Monday, August 25, 2008

மீண்டும் பொன்னியின் செல்வன்

நான் எதோ பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எழுத போறதா நினைத்து தலைப்பை பாத்து வந்தா தயவு செய்து வேற பக்கம் போய்டுங்க... இல்லை நேரம் போகலை எந்த கர்மத்தையாவது வாசிக்கலாம்னு நினைச்ச இந்த கர்மத்தை வாசிங்க

(ராஜாதி ராஜா வான ராஜ ராஜ சோழனும் அவரது மகனும் ராஜேந்திர சோழனும் தங்களுடைய சந்ததிகள் எப்படி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்று பார்வை இட இப் பூமிக்கு மறுபடி வருக்கிறார்கள்

அவர்கள் தம் முப்பாட்டனார் கரிகால சோழன் கட்டிய உலகில மிக பழமையான கல் அணைக்கு வருகிறார்கள், வந்தவர்கள் தங்கள் சம்பாசனைகளை இவ்வித மாக தொடக்குகிறார்கள்)

அப்பா நம் பாட்டனார் கட்டிய அணை எவ்வளவு கம்பிராமாக துளி அளவும் சேதம் இல்லாமல் இருக்கிறது

ம்ம்ம்.. நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்

அப்பா இடை பட்ட கால சுழற்சியில் எவளோவோ மாற்றங்கள் இன்றும் நம் புகழ் பறை சாற்றி கொண்டு இருக்கிறது.நம் மக்களின் வாழ்கை தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது

ஏதும் வியப்பாக இல்லை ராஜேந்திரா...நாம் இருந்த காலத்திலேயே இந்த பூங்கா அடர்ந்த காடுபோல இருக்கும், ஆனால் இன்று பூங்கா என்ற பெயரில் ஒரு சில மரங்களை தான் பார்க்க முடிகிறது.இந்த அணையின் நீர்மட்டம் ஒரு நாளும் குறைந்ததில்லை, இப்பொது தண்ணிர் இருபதே தெரிய வில்லை.நாம் குதிரை படைகள்,காலால் படைகள் மற்றும் யானை படைகள் நடந்து செல்ல அமைத்த சாலைகள் அப்படியே இருக்கிறது.மக்களின் நடை உடை பாவனைகளில் இருகின்ற மாற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இல்லை

நானும் கவனித்தேன் அப்பா, ஆனால் உங்களுக்கு நம் மண்ணை குறை பற்றி கூறினால் பிடிகாது எனவே தான் அவைகளை பற்றி பேச வில்லை

ராஜேந்திரா நானும் நீயும் போன பிறகு நம் தாய் மண்ணை தமிழனை விட அயல் நாட்டினரே அதிகமாக ஆட்சி புரிந்துள்ளனர்

அதன் பின் மன்னர் ஆட்சி முடிவுற்று மக்கள் ஆட்சி வந்ததாக கேள்வி

ஆம், இன்று நடப்பது மக்கள் ஆட்சி தான்.சேர, சோழ, பாண்டியர், சாளுக்கியர், கலிங்கர்,கங்கபாடி,நோலம்பவடி மற்றும் எல்லோரும் சேர்ந்து இந்தியா என்ற நாட்டின் கீழ் இருக்கிறார்கள்

ஒற்றுமையை இருகிறார்களா?

இனம்,மொழி,மதம்,நீர் மற்றும் நிலம் இவைகளை தவிர

ஒற்றுமையில் அங்கம் வகிக்க வேண்டியவைகளே இவைகள் தானே...!!!

மகனே, அணையின் நீர்மட்டம் பற்றி சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் இங்கு நடக்கும் இரு மாநில அரசுகளின் உரிமை பிரச்சனை தான்

அப்பா.. நீங்கள் ஆட்சி செய்யும் போதும் கூட இந்த காவிரி நதிக்காக சாளுக்கியர்கள் மீது படை எடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினோம்.அதற்கு சான்றாக நந்தி மலையில் இன்றும் நாம் நிர்மாணித்த கோவில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. (Nandi ஹில்ல்ஸ் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

ம்ம்ம்.. அது பழைய கதை அப்போது அவர்கள் எதிரிகள், இப்போதோ ஒரு எல்லோரும் தாயின் பிள்ளைகள்

அப்படியானால் அவர்கள் சகோதர்கள், சகோதர பாசத்திற்கு முன்னுதாரணமாக தாங்கள் செய்த தியாகத்தை யாரும் எண்ணி பார்க்கவில்லையா?(தனக்கு கொடுத்த அரியணையை தன் பெரியப்பா மகன் உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்து.மேலும் விவரங்களுக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ளளவும்) சகோதர்களுக்குள் ஏன் இந்த பிரச்னை?

சகோதர்களாக தங்களை வெளி காட்டி கொண்டாலும் உண்மைகள் அவர்கள் சகோதரர்களா என்பது யாருக்கு தெரியும்.இதை இவர்களால் மட்டும் மல்ல இவர்களின் தாயினால் கூட தீர்க்க முடிய வில்லை.இவர்களின் பிரச்சனைகளை வருண பகவானும் என்னை சிறு வயதில் காப்பாற்றிய இந்த காவேரி தாயும் தான் தற்காலிகமாக தீர்த்து வைக்கிறார்கள்.

சகோதர்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்பு தன்மையும் இல்லாத வரையில் இப் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாது.

சரியாக சொன்னாய் ராஜேந்திரா.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்

அப்பா இதை பற்றி இன்னும் பேசினால் ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று "வாட்லாறு நாகராஜ்" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு இல்ல நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம் வாருங்கள் நாம் நீங்கள் கட்டிய தஞ்சை கோவிலுக்கு போவோம்

Wednesday, August 20, 2008

காதல் கடிதம்

அன்புள்ள தமிழ்வாணனுக்கு,


கல்லுரியின் இறுதி நாளில் நிற்கும் நாம் இந்த முன்று வருடங்கள் உதட்டில் இருந்து ஆயிரம் வார்த்தைகள் பேசிஇருக்கலாம், ஆனால் நாம் உள்ளம் பேசிய வார்த்தைகளை விரிவாக எழுத முன்று யுகங்கள் போதாது என்பதை நான் அறிவேன்.

எதற்கும் பிந்துகிற நான் இந்த மடல் விசயத்தில் முந்த வேண்டும் என்பதகாகவும், என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது என்பதை வெளிபடுத்தவும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்த விரும்பினேன்.

நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

இந்த கல் நெஞ்சில் கள்வனாய் நுழைந்து காதல் என்னும் மந்திரம் ஓதி கலை கரைத்து பால் ஆகினாய். கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.

நீ எனக்குள் இருக்கும் ஆனந்தத்தில் என்மனமும் பஞ்சு போல மிதந்து வானம் சென்று அங்கு உள்ள நச்த்திரங்களை அழைத்து வந்து மனதிற்குள் பறக்க விட்டது.

காதல் ஒரு கானல் நீர் என்று பலமுறை பெரியவர்கள் குறும் போது இது அவர்களின் இயலாமை என் நினைத்த நான் அதை மறு பரிசிலனை செய்யும் போது நான் அறிந்த உண்மையை உங்களுக்கும் உணர்த்த வேண்டும்..

கானல் நீர் அழகானது அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதை பருகி நாம் தாகம் தீர்க்க முடியாது என்பதை மறுக்க முடியாது.அதை போல் இந்த கல்லுரி காதல் நம் வாழ்கை தாகத்தை தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.

கல்லூரி காதலை நடமுறைக்கு ஒப்பிட்டால் அது எட்டு சுரக்காய் போன்றது அது கறிக்கு உதவாததை போல இந்த காதலும் வாழ்கைக்கு உதவாது என்பதையும் புரிந்து கொண்டேன்.

கல்லூரியில் பயிலும் பொது காதல் செய்வதை பெருமையாக நினைக்கும் இளைஞர்களுக்கு நாமும் விதி விலக்குஅல்ல. அதுவே நாம் தலை விதியும் அல்ல என்பது உண்மை.காதல் ஒரு அத்தியாயம் வாழ்கையில் என்பது எனக்கு தெரிந்து விட்டது


வாழ்கையின் உண்மையை வெளிச்சம் இட்டு காட்டியது எனக்கு கிடைக்க போகும் எதிர்கால மண வாழ்க்கை. அதுவே இது நாள்வரையில் உண்மை என நம்பி கனவுலகில் சந்சரித்து இருப்பதை அடி கோடிட்டு காட்டியது.ஆம் ... எனக்கு திருமணம் நிச்சைக்க பட்டு விட்டது அமெரிக்க மணமகன் என் கணவன் ஆக போகிறார், திருமணம் முடிந்து அவருடம் அமெரிக்க செல்ல இருக்கிறேன்.


இந்த மடலின் ஆரம்பத்திலே தங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களை கூறிய நான் இந்த உண்மையும் சொல்லவேண்டிய கட்டாயம், இது உங்களுக்கு கசப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாம் காதல் அத்தியாத்தின் முடிவில் எனக்கு ஒரு நல் வாழ்வு ஆரம்பமாகிறது.இதே ஆரம்பம் வரைவில் நீங்களும் அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,

தாமரை செல்வி.முக்கிய குறிப்பு: பின் புறத்தில்....தயவு செய்து வாசிக்கவும்.


பின் புறத்தில்: இந்த மடல் முலம் என் மனதை திரையிட்டு கட்டியதால், என் வரிகளால் என் எதிர் கால வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பும் வரகூடாது என்பதற்க்காக, இதை படித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி அதிலே ஒரு செட்டு இந்த மடலின் விழுந்தாலும் இதில் உள்ள அத்தனை எழுத்துகள் அழிந்து விடும்.

ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்...(கடிதம் முழுவதும் எரிந்து சாம்பலானது, அது எரியும் பொது தமிழ் வாணன் கையும் சுட்டது. சாம்பலானது கடிதம் மட்டுமல்ல அவன் இதய கோட்டையும் தான். சுட்டது அவன் கைமட்டு மில்லாமல் அவன் மனதும் தான்.)

Tuesday, August 19, 2008

கதாநாயகன்

கதை எழுத வேண்டும் நீண்ட நாள் ஆவல். அந்த முயற்சியின் பலன் தன் இந்த சிறுகதை. இது கதையா இல்லை நேரத்தை விரயம் செய்யயப்பட்ட கிறுக்கலா என்பது வாசிபவர்களுகே வெளிசம். முன்னுரையை கடந்து நேராக கதைக்குள் செல்வோம்.

அந்த மார்கழி மாதத்திலே நாம் கதையின் நாயகன் எனபடுகிற ராம் பேருந்து நிலையத்திலே தான் அலுவலகம் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றான். அவன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது, அதில் வழக்கம்போல கட்டுகடங்கா கூட்டம், ஆனால் எப்படியும் இவன் போகவேண்டும். கூட்டதிலெ முண்டி அடித்து அவனுக்கு இடம் கிடைத்தது படியில், அது ஒன்றும் புதிது இல்லை அவனுக்கு கல்லுரி நாள்களில் நிறைய அனுபவம். பேருந்து கிளம்பியதும் அவன் முகத்தில் சில்லென்று பனிகாற்று வீச, அவன் முகத்தை பேருந்துக்கு உள்பக்கமாக திருப்பினான்.


பேருந்து உள்ளே இருப்பவர்களை ஒரு நோட்டம் விட்டான், ஒரு இடம் வந்தும் அவன் கண் அசைய மறுத்து. அதற்கு இடையூரால நடத்துனர் குரல் "யார் எல்லாம் டிக்கெட் எடுக்கலை, சீக்கிரம் எடுங்க" என்றார். அவர்க்கு வேகமாக சில்லறை கொடுத்து விட்டு. மீண்டும் தன் பார்வை சென்ற பழைய இடத்திற்கு சென்றான்.அங்கு ஒரு நல்ல அழகு உள்ள பெண் நின்று கொண்டு இருந்தாள்.அவள் அழகை வர்ணித்து கதையின் போக்கை மாற்ற கதை ஆசிரியருக்கு விருப்பம் இல்லாததால் நீங்கள்(யாராவது வாசித்தல்) யூகித்து கொள்ளுங்கள். அவள் நின்ற இடத்தின் அருகில் சுழன்ற ராம்மின் கண்கள், அவளை சுற்ற ஆரமித்தது, நொடியில் அவளை கண்கள் முலம் மனதிகுள் பதித்தான்.

மீண்டும் அவள் நோக்க ஆரம்பித்தான், இம்முறை அவள் முகத்தை, பார்த்த அவனுக்கு ஆச்சர்யம் அவளும் இவனையே பார்ப்பது போன்று, சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அவளை பார்பதாக தெரியவில்லை, அதை உறுதி படுத்தி கொண்டு மீண்டும் அவளை நோக்கினான், அவள் பார்வை அவனை விட்டு அகன்றதாக தெரியவில்லை. அந்த நிகழ்வை ஒரு உலக அதிசயமாகவே எண்ணினான்.ஏனெனில் கல்லுரி நாள்களில் எவளவோ கடுமையாக முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனதால் பெண்களிடமே ஒரு வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பு எல்லாம் மறைந்து விருப்பாய் அவளை பார்த்தான், அவளும் இவனையே பார்க்கிறாள் என்று மீண்டும் உறுதி படுத்திகொண்டான்


பார்வையிலே நேரம் கடத்தாமல் அவளை நோக்கி புனைகை பூவை உதிர்த்தான். அவளும் மறுமொழியாக புனகையை பதிலாய் தந்தாள். இந்த ரம்யமான சுழலுக்கு இடையுரலாக ராம் இறங்கும் இடம் வந்தது. வேறு ஒரு நாளாக இருந்தால் அவளுடனே கூட போய் இருப்பான், அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் வேண்ட வெறுப்பாக பேருந்தில் இருந்து இறங்கினான். இறங்குவதக்கு முன் அவள் இவனை நோக்கி கண்களால் விடை பெற்றாள். அன்று பகல் முழுவதும் அவன் நனைவுகள் அவளை சுற்றியே வந்தது.


இன்று நடத்த சம்பவம் அவனுக்கு ஜோசியத்தின் மீது ஒரு அபார நம்பிக்கை வந்தது, ஏனெனில் ஜோசியதிலே அவனுக்கு காதல் கல்யாணமே நடக்கும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்று ஜோசியகர்கள் சொல்லும் பொது அதை நம்பவில்லை இப்போது அதை நம்பினான். அதை பரிச்சை பண்ணவே தனக்கு திருமணம் செயவேண்டும் என்று ராம் அம்மா சொல்லும்போது இதை மனதில் வைத்துக்கொண்டு நாள்களை கடத்தினான்.

அவன் எதிர் பார்த்த அந்த தருணம் இவ்வளவு சீக்கிரம் நடந்ததால் அவனுக்கு வானளாவிய மகிழ்ச்சி, அன்று பகலும் இரவும் ஆமை போல செல்வதாய் உணர்ந்தான். அடுத்த நாள் எப்போது வரும் என்று நொடிகளை எண்ணிக்கொண்டு இருந்தான். பொழுதை கழித்தான், இரவும் கடந்தது அதி காலையிலே எழுந்து குளித்து நேற்று வாங்கிய புது உடைகளை மாட்டி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான் இன்று அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தவனாய் காத்து இருந்தான்.

பேருந்தும் வந்தது அதிகம் கூட்டம் இல்லை ஏறிய உடனே அவன் கண்கள் அவளை தேடின அவளும் அகப்பட்டாள், ஆனால் அவள் இவனை பார்த்தும் அவள் முகத்தில் எந்த அசைவையும் காணமுடியவில்லை. மாறாக மிகவும் சோகமாக காணப்பட்டாள்.எதிர் பார்க்காத இந்த ஏமாற்டத்தை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். பேருந்து கிளம்பு முன் வேறு சிலர் ஏறினார்கள்.


"என்ன கொடுமை சார்" என மனசுக்குள்ள நினைத்தாலும்,மறுபடியும் ஒரு கல் எறிவோம் என்று அவளை பார்த்தால் இம்முறை அவனுக்கு கை மேல் கனியே கிடைத்தது.அவள் இவனை சந்தோசமாக பார்த்து குறுநகை புரிந்தாள். அவன் வேதனை பகலவனை கண்ட பனி போல மறைந்து மலர்ந்த செந்தாமரை முகத்தை போல் ஆனது.


அவளை பார்த்து அவனும் சிரித்தான். யாரோ உறவுகாரகள் இருந்திருப்பார்கள் அதனால் தான் அவளிடம் தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாக எண்ணினான். அதை புரிந்து கொள்ளாமல் அவளை தவறை நினைததற்காய் அவளின் பேசும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணினான்.

இவ்வாறாக ராம் யோசித்து கொண்டு இருக்கையில் அவன் எதிர் பாரவகையிலாக அடுத்து வந்த பேருந்து நிறுத்ததிலே அவள் இறங்கினாள். முன் அறிவிப்பு இன்றி நடந்த காரியத்தில் செய்வது அறியாமல் ஒரு கணம் யோசித்தான் பின் சுதாரித்து கொண்டு அவனும் இறங்கினான் அவனுடன் அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களும் இறங்கினார்கள். இறங்கியதும் அவள் போகும் திசையிலே நடந்து சென்றான். அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஆவலை வேகமாக நடந்து பின் தொடர்ந்தான். அவளுக்கு கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் நின்று அவன் "ஹலோ கொஞ்சம் நில்லுங்கள்" என்றான். அவள் அவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரமித்தாள்.


அவனும் விடவில்லை தொடர்ந்து சென்றான். மீண்டும் ஒரு முறை ஹலோ என்று சொல்ல வாய் எடுத்தான். இவன் "ஹலோ" என்று ஒரு குரல் தன் பின்புறம் இருந்து வருவதை கேட்டான். ராம் திரும்பி என்ன என்று கேட்பதற்குள் அவனை கூப்பிட்ட குரலுக்கு சொந்தக்காரன் ராம் முகத்தில் ஒரு குத்து விட்டான். குத்து விழுந்த வேகத்தில் அவன் மூர்ச்சை அடைந்தான்.
மூர்ச்சை தெளிந்து பார்கையில் அவன் ஒரு மருத்துவமையில் இருப்பதாய் உணர்ந்தான்.தனக்கு என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க அவனால் முடியவில்லை. காதல் கதைக்கு எப்போதும் வில்லனின் ஆரம்பம் குறைத்த பச்சம் ஒரு கனவு டூயட் பாட்டு முடிஞ்சவுடனே தானே வரும். ஆனால் எனக்கு இன்னும் காதலே ஆரமிக்கலை அதுக்குள்ளே வில்லனா? என நினைத்து கொண்டு எழுந்திரிக்க முயன்றான்.

அதற்குள் "என்னை மனிக்கவும்" என்ற குரலை கேட்டு தன் பார்வையை திருப்பினான்.அவனை பார்த்தும் அவனால் நம்பமுடிய வில்லை அவன் வேறு யாருமல்ல. ராம் மருத்துவமனை வர காரணமாக இருந்தவன். அவன் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். அவள் யாருமல்ல ராமின் காதலி என்று நினைத்து கொன்று இருக்கும் அந்த பைங்கிளி. அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து அவன் குழப்பம் மேலும் அதிகமானது.

ராமின் எண்ணத்திற்கு இடையுரலாக அவன் இடை மறித்தான் "என் பெயர் சுந்தர், நடந்த சம்பபதிற்காக நான் மிகவும் வருத்தபடுகிறேன். தயவு செய்து மனதில் ஒன்றும் வைத்து கொள்ளவேண்டாம்". அவன் சொல்லி முடித்தவுடனே அவள் ராமிடம் "இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு" என்றாள். அவள் குரலை கேட்டு ஆகா என்ன ஒரு அருமையான தெய்விக குரல் என்று நினைத்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள். " என் பெயர் பல்லவி, நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை. உங்களால நான் இன்றைக்கு புது வாழ்வு பெற்றேன்"

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே ராம் மனம் ஒரு புள்ளி மானை போல துள்ளி குதித்தது என்று சொன்னால் அது உண்மை. இவள் என் மீது வைத்திருக்கும் காதலுக்கு என்ன மரியாதை, இப்படி ஒரு பெண்ணை அடைய நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என எண்ணினான்.

இப்போது சுந்தர் இடைமறித்து " ஆமாங்க நானும் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லேன்னா நாங்க ரெண்டு பெரும் சேரமுடியாமல் போய் இருக்கும்". இதை கேட்ட ராம் சுந்தரை உற்று பார்த்தான், அவன் பேசியதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறானா என்று நினைத்தான்.

மீண்டும் பல்லவி தன் பல்லவியை தொடர்ந்தாள், " ஆமா இவர் சொல்லுறது உண்மை, நானும் இவரும் காதலர்கள்,எங்களுக்குள் ஒரு சின்ன மனஸ்தாபம், அதை சரி செய்ய பலமுறை முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. உங்களை பேருந்து சந்திப்பிலே பார்த்தவுடனே எனக்கு இந்த யோசனை வந்தது. அதின் பலனாக எனக்கு நான் தொலைத்து திருப்ப கிடைத்தது. என்னை மனிசுடுங்க அண்ணா".அதன் பின் அவள் பேசிய ஏதும் அவன் காதில் விழவில்லை.

"ஐயோ யாராவது என்னை காப்பாற்றுங்கள், இங்கு என்ன நடக்கிறது,நான் இருப்பது கனவு உலகிலையா இல்லை நினவு உலகிலா ஏன் எல்லோரும் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள்" என்று சப்தமிட்டான்.


அப்போது அந்த வழியாக வந்த மருத்துவர் அவனிடம் வந்து "ராம் நீங்க வீட்டுக்கு போகலாம், நீங்கள் பரிபுரணமாய் இருகிறார்கள், நான் தரும் மாத்திரைகளை ஒரு வாரம் சாபிடுங்கள்" என்றதும் தன்னை சுற்றிலும் பார்த்தான், மருத்துவர் தவிர யாரும் அங்கு இல்லை, அவன் மருத்துவரிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்தான்.அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய வந்தது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம்மாக தெரிந்தது அவன் கனவு காணவில்லை என்று, மருத்துவமனையை விட்டு ஒரு தெளிந்த சிந்தையுடன் ராம் வெளியே வந்தான். நினைவுகளை பினோக்கினான், பல்லவி கூறியதை கேட்டு அதிக உணர்ச்சி வசத்தால் தான் மீண்டும் நினவு இழந்துருக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் கழித்து சென்று இருக்க வேண்டும்.

இன்று காலையில் தன்னை பார்த்து அவள் எந்த சலானம் இல்லாமல் இருந்ததற்கும் இப்பொது விடை கிடைத்தது, பல்லவி சுந்தரை எதிர் பார்த்து காத்து இருந்திருப்பாள், அவன் வராததால் அவள் சோகமாக இருந்திருப்பாள். சுந்தர் பேருந்திலே அடுத்த நிறுத்ததிலே ஏறி இருப்பான். அவன் ஏறியதும் அவள் தன் காதல் சோதனையை தொடர்ந்து இருப்பாள்.

முதலில் அம்மாவிடம் சொல்ல வேண்டும் தனக்கு ஒரு நல்ல பெண் பாருங்கள் என்று மனதில் நினைத்தான். அது மட்டுமில்லாமல் இந்த கதையில் தன்னை கதைநாயகனாக சித்தரித்த கதை ஆசிரியரை தன் மனதிற்குள் வசை பாடிகொண்டே சென்றான்.

Tuesday, June 17, 2008

வெண்பா - துவக்கப்படி

முன்பு கல்லூரி நண்பர்கள் குழுமத்தில் இட்ட மின்னஞ்சல் கீழே தருகிறேன்.

வெண்பா இலக்கணம் எளிதான ஒன்று. நீ சொன்ன 'rhythamic' அந்த இலக்கணத்தின் படி எழுதுனா தன்னால வந்துரும், பெரும்பாலும். அதை செப்பலோசைன்னு சொல்றாங்க.

இப்ப முதல் பாடமா ஒரு செய்யுளின் அடிப்படையை பாக்கலாம். அசை என்னும் உறுப்புதான் அந்த அடிப்படை. (எங்கயாவது தப்பு விட்டுருந்தேன்னா, தெரிஞ்சவங்க குட்டுங்க)

இரண்டு அசைகள் உண்டு. நேரசை, நிரையசை.
தனிக்குறில், தனி நெடில் நேரசை எனப்படும். அடுத்தடுத்து வரும் குறில், குறில் தொடர்ந்த நெடில் நிரையசை. புள்ளி வைத்த எழுத்துக்களுக்கு அசை மதிப்பு கிடையாது.

இப்ப சில காட்டுகளைப் பாக்கலாம்.
நேர், பார், ஏ, நீ - நேரசை - தனிநெடில், புள்ளியைத் தவிர்க்கலாம்.
குறில், அவர், இடு, அணல் - நிரையசை - குறில் தொடர்ந்து வருகிறது
நிரை, இசை, (கூ)வுமே - நிரையசை - குறில் தொடர்ந்த நெடில் (ஐகாரக்குறுக்கம்? எடுத்துக் காட்டுறதுக்குள்ள கண்ணைக் கட்டுது ;-)

அசைகள் தனித்தோ, சேர்ந்தோ வந்தால் சீர் எனப்படும். பெரும்பாலும் ஒரு சொல்லை ஒரு சீராகக் கொள்ளலாம்.

சுங்கம் தவிர்க்கவா சுட்டினேன்? இந்தத் தொடரில் மூன்று சீர்கள் உள்ளன. அவற்றை கீழ்வருமாறு அசை பிரிக்கலாம்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்?
நேர்/நேர் நிரை/நிரை நேர்/நிரை

இந்த சீர்களை நினைவில் வைத்துக் கொள்ள இன்னொரு உத்தி உண்டு.
நேர்நேர் - தேமா (தே/மா)
நேர்நிரை - கூவிளம்(கூ/விளம்)
நிரைநேர் - புளிமா(புளி/மா)
நிரைநிரை - கருவிளம்(கரு/விளம்)
நேர்நேர்நேர் - தேமாங்காய்(தே/மாங்/காய்)
நிரைநேர்நேர் - புளிமாங்காய்(புளி/மாங்/காய்)
நிரைநிரைநேர் - கருவிளங்காய்(கரு/விளங்/காய்)
நிரைநேர்நேர் - கூவிளங்காய்(கூ/விளங்/காய்)

குறிப்பு - வெண்பாவில் கனிச் சீர் (தேமாங்கனி முதலியவை) மற்றும் நாலசைச் சீர்கள் வராது. எனவே தவிர்த்திருக்கிறேன்.

தேமாவும், புளிமாவும் பொருளற்ற குறிச்சொற்கள். ஒரு சீரை அடையாளம் காண உதவும், அவ்வளவே. எப்படி அடையாளம் காட்டுகிறது?

தேமாவைப் பிரித்தால் தே/மா, நேர் நேர் - அவ்வளவு தான். அதுபோலவே மற்ற சீர்ப் பெயர்களும். முழுப்பாடலையும் கீழே இவ்வாறு அசை/சீர் பிரித்திருக்கிறேன், சரி பாருங்கள்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்? அன்/பர்/கள்
நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர்
தேமா கருவிளம் கூவிளம் தேமாங்காய்

சங்/கம் கவ/னிக்/கத் தான்/தந்/தேன் - வெண்/பா
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா

விளை/யா/டி ஒன்/றிட/வே, நண்/பா/வுன் அஞ்/சல்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா

விதை/யா/கக் கொண்/டேன் நான்.
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்

இப்ப அசை பிரிச்சாச்சா? இனி வெண்பா வாய்ப்பாடு பாத்தோம்னா எளிதா இருக்கும்.

மா முன் நிரை - மாவில் முடியும் சீருக்கு அடுத்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

தேமா, புளிமாவைத் தொடர்ந்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

விளம் முன் நேர் - விளத்தில் முடியம் சீருக்கு அடுத்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

கருவிளம், கூவிளத்தை தொடரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

காய் முன் நேர் - காய்ச்சீருக்கு அடுத்த சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் சீர்களைத் தொடரும் சீர்

இதுதான் அந்த வாய்ப்பாடு. இப்படி எளிதாக நினைவில் வைக்கத்தான் தேமா, புளிமான்னு குறிச்சொற்கள்.

இந்த வாய்ப்பாடு பொருந்தும் படி நான்கு சீர் கொண்ட மூன்றடிகளும், நாலாவது அடியில் மூன்று சீரும் அமைய எழுதினால் வெண்பா எழும்.

ஈற்றடி, ஈற்றுச்ச்சீருக்கு தனி வாய்ப்பாடு உண்டு. (இறுதி அடி, இறுதிச் சொல்)
ஒரசையில் முடிய வேண்டும்.

கீழ்க்கண்ட அசைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நேரசை - நாள், நான், தேன், தா, நீ
நிரையசை - மலர், அவன், அது
நேர்பு - காசு, அன்பு, பண்பு, (உகரம் தொடர்ந்து வரும் நேரசை)
நிரைபு - பிறப்பு, உறுப்பு, தவிப்பு, தொடர்பு, உவந்து, அறிவு (உகரம் தொடர்ந்து வரும் நிரையசை)

அடிப்படை அவ்வளவுதான். இன்னும் சில நுண்குறிப்புகள் உண்டு.

அடிதோறும் எதுகை, முற்சீர், மூன்றாம் சீரில் மோனை (முதல் எழுத்து ஒன்றுதல்) , இரண்டாம் அடி ஈற்றுச்சீர்(தனிச்சொல்) முதற் சீருக்கு எதுகையாக அமைதல் (மேற்கண்ட பாடலில் உள்ளது போல - நேரிசை வெண்பா)
நேரிசை வெண்பா (இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும் மேலே உள்ள பாடல்), இன்னிசை வெண்பா பிரிவுகள் உண்டு.

குறள் வெண்பா (இரண்டடி), சிந்தியல் வெண்பா (மூன்றடி), பஃறொடை வெண்பா (நான்கடிக்கும் அதிகமாக) வகைகள் உண்டு. ஆனால் அனைத்திற்கும் மேலே சொன்ன அடிப்படை பொருந்தும்.

வெண்பாவில் பெரும்பாலும் தனிப் பாடல்கள் தாம் இயற்றப் பட்டுள்ளன. முழுவதும் வெண்பாவிலேயே பாடப் பட்ட காவியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா. 'வெண்பாவிற்கோர் புகழேந்தி' என்றே அவரது பெயர்!

என்பால் இயன்ற(து) எடுத்தே இயம்பினன்
வெண்பா எழுதவே ஆவலர் யார்உளர்
உன்பால் எழுந்திடும் ஐயம் இருந்திடில்
பண்பாய் அவையில் மொழி.

* இதுதாங்க இன்னிசை வெண்பா! இரண்டாவது அடியில் தனிச்சொல் பெறாமல் எதுகை அமைந்து வருவது.

* என்பால் இயன்ற தெடுத்தே இயம்பினன் - அப்படின்னு தான் இருக்கணும். படிக்க வசதியா இது மாதிரி அடைப்புக்குள் பிரிச்சு எழுதுவாங்க.

நண்பர்களுக்கான குறிப்பை இடுகையாப் போட அச்சமாத்தான் இருக்கு. தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பதால் துணிகிறேன்.

Thursday, May 08, 2008

அலையின் காதல்

அலைகளுக்கு ஏன் இந்த காதல் மோகம்
நில மகளை அணைக்க துடிக்கிறது
அவளும் ஒரு பெண் என்றும்
தான் தங்கி இருப்பது நிலமகள் மடி என்று அறியாமல்
அலைகளின் காதல் மோகம் தணிக்க
நில மகள் மடி சரிக்க
வந்ததோ சுனாமி
அழிந்ததோ இப்பூவுலகின் மக்களும் மாக்களும்
தணிந்தது நிலமகள் கோபம்
தணியவில்லை அலைகளின் காதல் மோகம்

Monday, May 05, 2008

அவள்

தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தான்..

Friday, May 02, 2008

சிறகு விரித்தால்

கதிரவன் சிறகு விரித்தால் தாமரை மலரும்
சந்திரன் சிறகு விரித்தால் அல்லி மலரும்
மொட்டுக்கள் சிறகு விரித்தால் மலர்கள் மலரும்
மலர்கள் சிறகு விரித்தால் மணம் மலரும்
கன்னியின் கடை கண் பார்வை சிறகு விரித்தால் காதல் மலரும்
இதயம் சிறகு விரித்தால் மனித நேயம் மலரும்
மனித நேயம் சிறகு விரித்தால் ஒற்றுமை மலரும்

Monday, April 14, 2008

உதடு ஒட்டி வரும் குறள்கள்!

உலகப்பொதுமறை என்று போற்றப்படும் நம் திருக்குறளில் ஒரு சில குறள்களில் உள்ள அனைத்து அசைகளிலும்(சொல்) உதடு ஒட்டி வரும். அத்தகைய சிறப்பமைந்த குறள்கள் இதோ...


2 வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

6 வாழ்க்கைத் துணை நலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60

24 புகழ்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232

35 துறவு

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. 344

50 இடனறிதல்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 492

61 மடியின்மை

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. 603

64 அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 631

69 தூது

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688

92 வரைவின் மகளிர்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920

123 பொழுது கண்டு இரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 1229

133 ஊடல் உவகை

புல்லி விடாப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. 1324

Tuesday, April 01, 2008

எல்லாருமே என் சொந்தக்காரங்க!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்


யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தன்துளி தளைஇ யானாது

கல்பொரு தியங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

குட்டீஸ்!
என்னடா இந்த அங்கிள் இவ்வளவு நேரமா புரியற மாதிரி பாடிட்டு, திடீர்னு என்னமோ உளறாரே ன்னு பாக்குறீங்களா? இந்தப் பாட்டு தான் புறநானூறு அப்படிங்கிற புத்தகத்து ல, நம்ம கணியன்பூங்குன்றனார் அப்படிங்கற அங்கிள் பாடினது. இது அந்த புக் ல 192 வது பாடலா இருக்கும்.

அது சரி! ஆனா இந்த பாட்டுக்கு அர்த்தமே புரியலயே! அப்படின்னு கேட்குறீங்களா. இதோ சொல்றேன் பாருங்க!

இந்த பாட்டு வேணும்னா உங்களுக்குப் புரியாம இருக்கலாம்; ஆனா இதுல இருக்குற கருத்து எல்லாமும் இந்த கண்மணிகளுக்குத் தெரியும்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

கேளிர் ன்னா சொந்தக்காரங்கன்னு அர்த்தம். இந்த உலகத்துல இருக்குற எல்லா ஊருமே என்னுடைய ஊர் தான். அதே மாதிரி எல்லா மனிதர்களும் எனக்கு சொந்தக்காரங்க; என் ஃப்ரெண்ட்ஸ்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

அப்படின்னா என்ன?

தீது - தீமை
நன்று - நன்மை
பிறர் தர - பிறரால்
வாரா - வருவதில்லை

நமக்கு ஏதாவது நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அது மத்தவங்களால நமக்கு வரல. நம்மலாலேயே தான் நமக்கு வந்தது ன்னு அர்த்தம்.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்

அதாவது, நாமல்லாம் மழைக்காலத்துல வீட்டு முன்னாடி மழைத்தண்ணீ ஓடும்- ல அப்போ, வீட்டுல இருக்குற பழைய பேப்பரால காகித கப்பல் செஞ்சு விடுவோம் தெரியுமா! அந்த கப்பல் எந்த பக்கமா போகும்? ஞாபகமிருக்கா? ஆமாம். நீ சொன்னது சரிதான். தண்ணி போற திசையில தானே போகும். அதே மாதிரி தான் நம்ம வாழ்வும் ஊழ்வினைப் பயன் படி தான் இருக்கும். அப்படின்னு பெரியவங்க தங்களோட அனுபவத்துல இருந்து சொல்லியிருக்காங்க.

அதனால,

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இந்த உலகத்துல உன்ன விட பெரியவங்க யாரும் இல்ல; அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்ன விட சின்னவங்களும் யாரும் இல்ல; அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!

இந்த வசனம் எங்கயோ கேட்ட மாதிரி இல்ல! அதேதான், நம்ம சூப்பர் இஸ்டார் தில்லுமுல்லு படத்துல சொல்லுவாறே அதே வசனம் தான்! அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சொன்னது. இதத்தான் அந்தக் காலத்துலயே நம்ம கணியன் பூங்குன்றனார் அங்கிளும் சொன்னாங்க.

இப்ப சொல்லுங்க! இந்த பாட்டுக்கு அர்த்தம் உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் தானே! பாட்டுதானே தெரியாது! சரி, பாட்டை மட்டும் இன்னொரு தடவை சொல்லலாமா? ஓ, சொல்லலாமே! வாங்க எல்லாரும் சேர்ந்து பாடலாம்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தன்துளி தளைஇ யானாது
கல்பொரு தியங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

நிலாப் பாட்டு!

நிலா நிலா ஓடி வா!

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா

மல்லிகைப்பூ கொண்டு வா

நடு வீட்டில் வை

நல்ல துதி செய்!

Saturday, March 29, 2008

கிழமைப்பாடல்!

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - சிறைக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டு படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்கு தெரியும்??!

Wednesday, March 26, 2008

பொம்மை

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்!
புதிய புதிய பொம்மை பார்!

தலையை ஆட்டும் பொம்மை பார்!
தாளம் போடும் பொம்மை பார்!

கையை வீசும் பொம்மை பார்!
கண்ணை சிமிட்டும் பொம்மை பார்!

எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே!

எங்கள் வீட்டுப் பூனை!

பூனை அண்ணா

எங்கள் வீட்டு பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
தாவி எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக் குடிக்கும்
நாவால் முகத்தைக் குடிக்கும்
நாற்காலியின் கீழ் படுக்கும்!

சிந்தனை செய் மனமே!

குழந்தைகளுக்கான பாடல்


மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை;
புனிதமான கடவுளை
பூசை செய்ய உதவுதே!

அழுக்கடைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்;
கழுத்தில் நல்ல மாலையாய்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங்கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமோ;
இன்பம் இன்பம் என்றுதாம்
இன்னும் கேட்க செய்யுதே!

விசத்தில் மிக்க பாம்பிடம்
விலையுயர்ந்த இரத்தினம்;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுமோ?

ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோசா மலருதே;
வீசி நல்ல மணத்திலே
விரும்பி அணிய செய்யுதே!

மோசமான இடத்திலும்
மிகுந்த நல்ல பொருளுண்டு;
யோசிக்காமல் எவரையும்
ஏளனம் நீ செய்யாதே!

Saturday, March 15, 2008

மழை

மழை

வானம் கறுத்தால், மழை பெய்யும்
மழை பெய்தால், மண் குளிரும்
மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்
புல் தழைத்தால், பசு மேயும்
பசு மேய்ந்தால், பால் சுரக்கும்
பால் சுரந்தால்,கன்று குடிக்கும்
கன்று குடித்து மிஞ்சியதை
கறந்து நாமும் வந்திடலாம்;
காய்ச்சி நாமும் குடித்திடலாம்.

யானை சவாரி செய்யப் போகிறேன்!

யானை


யானை பெரிய யானை
யார்க்கும் அஞ்சா யானை
பானை வயிற்று யானை
பல்லைக் காட்டா யானை
முறத்தைப் போல காது
முன்னால் வீசும் யானை
சிறிய கோலி குண்டாம்
சின்ன கண்கள் யானை
முன்னங்காலை மடக்கி
முட்டி போட்டு படுக்கும்
சின்ன குழந்தை ஏற்றி
சிங்காரமாய் நடக்கும்

தொடர்வண்டி!

தொடர் வண்டி


நீண்ட வண்டி தொடர் வண்டி
நீண்ட தூரம் போகும் வண்டி


தண்டவாளத்தில் அது போகும்
தட தட வென்று விரைந்தோடும்

'கூ'.... என ஒலிப்பது புகை வண்டி
'பாம்'.... என ஒலிப்பது மின் வண்டி

பச்சை, சிவப்பு கொடி இரண்டை
நிலையத் தலைவர் காட்டிடுவார்

சிவப்பைக் காட்டினால் நின்றுவிடும்
பச்சையைக் காட்டினால் பாய்ந்தோடும்

கை வீசம்மா கை வீசு....

கை வீசம்மா கை வீசு.....


கை வீசம்மா கை வீசு...
கடைக்குப் போகலாம் கை வீசு...

மிட்டாய் வாங்கலாம் கை வீசு...
மெதுவாய் திங்கலாம் கை வீசு...

சொக்காய் வாங்கலாம் கை வீசு...
சொகுசாய் போடலாம் கை வீசு...

கோயிலுக்குப் போகலாம் கை வீசு...
கும்பிட்டு வரலாம் கை வீசு...

ஔவை பாட்டி சொன்னாங்க!

ஆத்திசூடி


அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கறவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயமிட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஔவியம் பேசேல்

கணக்குப் போடலாமா!

நான் ஒரு கணிதமேதை!ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்;
உழைத்துப் படித்தால் பலன் கூடும்! (1+1 = 2)

இரண்டும் இரண்டும் நான்காகும்;
இனிக்கும் பேச்சு புகழ் கூட்டும்! (2+2 = 4)

மூன்றும் மூன்றும் ஆறாகும்;
முயற்சி உயர்வின் வேராகும்! (3+3 = 6)

நான்கும் நான்கும் எட்டாகும்;
நாணல் அடக்கம் சீர் நல்கும்! (4+4 = 8)

ஐந்தும் ஐந்தும் பத்தாகும்;
அன்பை மதித்தால் துயர் போகும்! (5 +5 = 10)

மரம் வளர்க்கப் போகிறேன்!

மரம் வளர்ப்போம்!


தாத்தா வைத்த தென்னையுமே,
தலையால் இளநீர் தருகிறது!

பாட்டி வைத்த கொய்யாவும்,
பழங்கள் நிறைய கொடுக்கிறது!

அப்பா வைத்த மாஞ்செடியும்,
அல்வா போல பழம் தருது!

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது!

அண்ணன் வைத்த மாதுளையும்,
கிண்ணம் போல பழுக்கிறது!

சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே.....

அணிலே அணிலே ஓடி வா!

அணிலே அணிலே ஓடி வா!


அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டு பழம் கொண்டு வா!
பாதி பழம் உன்னிடம்,
பாதி பழம் என்னிடம்....
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து திண்ணலாம்.......

புத்தகம் படிக்கலாமா!

புத்தகம் படிக்கலாமா!


தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டு போல்,

சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊறும் எறும்பு போல்,

பழம் நிறைந்த சோலையைப்
பார்த்துச் செல்லும் கிளியைப் போல்,

வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்கள் போல்,

பள்ளமான இடத்தினைப்
பார்த்துப் பாயும் வெள்ளம் போல்,

நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்!

குள்ள குள்ள வாத்து!

குள்ள குள்ள வாத்து!


குள்ள குள்ள வாத்து!
குளத்தில் நீந்தும் வாத்து!
பள்ளம் மேடு பார்த்து;
பைய நடக்கும் வாத்து!
வெள்ளைக் கருப்பு போன்ற
வேறு வேறு வண்ணம்
உள்ள போதும் கூட
ஒன்றாய் செல்லும் வாத்து!
பள்ளிக்கூடம் செல்லும்
பாப்பாக் கூட்டம் போல
மெல்ல செல்லும் நீரில்
மிதக்கும் படகே வாத்து!

பச்சைக் கிளியே வா! வா!

பச்சைக் கிளியே வா! வா!

பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!
சிறகை சிறகை விரித்து வா!
கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்தி கொத்தித் திண்ண வா!
ஆற்று நீரில் குளிக்கிறாய்!
அழகாய் துள்ளி ஆடுகிறாய்!
சேற்று வயலில் அமர்கிறாய்!
திறந்த வெளியில் திரிகிறாய்!
உன்னைப் போல பறக்கனும்;
உயர உயர செல்லனும்!
என்னை அழைத்துச் சென்றிடு;
ஏற்ற இடத்தைக் காட்டிடு!

Friday, March 14, 2008

அம்மா இங்கே வா... வா... வா....

அம்மா இங்கே வா! வா!

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.