Sunday, July 08, 2007

உலக அதிசயங்கள் - பகுதி 1

ஒரு வழியாக உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இந்த அதிசயங்களைப் பற்றி சில வரிகள், எனக்குத் தெரிந்த வரையில்.
1. தாஜ் மஹால்

பிடித்தது - எழில் கொஞ்சும் வடிவம். காதலின் சின்னம் ஆதலால், பார்க்கும் பொழுது (படத்தில் தான்) துணையை நினைத்துக் கொள்வேன்.

பிடிக்காதது - என்ன தான் அழகு என்றாலும், ஷாஜஹானின் தனிப்பட்ட விருப்பத்திற்காக கொடுங்கோல்(?) ஆணையை ஏற்று எழும்பிய, பல இழந்த உயிர்களின் நினைவகமும் அல்லவா?

2. சீனப் பெருஞ்சுவர்

நாட்டை மங்கோலியப் படையெடுப்பில் இருந்து காப்பதற்காக பல காத தூரத்திற்கு கட்டப்பட்டது. ஓரளவே பயன் தந்தது என்றாலும், விண் வெளியிலிருந்து காணலாம் என்பது பொய் என்றாலும் பிரமாண்டம் கை கொடுத்திருக்கிறது.

3. ஏசுவின் சிலை

பிரேசிலின் பிரமாண்டம் என்பதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

4. இட்ஸா பிரமிடு - மெக்ஸிகோ

எகிப்து பிரமிடுகளைப் போன்று வட அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மனிதர்களால் கட்டப்பட்டது. பழைய உலக அதிசயங்கள் பட்டியலிடப்பட்ட போது மாயன்களைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. தாமதமான அங்கீகாரம்.

5. மச்சு பிச்சு - பெரு

மாயன்களின் ஒன்று விட்ட இன்கா நாகரிக மக்களின் மலை நகரம். இன்கா மக்களின் நாடு ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டபொழுது தப்பித்த எச்சம். நான் சென்று பார்க்க விரும்பும் மிச்சம்.

6. குடைவரை அரங்கம் - பெட்ரா, ஜோர்டான்

மாமல்லபுரம், சித்தன்னவாசல், அஜந்தாவைப் பார்க்காமல் எப்படி எழுதுவது?

7. கொலோசியம் - ரோம்

பண்டைய கால விளையாட்டரங்கம்.
படையெடுப்பின் அழிவில் மிஞ்சியது
காலத்தை விஞ்சியதை
உலகம் அதிசயம் என கொஞ்சியது.

விட்டுப் போன ஈஸ்டர் தீவுகள் மற்றும் பழைய அதிசயங்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

முத்துமாலை

மார்பு மேட்டில்
தேங்கிய முத்துக்கள்
சிரித்திருப்பாளோ!

யார் வள்ளல்

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!
எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம் எள்ளும் என எண்ணாமல் வழங்கினார்கள். அதனால் தான் அவர்கள் வள்ளல்கள், காலம் பல கடந்தும்.

<இடம் விட்டு வைக்கிறேன், இன்னொருவருக்காக. தொடரும்.>

Wednesday, July 04, 2007

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று,
இலந்தைப் பழம் போல் என்னுள்!

உரித்துத் தின்ன இயலாது;
முற்றும் முழுங்கவும் முடியாது;

மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது!
அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.

Tuesday, July 03, 2007

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா!!