/யா/கக் கொண்/டேன் நான்.
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்

இப்ப அசை பிரிச்சாச்சா? இனி வெண்பா வாய்ப்பாடு பாத்தோம்னா எளிதா இருக்கும்.

மா முன் நிரை - மாவில் முடியும் சீருக்கு அடுத்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

தேமா, புளிமாவைத் தொடர்ந்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

விளம் முன் நேர் - விளத்தில் முடியம் சீருக்கு அடுத்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

கருவிளம், கூவிளத்தை தொடரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

காய் முன் நேர் - காய்ச்சீருக்கு அடுத்த சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் சீர்களைத் தொடரும் சீர்

இதுதான் அந்த வாய்ப்பாடு. இப்படி எளிதாக நினைவில் வைக்கத்தான் தேமா, புளிமான்னு குறிச்சொற்கள்.

இந்த வாய்ப்பாடு பொருந்தும் படி நான்கு சீர் கொண்ட மூன்றடிகளும், நாலாவது அடியில் மூன்று சீரும் அமைய எழுதினால் வெண்பா எழும்.

ஈற்றடி, ஈற்றுச்ச்சீருக்கு தனி வாய்ப்பாடு உண்டு. (இறுதி அடி, இறுதிச் சொல்)
ஒரசையில் முடிய வேண்டும்.

கீழ்க்கண்ட அசைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நேரசை - நாள், நான், தேன், தா, நீ
நிரையசை - மலர், அவன், அது
நேர்பு - காசு, அன்பு, பண்பு, (உகரம் தொடர்ந்து வரும் நேரசை)
நிரைபு - பிறப்பு, உறுப்பு, தவிப்பு, தொடர்பு, உவந்து, அறிவு (உகரம் தொடர்ந்து வரும் நிரையசை)

அடிப்படை அவ்வளவுதான். இன்னும் சில நுண்குறிப்புகள் உண்டு.

அடிதோறும் எதுகை, முற்சீர், மூன்றாம் சீரில் மோனை (முதல் எழுத்து ஒன்றுதல்) , இரண்டாம் அடி ஈற்றுச்சீர்(தனிச்சொல்) முதற் சீருக்கு எதுகையாக அமைதல் (மேற்கண்ட பாடலில் உள்ளது போல - நேரிசை வெண்பா)
நேரிசை வெண்பா (இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும் மேலே உள்ள பாடல்), இன்னிசை வெண்பா பிரிவுகள் உண்டு.

குறள் வெண்பா (இரண்டடி), சிந்தியல் வெண்பா (மூன்றடி), பஃறொடை வெண்பா (நான்கடிக்கும் அதிகமாக) வகைகள் உண்டு. ஆனால் அனைத்திற்கும் மேலே சொன்ன அடிப்படை பொருந்தும்.

வெண்பாவில் பெரும்பாலும் தனிப் பாடல்கள் தாம் இயற்றப் பட்டுள்ளன. முழுவதும் வெண்பாவிலேயே பாடப் பட்ட காவியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா. 'வெண்பாவிற்கோர் புகழேந்தி' என்றே அவரது பெயர்!

என்பால் இயன்ற(து) எடுத்தே இயம்பினன்
வெண்பா எழுதவே ஆவலர் யார்உளர்
உன்பால் எழுந்திடும் ஐயம் இருந்திடில்
பண்பாய் அவையில் மொழி.

* இதுதாங்க இன்னிசை வெண்பா! இரண்டாவது அடியில் தனிச்சொல் பெறாமல் எதுகை அமைந்து வருவது.

* என்பால் இயன்ற தெடுத்தே இயம்பினன் - அப்படின்னு தான் இருக்கணும். படிக்க வசதியா இது மாதிரி அடைப்புக்குள் பிரிச்சு எழுதுவாங்க.

நண்பர்களுக்கான குறிப்பை இடுகையாப் போட அச்சமாத்தான் இருக்கு. தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பதால் துணிகிறேன்.