Sunday, July 08, 2007

யார் வள்ளல்

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!
எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம் எள்ளும் என எண்ணாமல் வழங்கினார்கள். அதனால் தான் அவர்கள் வள்ளல்கள், காலம் பல கடந்தும்.

<இடம் விட்டு வைக்கிறேன், இன்னொருவருக்காக. தொடரும்.>

No comments: