Saturday, March 29, 2008

கிழமைப்பாடல்!

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - சிறைக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டு படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்கு தெரியும்??!

Wednesday, March 26, 2008

பொம்மை

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்!
புதிய புதிய பொம்மை பார்!

தலையை ஆட்டும் பொம்மை பார்!
தாளம் போடும் பொம்மை பார்!

கையை வீசும் பொம்மை பார்!
கண்ணை சிமிட்டும் பொம்மை பார்!

எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே!

எங்கள் வீட்டுப் பூனை!

பூனை அண்ணா

எங்கள் வீட்டு பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
தாவி எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக் குடிக்கும்
நாவால் முகத்தைக் குடிக்கும்
நாற்காலியின் கீழ் படுக்கும்!

சிந்தனை செய் மனமே!

குழந்தைகளுக்கான பாடல்


மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை;
புனிதமான கடவுளை
பூசை செய்ய உதவுதே!

அழுக்கடைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்;
கழுத்தில் நல்ல மாலையாய்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங்கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமோ;
இன்பம் இன்பம் என்றுதாம்
இன்னும் கேட்க செய்யுதே!

விசத்தில் மிக்க பாம்பிடம்
விலையுயர்ந்த இரத்தினம்;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுமோ?

ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோசா மலருதே;
வீசி நல்ல மணத்திலே
விரும்பி அணிய செய்யுதே!

மோசமான இடத்திலும்
மிகுந்த நல்ல பொருளுண்டு;
யோசிக்காமல் எவரையும்
ஏளனம் நீ செய்யாதே!

Saturday, March 15, 2008

மழை

மழை

வானம் கறுத்தால், மழை பெய்யும்
மழை பெய்தால், மண் குளிரும்
மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்
புல் தழைத்தால், பசு மேயும்
பசு மேய்ந்தால், பால் சுரக்கும்
பால் சுரந்தால்,கன்று குடிக்கும்
கன்று குடித்து மிஞ்சியதை
கறந்து நாமும் வந்திடலாம்;
காய்ச்சி நாமும் குடித்திடலாம்.

யானை சவாரி செய்யப் போகிறேன்!

யானை


யானை பெரிய யானை
யார்க்கும் அஞ்சா யானை
பானை வயிற்று யானை
பல்லைக் காட்டா யானை
முறத்தைப் போல காது
முன்னால் வீசும் யானை
சிறிய கோலி குண்டாம்
சின்ன கண்கள் யானை
முன்னங்காலை மடக்கி
முட்டி போட்டு படுக்கும்
சின்ன குழந்தை ஏற்றி
சிங்காரமாய் நடக்கும்

தொடர்வண்டி!

தொடர் வண்டி


நீண்ட வண்டி தொடர் வண்டி
நீண்ட தூரம் போகும் வண்டி


தண்டவாளத்தில் அது போகும்
தட தட வென்று விரைந்தோடும்

'கூ'.... என ஒலிப்பது புகை வண்டி
'பாம்'.... என ஒலிப்பது மின் வண்டி

பச்சை, சிவப்பு கொடி இரண்டை
நிலையத் தலைவர் காட்டிடுவார்

சிவப்பைக் காட்டினால் நின்றுவிடும்
பச்சையைக் காட்டினால் பாய்ந்தோடும்

கை வீசம்மா கை வீசு....

கை வீசம்மா கை வீசு.....


கை வீசம்மா கை வீசு...
கடைக்குப் போகலாம் கை வீசு...

மிட்டாய் வாங்கலாம் கை வீசு...
மெதுவாய் திங்கலாம் கை வீசு...

சொக்காய் வாங்கலாம் கை வீசு...
சொகுசாய் போடலாம் கை வீசு...

கோயிலுக்குப் போகலாம் கை வீசு...
கும்பிட்டு வரலாம் கை வீசு...

ஔவை பாட்டி சொன்னாங்க!

ஆத்திசூடி


அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கறவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயமிட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஔவியம் பேசேல்

கணக்குப் போடலாமா!

நான் ஒரு கணிதமேதை!



ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்;
உழைத்துப் படித்தால் பலன் கூடும்! (1+1 = 2)

இரண்டும் இரண்டும் நான்காகும்;
இனிக்கும் பேச்சு புகழ் கூட்டும்! (2+2 = 4)

மூன்றும் மூன்றும் ஆறாகும்;
முயற்சி உயர்வின் வேராகும்! (3+3 = 6)

நான்கும் நான்கும் எட்டாகும்;
நாணல் அடக்கம் சீர் நல்கும்! (4+4 = 8)

ஐந்தும் ஐந்தும் பத்தாகும்;
அன்பை மதித்தால் துயர் போகும்! (5 +5 = 10)

மரம் வளர்க்கப் போகிறேன்!

மரம் வளர்ப்போம்!


தாத்தா வைத்த தென்னையுமே,
தலையால் இளநீர் தருகிறது!

பாட்டி வைத்த கொய்யாவும்,
பழங்கள் நிறைய கொடுக்கிறது!

அப்பா வைத்த மாஞ்செடியும்,
அல்வா போல பழம் தருது!

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது!

அண்ணன் வைத்த மாதுளையும்,
கிண்ணம் போல பழுக்கிறது!

சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே.....

அணிலே அணிலே ஓடி வா!

அணிலே அணிலே ஓடி வா!


அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டு பழம் கொண்டு வா!
பாதி பழம் உன்னிடம்,
பாதி பழம் என்னிடம்....
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து திண்ணலாம்.......

புத்தகம் படிக்கலாமா!

புத்தகம் படிக்கலாமா!


தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டு போல்,

சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊறும் எறும்பு போல்,

பழம் நிறைந்த சோலையைப்
பார்த்துச் செல்லும் கிளியைப் போல்,

வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்கள் போல்,

பள்ளமான இடத்தினைப்
பார்த்துப் பாயும் வெள்ளம் போல்,

நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்!

குள்ள குள்ள வாத்து!

குள்ள குள்ள வாத்து!


குள்ள குள்ள வாத்து!
குளத்தில் நீந்தும் வாத்து!
பள்ளம் மேடு பார்த்து;
பைய நடக்கும் வாத்து!
வெள்ளைக் கருப்பு போன்ற
வேறு வேறு வண்ணம்
உள்ள போதும் கூட
ஒன்றாய் செல்லும் வாத்து!
பள்ளிக்கூடம் செல்லும்
பாப்பாக் கூட்டம் போல
மெல்ல செல்லும் நீரில்
மிதக்கும் படகே வாத்து!

பச்சைக் கிளியே வா! வா!

பச்சைக் கிளியே வா! வா!

பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!
சிறகை சிறகை விரித்து வா!
கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்தி கொத்தித் திண்ண வா!
ஆற்று நீரில் குளிக்கிறாய்!
அழகாய் துள்ளி ஆடுகிறாய்!
சேற்று வயலில் அமர்கிறாய்!
திறந்த வெளியில் திரிகிறாய்!
உன்னைப் போல பறக்கனும்;
உயர உயர செல்லனும்!
என்னை அழைத்துச் சென்றிடு;
ஏற்ற இடத்தைக் காட்டிடு!

Friday, March 14, 2008

அம்மா இங்கே வா... வா... வா....

அம்மா இங்கே வா! வா!

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.