Wednesday, October 31, 2007

பொருட்பால் - அரசியல் - இடனறிதல் - 50

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பகைவரை முற்றுகையிடும் இடம் பார்த்த பின்னரே அதற்கான எந்த வேலையையும் தொடங்க வேண்டும். அது வரை அவனை இகழ்வதும் கூடாது.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பகையை எதிர்க்கும் வலிமை இருந்த போதும் தகுந்த காப்பு இருக்குமெனின் மிகுந்த பலன் கிடைக்கும்.

மொய்ம்பு - வலிமை

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பகைவருக்கு காவல் இல்லாத இடம் அறிந்து தன்னைக் காத்தவாறு மோதினால் வலிமை இல்லாதவரும் வலிவுற்று வெல்ல இயலும்.

ஆற்றார் - வலிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பகையை எதிர்கொள்ள ஏற்ற இடம் அறிந்து செல்லும் அரசனை வெல்ல நினைத்தவரின் எண்ணம் ஈடேறாது.

துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமான நீரினுள் முதலை வென்று விடும்; ஆனால் நீரை நீங்கினால் முதலை வெல்ல இயலாது.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

கடலில் தேர் செலுத்த இயலாது, நிலத்தில் கப்பல் ஓடாது.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

ஆழ சிந்தித்து ஏற்ற இடத்தில் செயல்படுவோருக்கு துணிவைத் தவிர வேறு துணை வேண்டிந்தில்லை.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சிறு படையாக இருந்த போதும் தனக்கேற்ற இடத்தை அடைந்து விட்டால் அதனை வெல்ல நினைத்த பெரும்படையின் ஊக்கம் அழிந்து விடும்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

காவலுடைய கோட்டையும், பெரும் வலிவும் இல்லாதவர் எனினும் அவருடைய இடத்தில் சென்று தாக்குதல் அரிது.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

போர்களத்தில் வேல் கொண்ட வீர்ர்களை பயமற்று முகந்து தூக்கும் யானைகள் ஆனாலும் சேற்று நிலத்தில் கால் சிக்கிக் கொள்ளும் எனில் நரிகளும் கொன்று விடும்.

அடும் - கொல்லும்

பொருட்பால் - அரசியல் - காலமறிதல் - 49

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பகலில் கூகையை எளிய காக்கை வென்று விடும். அது போல் பகைவரை வெல்லக் கூடிய தருணத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

காலத்துக்கு ஏற்றவாறு செயல்படுதல் செல்வத்தை நீங்காத படி கட்டும் கயிறு ஆகும்.

ஆர்க்குங் கயிறு - கட்டும் கயிறு

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

காரணங்களுடன் தகுந்த காலத்தில் செயல்படுவதைப் போல் சிறந்த செயல் இல்லை.

கருவி - காரணம்

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

தகுந்த காலம் கருதி செயல்பட்டால் உலகை வெல்வதும் இயலும்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

உலகை வெல்ல நினைப்பவர் மனம் தளராது அதற்கான காலத்தை எதிர் பார்த்து இருப்பர்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

வலிமை மிகுந்தவன் தகுந்த காலம் கருதி ஒதுங்குதல் செம்மறி ஆட்டு கிடா மிகுந்த விசையோடு மோதுவதற்காக பின் செல்வதை ஒத்தது.

தகர் - செம்மறி ஆட்டுக் கிடா

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பகைவரிடம் உடனே சினத்தைக் காட்டாமல் தகுந்த காலம் வரும் வரை உள்ளே சினந்திருப்பர் அறிவுடையோர்.

பொள்ளென - சல்லுனு மாதிரி விரைவுக்குறிச் சொல் (எ-கா) பொள்ளென விடிஞ்சிருச்சு
வேர் - சினம்
ஒள்ளியவர் - அறிவுடையவர்

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பகைவரை கண்டால் பணிந்திரு. அழியும் காலம் வரும்போது அவர் தலை கீழே விழும்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

சிறந்த நேரம் கூடி வரும் போது அந்த கணத்திற்காக காத்திருந்த செயல்களை உடன் செய்திடல் வேண்டும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

தளரந்த காலத்தில் கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல் காத்திருத்தல் வேண்டும். தகுந்த நேலம் அமையும் போது மீனை விரைந்து கொத்துதல் போல செயலை முடிக்க வேண்டும்.

சீர்த்த - வாய்த்த

பொருட்பால் - அரசியல் - வலியறிதல் - 48

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செயலின் வலிவு, தன் வலிவு, எதிரியின் வலிவு மற்றும் துணையாய் வரக்கூடியவரின் வலிவு போன்றவற்றை ஆராய்ந்து செயலில் இறங்கு வேண்டும்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தன்னால் இயலும் அளவு அறிந்து அதற்கேற்ற செயல்களில் ஈடுபடுபவர் செய்து முடிக்காத செயல் இல்லை.

ஒல்வது - இயன்றது

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தான் பெற்ற வலிமையை உணராது, ஆர்வக் கோளாறால் மிகுந்த ஊக்கம் தேவைப்படும் செயலில் இறங்கி இடையில் தடுமாறி தளர்ந்தவர் பலர்.

முரிந்தார் - முடியாது நின்றார்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

அயலரிடம் பொருந்தாமல், தன் வலிமை பற்றிய அறிவில்லாது, தன் வலிமையை வியப்பவன் விரைவாக அழிய நேரிடும்.

ஆங்கு - அயலர்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிற்பீலியாயினும் வண்டியில் அளவு மிகுந்து ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும்.

பெய் - ஏற்றுதல்
சாகாடு - வண்டி
சால - மிகவும்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

ஒரு மரத்தில் நுனிக்கொம்பு வரை ஏறிய பின்னும் அறிவற்ற ஊக்கத்தினால் மேலும் ஏற முயன்றால் அது அவன் உயிருக்கு இறுதியாகி விடும்.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

கொடுக்கும் போது தன் பொருளின் அளவறிந்து ஈதல் வேண்டும். அது பொருளை காக்கும் நெறி ஆகும்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

வரவுக்கு தகுந்த செலவு அமையுமானால் குறைவான வரவினால் துன்பம் இல்லை.

இட்டிது - சிறியது

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

தன் வருமானத்தின் அளவு அறிந்து அதற்குட்பட்டு வாழாதவன் வாழ்க்கை நிலையானது போன்று தோன்றி பின் அத்தோற்றமும் அழியும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தன்னிடம் உள்ள வளத்தின் அளவை ஆராயாமல் உதவி வந்தால் அவ்வளம் விரைவில் குன்றி அழியும்.

வல்லை - விரைந்து

பொருட்பால் - அரசியல் - தெரிந்து - செயல்வகை - 47

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு செயலினால் ஏற்படும் அழிவு, ஆக்க விளைவு மற்றும் கிடைக்கக் கூடிய வருமானம் ஆகியவற்றை சிந்தித்துப் பின் செயலில் இறங்க வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பின்னர் அதன் பலன்களை சீர்தூக்கி செயல்படுபவர் அடைய இயலாத பொருள் எதுவும் இல்லை.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

வரக்கூடிய செலவம் கருதி தான் முன்பு செய்த முதல் இழக்குக் படியான செயலை அறிவுடையவர் மைற்கொள்ள மாட்டார்கள்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

பிறர் பரிகசிக்கும் குற்றம் விளையும் என அஞ்சுபவர், தாம் தொடங்கும் செயல் குறித்து தெளிவு இல்லையெனில் தொடங்க மாட்டார்கள்.

இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம், குறைபாடு


வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

அனைத்து வழிகளையும் ஆராயாமல் படை மேற்கொள்ளல் பகைவரை, வளர் நிலத்தில் நிறுத்தும் (வசதியான சூழலில்) வழிகளில் ஒன்று.

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்யத் தகாததை செய்வதும் கெடுதல்; செய்யக்கூடியதை செய்யாமலிருத்தலும் கெடுதல்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

நன்கு ஆராய்ந்து ஒரு செயலில் இறங்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என இறங்குதல் இழுக்கு ஏற்படுத்தும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

சரியான வழியில் செய்யாத முயற்சி பலர் காத்து நின்றாலும் தவறாக முடியும்.

வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப் படும் - தவறாக முடியும்

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவர் இயல்பு அறியாமல் செயலில் இறங்கினால் நல்ல செயலும் தவறாக முடியும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தமது இயல்புக்கு ஒவ்வாத செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது அறிந்து பிறர் நகைக்காத செயல் என ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Tuesday, October 30, 2007

பொருட்பால் - அரசியல் - சிற்றினம் - சேராமை - 46

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோர் சிற்றினம் சேர்தல் குறித்து அஞ்சுவர். சிறுமைக் குணமுடையோர் அவர் தம் சுற்றம் எனக் கூடுவர்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

நீரின் குணம் அது சேர்ந்த நிலத்தை ஒத்தது. மனிதருக்கு தாம் சேரும் இனத்தை ஒத்தது.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

மனிதருக்கு உணர்வு மனதைப் பொருத்து அமைவது போல் சார்ந்த இனத்தால் அவன் தன்மை அமையும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

ஒருவனின் அறிவு மனதின் கண் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் அவன் சேர்ந்த இனத்தால் அமையும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

சிந்தனை, செயல் இரண்டின் தூய்மையும் ஒருவன் சேரும் இனத்தால் அமையும்.

தூவா - பற்றுக்கோடு, சார்பு

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனத்தூய்மை உடையவர்களுக்கு நல் மக்கள் பிறப்பர். இனத்தூய்மை அடைந்தார்க்கு செய்வன அனைத்தும் நற்செயல்களாய் அமையும்.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

நல்ல மனம் மனிதருக்கு ஆக்கம் தரும். நல்ல இனம் எல்லா புகழையும் சேர்க்கும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

நல்ல மனம் படைத்திருப்பினும் சான்றோர்களுக்கு நல்ல இனம் சேர்வதே வல்லமையைத் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மனத்திற்கு ஏற்றபடி மறுமை கிட்டும். அம்மறுமையும் சேரும் இனத்தின் தன்மையால் மாறக்கூடியது.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

நல்ல இனத்தருடன் சேர்வது மிகச்சிறந்த துணை. தீய இனத்தருடன் இழைவது துன்பத்தைத் தருவதாகும்.

பொருட்பால் - அரசியல் - பெரியோரைத் - துணைக்கோடல் - 45

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அரசன் அறம் பற்றிய அறிவுடன் தன்னில் சிறந்த அறிவுடையோரின் நட்பின் திறன் குறித்து ஆய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

அரசன் நாட்டில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி, துன்பம் வரும் முன் காக்கும் தன்மை உடையவரை உடன் பெற்றிரித்தல் வேண்டும்.

பெற்றியார் - தன்மையுடையவர்

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

போற்றக்கூடிய குணங்கள் வாய்ந்த பெரியவர்களைத் துணைக் கொள்வது அரசனது சிறப்புகள் எல்லாவற்றிலும் சிறந்ததது.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

அருங்குணத்தால் தன்னைவிடப் பெரியவர்களைத் துணைக்கொள்வது அரசனுக்கு மிகுந்த வலிமையைத் தரும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

ஆய்ந்து கூறும் அமைச்சர்களை கண் போல் போற்றும் மன்னன், அத்தகையோரை அவர் திறம் ஆய்ந்து துணைக்கொள்ள வேண்டும்.

சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

தக்க பெரியோரைத் துணையாகக் கொண்ட மன்னனுக்க் பகைவரால் வரும் தீது ஏதும் இல்லை.

செற்றார் - பகைவர்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

தவறுகளைச் சுட்டி மன்னன் நலம் நாடி கடிந்து கூறத்தக்கப் பெரியவர்களைத் துணையாகக் கொண்ட மன்னனுக்கு கேடு விளைவிக்க வல்லவர் யார்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

மேற்கண்டவாறு இடித்துக் கூறும் துணையோரின் காவல் இல்லாத மன்னன் அழிவதற்கு பகைவர் எவரும் தேவை இல்லை.

ஏமரா - காவலற்ற

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

முதல் இல்லாத வணிகருக்கு வருமானம் இல்லை. அது போல் தாங்கும் துணையற்ற அரசனுக்கு நிலைத்த தன்மை வாய்க்காது.

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்ல பெருமக்களின் தொடர்பைக் கைவிடுதல் அரசனுக்கு பலரின் பகையை தனியே கொள்வதைப் போல் பத்து மடங்கு தீமையைத் தரும்.

பொருட்பால் - அரசியல்- குற்றம் - கடிதல் - 44

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

அகந்தையும், சினமும், சிறுமை குணமும் இல்லாதவர்கள் செல்வம் பெருகும் தன்மையுடையது.

பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பேராசையும், மாண்பு இல்லாத மானமும் (இழிவு நிலை), அளவற்ற மகிழ்ச்சியும் கொண்டாடுவது அரசனுக்கு ஒவ்வாதது.

இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
ஏதம் - குற்றம்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

சிறிதளவே குற்றம் நேர்ந்தாலும் பெரிய (பனை உயர) அளவு குற்றம் செய்யததாக வருந்துவர், அதனால் வரும் பழிச்சொல்லுக்கு அஞ்சுபவர்கள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

குற்றம் அழிவு தரும் பகையாகும் ஆதலால் குற்றம் வராத வாழ்க்கை வாழ்வதைப் பொருளாகக் கொள்ள வேண்டும்.

அற்றம் - அழிவு

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் வருமுன்னர் அதிலிருந்து தன்னை கத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை எரியும் கொள்ளி முன்னர் வைக்கப் பட்ட வைக்கோல் போல அழியும்.

வைத்தூறு - வைக்கோல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?

தன்னுடைய குற்றம் நீக்கி பின்னர் பிறர் குற்றத்தை ஆராயும் அரசனை யார் குற்றம் சொல்ல முடியும்.

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பெற்ற செல்வத்தால் செய்யக்கூடிய நல்லனவற்றைச் செய்யாமல் இன்னும் பேராசை கொள்பவனின் செல்வம் தங்காமல் அழியும்.

உயல் - இருத்தல்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

பற்று கொண்ட உள்ளம் என்னும் பேராசை மற்ற குற்றங்களுள் வைத்து எண்ணப்படும் குற்றம் இல்லை, தனிப்பெரும் குற்றம் ஆகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

தன்னைத் தானே வியக்காதிருத்தலும், நன்மை பயக்காத செயல்களைச் செய்யாதிருத்தலும் வேண்டும்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

தான் விரும்பிய பொருளை பிறர் அறியா வண்ணம் நுகரக் கூடியவனின் பகைவர் கருதும் சூழ்ச்சி பலிக்காது.

காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்

அறிவுடமை-அரசியல்-அறிவுடமை-43

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு அழிவிலிருந்து ஒருவனைக் காக்கக் கூடியது. அது ஒருவனுக்குப் பகைவராலும் வெல்ல முடியாத பாதுகாவலாகும்.

அற்றம் - அழிவு

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

செல்லக்கூடிய வழிகளிலெல்லாம் செல்ல விடாமல் தீமையை விலக்கி, நன்மையை அடையச் செய்வது அறிவு

-- மனம் போகின்ற போக்கிலெல்லாம் அதனைப் போகவிடாமல் தடுத்து, (அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து) தீமைகளிலிருந்து விலக்கி( தீது ஒரீஇ), நல்லனவற்றை நோக்கி மனதினைச் செலுத்துவது அறிவு ஆகும்.

ஒரீஇ - விலக்கி

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எந்த செய்தியையும், எவர் சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை ஆராய்ந்து காணச் செய்வது அறிவு.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

தான் சொல்வது அரிய பொருளாயினும், பிறர்க்கு எளிதாகப் புரியும்படி சொல்வதற்கும்; பிறர் சொல்வதின் நுட்பமான பொருளை உணரவும் உதவுவது அறிவு.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

உலகத்தை நட்பாக்கும் அறிவு, முன்னர் விரிதலும், பின் சுருங்குதலும் இன்றி ஓர் நிலையில் நிற்பதாகும்.

-- ஒருவன், இருக்கும் இடத்தின் சூழலுக்கேற்ப உலக வழக்கைத் தழுவி நடப்பது அறிவான செயல்தான். ஆனால், உலகத்தார் மகிழ்வதற்கெல்லாம் மகிழ்வதும், வருத்தப்படுவதற்கெல்லாம் வருந்தாமலும் இருக்கச் செய்வது அறிவாகும்.

தழீஇ - தழுவுதல்
ஒட்பம் - அறிவு
கூம்பல் - சுருங்குதல்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

உலகத்தோடு ஒத்து வாழச் செய்வது அறிவு.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறிவுடையவர் வரவதை முன்பே ஊகித்து அறிவர்; அறிவிலார் வந்த பின்னே அறிவர்.

-- அறிவுடையோர், பின்னால் வரக்கூடிய நன்மை, தீமைகளை முன்னமே ஆராய்ந்து அறிந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர்; அறிவிலாதவர்களால் அங்ஙனம் அறிய இயலாது.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்ச வேண்டிய தீயவற்றிற்கு அஞ்சுபவர் அறிவுடையோர்; அவ்வாறின்றி, அஞ்சாமல் அணுகுபவர் அறிவில்லாதவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

எதிர் வருவதை அறியக்கூடிய அறிவுடையவர்க்கு, நடுங்க வைக்கும் துன்பம் வருவதில்லை.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

எப்பொருளும் இல்லையாயினும், அறிவுடையவர்கள் அனைத்தும் உடையவர்களாவர்; அறிவில்லாதவர்கள் எவை பெற்று இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களாவர்.

பொருட்பால்-அரசியல்-கேள்வி-42

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

ஒருவர் பெறக்கூடிய செலவங்களுல் எல்லாம் தலையானது செவி வழி கேட்டுப் பெறும் அறிவு ஆகும்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவி வழி கேட்கும் கல்வி இல்லாத போது வயிற்றுப் பசி போக்க முனைய வேண்டும்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

செவிவழி பெற்ற அறிவுடையவர் நிலத்தில் வாழும் கடவுளை ஒத்தவர்.

அவி உணவு - வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் உணவு, அவிர் பாகம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

முறையான கல்வி பயிலாவிட்டாலும் கேள்வி அறிவு ஒருவன் தளர்ந்த, வறுமை அடைந்த பொழுது கை கொடுக்கும்.

ஒற்கம் - தளரந்த, வறுமை
ஊன்று, ஊற்று எனத் திரிந்தது.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

ஒழுக்கம் நிறைந்தவரின் அறிவுரை கேட்பது வழுக்கும் இடத்தில் ஊன்று கோல் போல் உதவும்.

இழுக்கல் உடைய உழி - வழுக்கல் உடைய நிலம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

சிறிய அளவினது ஆயினும் நல்லதைக் கேட்டு அறிதல், நிறைந்த பெருமையைத் தரும்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

செறிந்த அறிவுடையவர் பிழையாகக் கூட அறியாமை நிறைந்த சொல்லைக் கூற மாட்டார்கள்.

ஈண்டிய - செறிந்த

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

அறிவார்ந்த சொற்களைக் கேளாத செவி, கேட்குந் திறனிருந்தாலும் செவிடாகவே கொள்ளப் படும்.

தோட்கப் படாத - துளைக்கப் படாத

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

நுட்பமான அறிவில்லாதவர்கள் பணிந்த சொற்களை உடையவராய் இருத்தல் அரிது.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?

செவியினால் அறிவினைப் பெறாமல், வாயினால் சுவை உணரந்து நன்கு புசிப்பவர்கள் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

அவிதல் - ஒழிதல்

பொருட்பால்-அரசியல்-கல்லாமை-41

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

முறையான அரங்கம் இன்றி சூதாடுபவன் நிலை கற்ற அறிவின்றி அவையில் பேசுபவனுக்கு நேரும்.

அரங்கம் - ஆடுமிடம்
வட்டாடுதல் - சூதாடுதல்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள்
பெண்காமுற் றற்று.

கல்லாதவன் அவையில் பேச விழைவது முலை இரண்டுமின்றி (பெண் அடையாளமின்றி)பெண்மையை வேண்டுபவளைப் போன்றது.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர் இருக்கும் போது முந்திக் கொண்டு பேசாதிருக்கும் கல்லாதவரும் நல்லவரே.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனின் அறிவு (சில நேரங்களில்) சிறந்ததாகப் பட்டாலும் அதை அறிவுடையவர் கருத்தில் கொள்ள மாட்டார்.

ஒட்பம் - அறிவு
கழிய - மிகவும்

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாதவன் தன்னைக் கற்றவரைப் போல் கொண்டாடும் உயர்வு, கற்றவருடன் பேசத் துவங்கியதும் கெடும்.

தகைமை - உயர்வு

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவரை களரைப் போல் பயனின்றி வெறுமனே 'இருக்கிறார்' எனக் கொள்ளலாம்.

மாத்திரையார் - அளவுடன் இருப்பவர்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நூல் ஆய்ந்து பெறும் கூர்மையான அறிவற்றவன் எழுச்சி மண்ணாலான பொம்மையின் எழுச்சியைப் போன்றது.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கல்லாதவர்களுக்கு கிடைக்கும் செல்வம், நல்லவர்களுக்கு ஏற்படும் வறுமையைக் காட்டிலும் துன்பமானது.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பிறப்பால் உயரந்த குடி ஆனாலும் கல்லாதவர், கீழ்குடி பிறந்த கற்றவரின் பெருமையை அடைய முடியாது.

பாடு - பெருமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

விலங்குகளை, மக்களோடு ஒப்பிட்டு வேறுபாடறிவது போல் கல்லாதவரை, நூல்களை விளங்கக் கற்றவரோடு ஒப்பிட்டு அறியலாம்.

அனையர் - ஒப்பர்
இலங்க - விளங்க

Monday, October 29, 2007

பொருட்பால்-அரசியல்-கல்வி-40

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பிழையின்றி கற்று, பின் கல்வி தந்த அறிவின் வழி செல்லல் வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

மொழியின் கூறுகளாகிய எண், எழுத்து தொடர்ந்த அறிவு வாழ்க்கையில் கண்கள் போல் வழிகாட்டுபவை.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கல்வி கண்களைப் போல் வாழ்வில் வழி காட்டும். அத்தகைய கல்வி அறிவில்லாதவர் கண்கள் இருந்தும் குருடர்களாவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

கற்றறிந்தவர் மகிழ்வுடன் கூடி (பிரிவதை எண்ணி) வருத்தத்துடன் பிரிவர்.

உள்ள - மன வருத்தம்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

உள்ளவர் முன் பொருள் வேண்டி நிற்பவர் போல் ஏக்கத்துடன் விரும்பி கற்பவர் உயர்வடைவர். அவ்வாறு பணிவு காட்ட மறுத்துக் கல்லாதவர்கள் கடை நிலை எய்துவர்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

கேணி நீர் தோண்ட ஊறும்; அது போல் கற்கப் பெருகும் அறிவு.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்பவனுக்கு எந்த நாடும், ஊரும் சொந்தமெனத் தெரிவதால், இறப்பு வரையிலும் ஒருவன் தொடர்ந்து கற்காமல் நாளைக் கழிப்பது எப்படி?

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒருமுறை கற்ற கல்வி, ஏழுபிறப்பிற்கும் ஒருவருக்கு துணை இருக்கும்.

ஏமாப்பு - காவல், துணை

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கற்றதால் தாம் இன்புறுவது அல்லாமல் உலகமும் இன்புறுவது கண்டு மேலும் கற்க விரும்புவர் கற்றவர்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

அழிவில்லாத சிறப்புடைய செல்வம் கல்வி. ஆதலால் கல்வி தவிர மற்றவை செலவமாகாது.

பொருட்பால்-அரசியல்-இறைமாட்சி-39

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

வலிமையான படையும், நல்ல குடிமக்கள், தேவையான செல்வம் (பொன் மற்றும் தானியம்) , சிறந்த அமைச்சரவை, உறுதியான நட்பு, வலுவான அரண் ஆகிய ஆறு வகையான சிறப்புக்களும் உடையவன் அரசர்களுக்குத் தலைவன் போன்றவன்.

கூழ் - பொன், உணவு

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பகைக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் முதலிய குணங்களை குறையாமல் இருப்பது அரசருக்கு இயல்பானது.

எஞ்சாமை - குறைவின்றி

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

நிலம் ஆளும் அரசர்களுக்கு விழிப்போடிருக்கும் நிர்வாகம், அவ்வாறு நடப்பதை அறிவதற்கான கல்வி, பகையை துணிவுடன் எதிர்கொள்ளுதல் ஆகிய திறன்கள் நீங்காதிருக்கும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

அறன் ஒவ்வாதவற்றை விலக்கலும், தன் வீரத்திற்கு இழுக்கு ஏற்படாமல் காத்தலுமே ஒரு அரசுக்கு மானமாக கருதப்படும்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

ஒரு நல்ல அரசானது தகுந்த விதிகளின் மூலம் கருவூலம் சேர்த்து, அதனைக் காத்து, பின்னர்த் திட்டமிட்டு பயன் நிறைந்த வழியிற் செலவிட வேண்டும்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

புகழ் வாய்ந்த மன்னன் மக்கள் அணுகும் வண்ணம் எளிமையாகவும், அவர்கள் குறையை அன்போடும் கேட்பவனாகவும் திகழ்வான்.

மீக்கூறுதல் - உயர்த்திச் சொல்லல்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

இனிய சொல்லால் வரவேற்று தேவைகேற்ற படி வழங்கும் மன்னன், இவ்வுலகம் வேண்டாம் என்று அவனாக சொன்னால் தான் உண்டு. அதாவது, உலகமே அவன் வசப்படும்.

கண்டனை - (வேண்டாமெனத்) தள்ளுதல்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

மக்களின் பல்வேறு தேவைகளை காலத்திற்கேற்ப அறிந்து செயலாற்றும் மன்னன் இறைவனை ஒத்தவனாக்க் கருதப் படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

செவிக்கு அலங்காரமான சொற்களைப் (அரசின் நலன் நாடி இடித்துரைப்பதாயினும்) பொறுக்கி (தேர்ந்தெடுத்து) ஏற்கும் பண்புடைய மன்னன் குடையின் கீழ் இந்த உலகம் விரும்பி வரும்.

கைப்ப - அலங்காரமான

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

வாழ்வுக்கு தேவையானதை வழங்கல், இன்முகம் காட்டல், நீதி வழுவாத ஆட்சி, தளர்ந்த குடிமக்களைப் பேணுதல் முதலியவற்றை பேணும் அரசன் பிற அரசர்களுக்கு வழிகாட்டி ஆவான்.

Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -ஊழ் -38

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

ஆகுவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.

அசைவின்மை -முயற்சி
ஊழ் -பழவினை

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

இழப்பதற்கான ஊழ் ஒருவனை பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் அறிவை விரிவாக்கி பல நன்மைகளைத் தரும்.

அகற்றும் -விசாலப்படுத்தும்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

நுண்மையான நூல்கள் பலவற்றை கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தாற்படி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும்; செல்வமுடையராதல் வேறு; அறிவுடையராதல் வேறு.

திரு -செல்வம்
தெள்ளியர் -அறிவுடையோர்


நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயன நல்லனவாதலும்,தீயூழால் நல்லவை தீமை தருவதாக மாறுவதும் உண்டு.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

நல்லூழ் இல்லாத போது வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடம் நில்லாமற் போகும்; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழினால் நம் பொருள் போகாது.

பரியினும் -வருந்திக் காப்பாற்றினாலும்
பால் -ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

ஊழினை வகுத்தவன் வகுத்தபடி அல்லாமல், கோடியாக பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றை அனுபவித்தல் என்பது அரிதாகும்.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வந்தடைவதற்கான இன்பங்கள் வாராமல் போனால், துய்க்கும் பொருளில்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

ஊழால் நன்மைகள் விளையும் போது, அவற்றை நல்லவையாகக் கருதுபவர்கள், அஃது இல்லாத காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

ஊழைக்காட்டிலும் வலிமையானவை எவை? மற்றொன்றை வலியதெனக் கருதினாலும் அங்கும் ஊழே வந்து நிற்கும்.

அறத்துப்பால் -துறவறவியல் -அவாஅறுத்தல் -37

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

எல்லா உயிருக்கும், எக்காலத்திலும் பிறவி என்னும் பெருந்துன்பத்தைத் தருவது 'அவா'.

அவா -ஆசை

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

ஒருவன் எதையேனும் விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும்; அந்த நிலை அவாவற்ற நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.

அவாவற்ற தன்மை போன்ற இணையற்ற சிறந்த செல்வம் இவ்வுலகிலும் வேறு எவ்வுலகிலுமில்லை.

ஈண்டு -இவ்வுலகம்
ஆண்டு -மேலுலகம்


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

அவாவற்ற நிலையே தூய நிலை; அந்நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானே வந்து சேரும்.

அற்றவர் என்பர் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பிறவியற்றவர் என்போர் அவாவற்றவரே; மற்றையவர் அவர்போல் அவ்வளவாகப் பிறவியற்றவர் இலர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே அறமாகும். இல்லையேல் அந்த அவாவே அவனை வஞ்சித்துவிடும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

அவாவினை முழுவதும் அறுத்துவிட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பிய படியே வந்து வாய்க்கும்.

தவாவினை -நல்வினை

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

அவாவற்றவர்க்குத் துன்பம் என்பதும் இல்லை; அவா உண்டெனில் துன்பங்களும் முடிவில்லாமல் மென்மேலும் வளரும்.

தவாது -முடிவில்லாமல்

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

அவா என்னும் துன்பத்துள் கொடிய துன்பம் கெடுமானால், இம்மை வாழ்விலும் இன்பம் இடையறாது வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஈண்டு -இம்மை

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

ஒருபோதும் நிறைவுறாத இயல்புடைய அவாவினை ஒருவன் கைவிட்ட அக்கணமே பெரிதான இன்ப வாழ்வை அந்நிலைமை தந்துவிடும்.

ஆரா -நிறைவுறாத
பேரா -நிலையான

அறத்துப்பால் -துறவறவியல் -மெய் உணர்தல் -36

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

மெய்ப் பொருளல்லாதவைகளை மெய்யானவையென்று அறிகின்ற மயக்கத்தினால் மாட்சிமைப்படாத பிறவிகள் உண்டாகும்.

மருளானாம் -அறிவு மயக்கம்
மாணா -மாட்சிமையற்ற

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வறிவானது பிறவியாகிய இருளை நீங்கச்செய்து முத்தியாகிய இன்பத்தைக் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.

ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு, வையகத்தினும் வானுலகம் அண்மையானதும், அடையக்கூடியதுமாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

மெய்யுணர்வற்றவர்களுக்கு ஐம்புலன்களின் உணர்வுகளைப் பெற்றபோதும் அதனால் பயன் ஏதுமில்லை.

பயம் -பயன்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் எத்தகையத் தன்மையாய்த் தோன்றினாலும் அதன் மெய்யான இயல்பைக் காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

கற்க வேண்டியவற்றைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர் மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையை அடைவார்கள்.

ஈண்டு -இம்மை

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

என்றும் நிலையான மெய்ப்பொருளை உள்ளம் நிச்சயப்பட அறிந்துவிட்டதானால், மீண்டும் பிறவியுள்ளதாக ஒருவன் எண்ணவேண்டியதில்லை.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குத் துணையான செம்பொருளை அறிவதே மெய்யறிவு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

எல்லா பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வாரா.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றன் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.

அறத்துப்பால் -துறவறவியல் -துறவு -35

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

எந்த எந்தப் பொருள்களின் மீது ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபடுகிறானோ, அந்த அந்த பொருள்களைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

துன்பமில்லா வாழ்வை விரும்பினால் ஆசைகளை விட வேண்டும்; அவ்வாறு விட்டபின் அடையக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

ஈண்டு -இப்பிறப்பில்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். அப்புலன்கள் அனுபவிப்பதற்காகப் படைத்த பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும். ஆசை உளதானால் அது மீண்டும் உலக மயக்கத்துக்கு ஏதுவாகும்.

மயலாகும் -மயக்கத்துக்கு ஏதுவாகும்

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

பிறவியாகிய துன்பத்தை நீக்க முயல்வோர்க்கு உடம்பே மிகையான பொருளாகும். ஆகவே மற்றைய ஆசைகள் எதற்காக?

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை ஒழித்தவனுக்கு, வானோர்க்கும் மேலான உலகம் கிட்டும்.

செருக்கு -மயக்கம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பொருள்களின் மீதான பற்றுக்களை இறுகப் பற்றி விடாதவரை, துன்பங்களும் இறுகப் பற்றி விடாமலிருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

முற்றுந்துறந்தவர்களே முக்தியை அடைந்தவராவர். மற்றையோர் மயங்கி பிறப்பாகிய வலையில் அகப்பட்டவராவர்.

தலைப்பட்டார் -முக்தியடைந்தவர்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றுகள் அறுந்து போன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும். அவை அறாதபொழுது நிலையாமையானது அறியப்படும்.

மற்று -பற்றுகள் அறாதபொழுது

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

உலக பற்றுகளை விடுவதற்காக பற்றில்லாதவனான இறைவனது பற்றினையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்.

அறத்துப்பால் -துறவறவியல் -நிலையாமை -34

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற அறிவுடைமை மிகவும் இழிவானதாகும்.

புல்லறிவு -அற்ப அறிவு
கடை -இழிவு


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

ஒருவரிடத்து மிகுந்த செல்வம் வருதல், கூத்தாடுமிடத்தில் சேரும் கூட்டத்தைப் போன்றது. அச்செல்வம் போவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றது.

குழாத்து -கூட்டம் கூடுதல்
விளிந்தது -கலைந்து போகுதல்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வம் நிலையில்லாத் தன்மையுடையது; அதனைப் பெற்றால் அது நிலைப்பதற்கான அறங்களை அப்பொழுதே செய்ய வேண்டும்.

அற்கா -நிலையில்லாத

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், உயிரானது நாளென்று அளவு செய்யப்படுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி அறுக்கும் வாளினது வாயிடத்தது.

ஈரும் -அறுக்கும்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பேசாதிருக்கும்படி நாவை அடக்கி, விக்கலானது எழுவதற்கு முன்னே அறச்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நாச்செற்று -நாவை அடக்கி
விக்குள் -விக்கல்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

இந்த உலகம் 'நேற்று உள்ளவன், இன்று இல்லை' என்று சொல்லக்கூடிய நிலையாமையாகிய பெருமையை உடையது.

நெருநல் -நேற்று

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

அடுத்த பொழுது உயிர் வாழுமோ? வாழாதோ? என்று அறியாதவர்கள் நினைப்பது கோடியும் அல்ல; அதனினும் அளவற்றது.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

தான் இருந்த கூட்டைத் தனியே விட்டு வெளியேறுதலைப் போன்றது, உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு.

குடம்பை -கூடு

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

மரணம் என்பது தூக்கத்தைப் போன்றது; உறங்கி விழித்துக் கொள்ளுவதைப் போன்றது பிறப்பு.

சாக்காடு -மரணம்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

உடம்பில் ஒரு மூலையில் குடியிருக்கும் உயிருக்கு, நிலையாகத் தங்குவதற்கு ஏற்ற இடம் அமையவில்லை போலும்.

புக்கில் -நிலையான இருப்பிடம்
துச்சில் -ஒதுக்கிடம்

அறத்துப்பால் -துறவறவியல் -கொல்லாமை -33

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.

கோறல் -கொல்லுதல்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

பசித்த உயிர்களுக்கு உணவைப் பங்கிட்டு, தானும் உண்டு, உயிர்களைக் காத்தலே அறநூலோர் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையானது.

ஓம்புதல் -காப்பாற்றுதல்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாதிருத்தலே; அதற்கு அடுத்ததாகக் கருதப்படுவது பொய்யாமை.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

முக்தியடைய நல்லவழியென்று கருதப்படுவது எதுவென்றால், எந்த ஓர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினை நினைத்தலே ஆகும்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

நிலையாமைக்கு அஞ்சி, பிறவாமைப் பொருட்டு துறவறம் மேற்கொண்டவர்களை விட, கொலைப்பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவர்களே சிறந்தவர்கள்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லாது உயிருண்ணும் கூற்று.

கொல்லாமையை மேற்கொள்பவனின் வாழ்நாளில், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒருபோதும் செல்லாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

தனது உயிரையே விடுவதற்கு நேர்ந்தாலும், பிற உயிரைக் கொல்லும் பாவச் செயலை ஒருபோதும் செய்யக் கூடாது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

கொலை செய்வதனால் வரும் செல்வம் பெரியதென்றாலும், சான்றோர்கள் அதை இழிவானதாகவேக் கருதுவர்

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

கொலைத்தொழிலையுடைய மக்கள், அத்தொழிலின் இழிவை அறிந்தவர்களது மனத்தில் இழித்தொழிலராய்த் தோன்றுவர்.

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுந்த உடலோடு உயிரும் நீங்காமல் துன்புறுகிறவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து நீக்கியவராவர்.

செயிருடம்பு -நோயுடம்பு

அறத்துப்பால் -துறவறவியல் -இன்னாசெய்யாமை -32

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

சிறப்புத் தரக்கூடிய பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற பெரியோரின் கொள்கையாகும்.

இன்னா -துன்பம்
கோள் -கொள்கை

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், மீண்டும் அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளர்களின் கொள்கையாகும்.

மறுத்து -மீண்டு

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

துன்பம் ஏதும் செய்யாத போதும் தீங்கு செய்தவர்க்கு, பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால் அதுவே பின்பு மீளா துன்பத்தைக் கொடுக்கும்.

உய்யா -மீளா
விழுமம் -துன்பம்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர், தாமே நாணும்படி அவருக்கு நன்மைகளைச் செய்தலாகும்.

ஒறுத்தல் -தண்டித்தல்

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பிற உயிரின் துன்பத்தைத் தமது போல் எண்ணாதவிடத்து அறிவினாற் ஆகும் பயன்தான் என்ன?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

துன்பம் தருபவையென்றுத் தானறிந்தவைகளை ஒருபோதும் மற்றவர்க்கு செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

யாதொரு காலத்தும், எவர்க்கும், எவ்வளவு சிறிதாயினும் துன்பம் தருவனவற்றை செய்யாதிருத்தலே முதன்மையான அறம்.


தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

தனதுயிர்க்குத் துன்பம் தருபவைகளை அறிபவன், பிற உயிர்களுக்கு அவற்றைச் செய்தல், எந்த அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்தால், பிற்பகலில் துன்பங்கள் தமக்குத் தானாகவே வந்து சேரும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

துன்பம் தருவன எல்லாம், துன்பம் செய்தவரையே சென்று சேர்வன. ஆகவே, துன்பப்படாமல் வாழ விரும்புகிறவர் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருப்பர்.

அறத்துப்பால் -துறவறவியல் -வெகுளாமை -31

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

தன் கோபம் செல்லக்கூடிய (தன்னின் மெலியார்) இடத்தில் அதனைக் காத்தவனே காத்தவனாவான். அது செல்லாத (வலியார்) இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.

தன் கோபம் தன்னின் வலியார் மேல் உண்டாயின் தனக்கே தீதாகும்; தன்னினெளியார் மேல் உண்டாயின் அதனினும் தீமையுடையது வேறில்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

தீய விளைவுகளனைத்தும் சினத்தினால் வருவதனால், யாவரிடத்தும் சினத்தை மறத்தலே நலமாகும்.

வெகுளி -சினம் (கோபம்)

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.

முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் கெடுக்கக் கூடிய சினத்தைவிட உயிருக்குப் பகையானது வேறு உண்டோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால், முதலில் சினம் எழாமல் காக்க வேண்டும்; இல்லையேல் அச்சினமே அவனைக் கொன்றுவிடும்.

சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினமாகிய கொடிய நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை மட்டுமல்லாமல் அவருக்குக் காவலாய் (இனமாய்) அமைந்த தெப்பத்தையும் சுட்டுவிடும்.

ஏமம் -பாதுகாவல்
புணை -தெப்பம்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

சினத்தைத் தன் வல்லமையைக் காட்டுகின்ற குணமென்று கொண்டவனின் கேடு, நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பலசுடர்களையுடைய பெரு நெருப்பு வந்து தழுவினாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும், கூடுமாயின் அவன்பால் வெகுளாமையே நலம்.

இணர் -பல சுடர்களையுடைய
தோய்வன்ன -தழுவினாற் போன்ற
புணரின் -கூடுமாயின்

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

தன் மனத்தாலும் கோபத்தை நினையாதவன், நினைத்தது எல்லாம் ஒருமிக்க பெறுவான்.

உள்ளான் -நினையான்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

அளவுகடந்த கோபத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை ஒழித்தவரே சாவை வென்றாரொடு ஒப்பாவார்.

அறத்துப்பால் -துறவறவியல் -வாய்மை -30

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
'வாய்மை' என்பது யாதென்றால், பிறருக்குத் தீமையில்லாத சொற்களை எப்போதும் சொல்லுதல் ஆகும்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

குற்றமில்லாத நன்மை தருவதென்றால், பொய்யான சொற்கள் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதப்படும்.

புரைதீர்ந்த -குற்றமில்லாத

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசினால் அவன் நெஞ்சே அவனைச் சுடும்.

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவன் தன் மனத்தால் பொய்யாது நடப்பானாயின், அவன் உயர்ந்தோரது உள்ளங்களில் எல்லாம் இருப்பான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்வானாயின், அவன் தவத்தோடு தானமும் செய்வாரினும் சிறப்புடையவனாவான்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதுமில்லை; அதில் தளராமல் உறுதியாய் இருத்தலே எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன், பொய்யாமை என்னும் அறம் பொய்யாகாமல் நடப்பானாயின், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாமலேயே அது அவனுக்கு மிகுந்த நன்மை தரும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

புறஉடலின் தூய்மை நீரால் ஏற்படும்; மனத்தின் தூய்மை வாய்மைச் சொற்களால் அறியப்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

சான்றோர்களுக்கு, புறத்திருளைப் போக்குகின்ற விளக்குகள் எல்லாம் சிறந்த விளக்காகா; அகத்திருளைப் போக்குகின்ற பொய்மையாகிய விளக்கே அவற்றினும் சிறந்ததாகும்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள், வாய்மையினும் சிறப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

Saturday, October 27, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -கள்ளாமை 29

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

உலகத்தாரால் இகழப்படாமல் வாழவிரும்புவோன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை காத்தல் வேண்டும்.

எனைத்தொன்றும் -எத்தகைய பொருளையும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.

'பிறன் பொருளைக் களவாடிக் கொள்வோம்' என்று ஒருவன் தன் மனத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக் கூடத் தீமையானதே.

உள்ளல் -எண்ணுதல்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

களவால் வந்தடையும் பொருளானது அளவுகடந்து பெருகுவது போலவே, விரைவாக அழிந்து விடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த ஆசையானது, அதன் விளைவுகளின் போது தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

விழுமம் -துன்பம்

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பொருளையே நினைத்து, பிறர் சோர்ந்திருக்கும் காலத்தை எதிர்பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை.

பொச்சாப்பு -சோர்வு

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

களவு நெறியில் மிகுந்த ஆசையுடையவர்கள், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

'களவு' எனப்படும் இருளடர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்தில் ஒருபோதும் இல்லை.

கார் -இருள்

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்வோர் நெஞ்சத்தில் 'அறம்' நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவர் நெஞ்சில் 'வஞ்சகம்' எப்போதும் நிறைந்திருக்கும்.

கரவு -வஞ்சனை.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவல்லாத பிற நல்ல வழிகளில் பொருள் சேர்த்து வாழ்தலை அறியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலே கெடுவர்.

வீவர் -கெடுவர்
தேற்றாதவர் -அறியாதவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

களவு செய்வார்க்கு உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப்போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவர் உலகத்து வாழ்வும் தவறாது.

தள்ளும் -தவறிப்போகும்
புத்தேள் உலகு -தேவருலகம்.

அறத்துப்பால் -துறவறவியல் -கூடாவொழுக்கம் -28

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையை, உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற ஐம்பூதங்களும் கண்டு தமக்குள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.

அருஞ்சொற்பொருள்

படிற்றொழுக்கம் -மறைந்த ஒழுக்கம் (பொய்யான நடத்தை)
அகம் -உள்ளம்வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

குற்றமென்று அறிந்தும், ஒருவனது மனம் அக்குற்றத்தில் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

மனத்தைத் தன்வழிப்படுத்தும் வல்லமையில்லாதவனது வலிய தவத்தோற்றமானது, பசுவானது புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒத்ததாகும்.

அருஞ்சொற்பொருள்

நிலைமையான் -இயல்புடையவன்
பெற்றம் -பசு

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் மறைந்துக் கொண்டு அல்லவைகளைச் செய்தல், வேடுவன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பதைப் போன்றதாகும்.

அருஞ்சொற்பொருள்

புள் -பறவை
சிமிழ்த்தல் -பிடித்தல்
அற்று -உவம உருபு (போன்றது, ஒத்தது)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

பிறர் தம்மை மதித்தர் பொருட்டுபற்றுகளை விட்டோமென்று கூறுவாரது பொய்யான ஒழுக்கம், அப்பொழுது இனியது போல் தோன்றினாலும், பின்னர் தாம் என்ன செய்தோம்? என்று எண்ணுமளவுக்கு துன்பங்களை அளித்துவிடும்.

அருஞ்சொற்பொருள்

எற்றெற்றென்று -(எற்று+எற்று+என்று) என்ன செய்தோம், என்ன செய்தோமென்று
ஏதம் -துன்பம்


நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

மனத்திலே ஆசையை விடாதாராகி, வெளியே ஆசையற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரை விடக் கொடியவர் யாருமிலர்.

அருஞ்சொற்பொருள்

வன்கணார் -கொடியவர் (இரக்கமில்லாதவர்)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

வெளித்தோற்றத்தில் குன்றிமணியைப் போல் செம்மையான தோற்றம் கொண்டவர் என்றாலும், உள்ளத்தே குன்றிமணியினுடைய மூக்கைப் போலக் கரியவரும் இவ்வுலகில் உள்ளனர்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

மனத்தின்கண் இருப்பது குற்றமாகவும், வெளித்தோற்றத்தில் மாண்புடையவர் போல் நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மக்கள் இவ்வுலகில் பலர் உள்ளனர்.

மாசு -குற்றம்
மாந்தர் -மக்கள்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

வடிவத்தால் செவ்வியதாயிருந்தாலும் அம்பு கொடுமை செய்வது, வளைந்திருந்தாலும் யாழ் இன்னிசைத் தருவது. அதுபோல் மனிதரையும் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடாது, அவரவர் செயல்தன்மைக் கொண்டே அறிய வேண்டும்.

கணை -அம்பு
செவ்விது -செம்மையானது
ஆங்கு -அவ்வகையே

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

உலகில் உயர்ந்தோரால் குற்றஞ்சொல்லப்பட்ட ஒழுக்கத்தை நீக்கிவிட்டாலேப் போதும். உயர்வுக் கருதி தலைமயிரை வளர்த்தலும், மழித்துக் கொள்ளுதலும் வேண்டுவன அல்ல.

அறத்துப்பால் -துறவறவியல் -தவம் -27

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலுமே தவத்திற்கு வடிவமாகும்.

நோன்றல் -பொறுத்தல்
உறுகண் -துன்பம்
அற்றே -அவ்வளவினதே


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே அத்தவம் கைகூடும். தவப்பயன் இல்லாதவர்கள் தாமும் அதனை மேற்கொள்வது வீணான முயற்சியாகும்.

அவம் -வீண்


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறவியர்க்கு உணவும், உடையும், உறையுளும் தந்து உதவுதலின் பொருட்டாகவே இல்லறத்தார்கள் துறவறநெறியை மேற்கொள்ள மறந்தனர் போலும்.

துப்புரவு -உணவு, உடை, உறையுள்
மற்றையவர்கள் -இல்லறத்தார்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தம்மறத்திற்குப் பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாகக் கைகூடும்.

ஒன்னார் -பகைவர்
தெறல் -கெடச்செய்தல்
உவந்தார் -விரும்பினவர்
ஆக்கல் -உயரச்செய்தல்


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பெறவேண்டிய பயன்களை வேண்டியபடியே (மறுமையில்) பெறலாமாதலால் தவமானது இம்மையிலேயே செய்யப்படுகிறது.

ஈண்டு -இம்மை

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தவஞ்செய்பவரே உயிர்க்கு நன்மை செய்பவர் ஆவார், மற்றையவர்கள் ஆசைக்குட்பட்டு தம் உயிர்க்குத் தீமை செய்பவர் ஆவார்.

அவம் -கேடு

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல தவஞ்செய்வாருக்கு அதனால் வரும் துன்பம் வருத்த வருத்த ஞானொளி மிகும்.

நோற்கிற்பவர் -தவஞ்செய்ய வல்லவர்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

தான் என்னும் செருக்கு தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமைப் பெற்றவனை, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வணங்கும்.


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவநெறியால் ஆத்ம வலிமைப் பெற்றவர்க்குத் தம்மிடத்தே வருகின்ற எமனையும் எதிராக நின்று வெற்றிக் கொள்ள முடியும்.

கூற்றம் -எமன்


இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உலகில் மெய்யறிவு இல்லாதவர் பலர் ஆனதன் காரணம், தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராகவும் இருப்பதே ஆகும்.

நோற்பார் -தவஞ்செய்வார்

Friday, October 19, 2007

அறத்துப்பால்-துறவறவியல்-புலால் மறுத்தல்-26

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

தன்னுடைய ஊனை பெருக்குவதற்கு பிறிதொன்றின் ஊனை உண்பவன் எப்படி அருள் கொண்டவர் ஆவான்.


பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளால் அதைப்போற்றாதவர்க்கு எந்தப்பயனும் இல்லை அதுபோல அருளால் ஊன் தின்பவர்க்கு எந்தப்பயனும் இல்லை


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

உடல்சுவையாகிய ஊனை உண்டவர் மனமானது படையைகொண்டவருக்கு எப்படி நல்லதை(கருணையை) நோக்காது இருக்குமோ அவ்வாறே இருக்கும்

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்

அருளில்லாத்து எதுவென்றால் கொல்லாதிருத்தல். அதற்கெதிர் கொன்று ஊன் தின்னுதல் என்னும் பாவச்செயல்

கோறல்- கொல்லுதல்
பொருளல்லது- நல்லது இல்லாத்து


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.


உயிர் நிலை பெறுவதற்கு ஊன் உண்ணாமை வேண்டும் அவ்வாறின்றி ஊன்உண்டால் (உமிழ்வதற்கு) வாய் திறவாது நரகம்(நரகத்தினிடம் விழுந்துவிடுவான்)

அண்ணாத்தல்- வாய்திறவாதிருத்தல்
அளறு- நரகம்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

தின்னுவதற்காக கொல்லாது இருந்தால் உலகத்தில் யாரும் விலைக்காக ஊனைவிற்க மாற்காட்டார்கள்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

புலால் உண்ணாமை வரும் எப்படி என்றால் புலாலானது மற்றொரு உயிரின் புண் என்று உணர்வு வரப்பெறின்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றமற்ற அறிவைப்பெற்றோர் உயிரின் தலைபிரிந்த ஊனை உண்ணார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

அவிசு எனப்படும் வேண்டு பொருட்களை சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட நல்லது ஒரு உயிரைப்போக்கி அதை உண்ணாமை.

செகுத்து- போக்கி
வேட்டல்- வேள்விகள்


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

கொல்லாதவனை, புலால் மறுத்தவனை எல்லா உயிரும் கைகூப்பி தொழும்

அறத்துப்பால்-துறவறவியல்-அருளுடைமை-25

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்.

பூரியார்- இழிந்தவர்

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

நல்ல வழியிலே தேடி அந்த அருளுடனே இருக்க, பல வழிகளை கற்று தேர்ந்தாலும் அதுவே துணை

இங்கே ஆற்றாள் என்பது மார்க்கம், இறைவழி என்றும் கொள்ளப்படுவதுண்டு.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

அருள் கொண்ட நெஞ்சினார்கு இருள்சேர்ந்த துன்பமான உலகம் இல்லை.


மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

உலகத்திலுள்ள உயிரகளை காத்து அருள்புரிபவர்க்கு இல்லை தன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டுமே என்னும் பயம்

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

இந்த வளமான உலகமே சாட்சியாகும் துன்பமானது அருள்கொண்ட மனிதருக்கு இல்லை என்பதற்கு


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

பொருள்நீங்கி (தான் துன்படுவதை) மறந்து வாழ்பவர் என்று கூறுப்படுபவர் யாரென்றால் அல்லாதவைகளை செய்து அருள் இல்லாமல் வாழ்பவர்களே.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அருளில்லார்க்கு மேலுலகமும் பொருளில்லாதவர்க்கு இந்த உலகமும் இன்பமானதாய் இருக்காது

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருளல்லாதவர்கள் கூட சிலநேரங்களில் செல்வம் கொழிப்பர் அருளில்லாதவர் அழிந்தவர்ளாகாமல் மீள்வது அரிது

அற்றார்- அழிந்தவர்
பூப்பர்- செல்வம் பெருவர்


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அருளில்லாதவன் செய்யும் அறமானது ஞானமில்லாதவன் மெய்ப்பொருளை கண்டது போலாகும்

தெருளாதான் - ஞானமில்லாதவன்.

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

ஒரு வலியவன் முன் தன் நிலைமையை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவேண்டும் எப்போதாகிலும் ஒரு மெலிவன் தன்னிடம் வரும்போது.

Thursday, October 11, 2007

அறத்துப்பால்- இல்லறவியல்- புகழ்- 24

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
ஈகை செய்வது புகழ்மிக்கவராய் வாழ்வது அது இல்லாமல் உயிர்வாழ்ந்து வேறுபயன் இல்லை
ஊதியம் - பயன்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

இவ்வுலகத்தில் உரைப்பது எல்லாம், இரந்து கேட்கும் மக்களுக்கு அவர் வேண்டிய ஒன்றை கொடுக்கும் ஈகைகுணம் உள்ளவர்க்கு சேரும் புகழாக
போய்ச்சேரும். அதாவது இந்த உலகத்தில் பெருமையாய் பேசும் எல்லாப்புகழும் ஈகைக்குணம் கொண்டோரைப்போய்ச் சேரும்.


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

உலகத்தில் இணையில்லாது ஓங்கிய புகழைத்தவிர அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றுமில்லை.
ஒன்றா - இணையில்லாது
பொன்றா- அழிவில்லாத்து

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
நிலத்தில்(உலகத்தின்) எல்லைவரை அல்லது இவ்வுலகத்தில் வாழ்வதற்குள்ள எல்லைகளுக்குள் புகழத்தக்க செயலை ஆற்றியவனை விட புலவரை(ஞானியரை) போற்றாது தெய்வங்களின் உலகம்.

புத்தேள்- தெய்வதின் உலகு.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
/************************************குறிப்பு********************************
இக்குறளுக்கு நிறைய விளக்கம் தர வேண்டிய அளவுக்கு இருக்கிறது
பல்வேறு வகையான விளக்கங்கள் இருக்கிறது. தனிப்பதிவாய் பிறகொருமுறை எழுதலாம்
*******************************************************************************/

வித்தகரைத்தவிர வேறுயாருக்கும் கைவரப்பெறாது எதுவென்றால் புகழுடம்புக்கு பெருக்கமும், புற உடம்பிற்கு வறுமையும் சேர்ந்து இறந்தபின் அதிகமாகும் புகழ்.

சங்கு போல தன் நிலை குன்றினாலும் பெருமை மிகுந்து, இறந்தபின்னும் புகழுடயவராய் வாழ்தலும் வித்தகர்கள் தவிர வேறு யாருக்கும் அரிது.

நத்தம் - சங்கு

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

தோன்றினால் (புகழோடு) புகழ்பெறத்தக்க குணமுடையவனாய் தோன்றவேண்டும் அப்படி இல்லாதவர் தோன்றாமல் போவதே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

புகழ் உண்டாக வாழமுடியாதவர் தன்னை இகழ்வாரை நோவது ஏன். தன்னைத்தானே அல்லவோ நோகவேண்டும்?

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
புகழுடைய வாழ்க்கை வாழ்ந்திராவிட்டால் இவ்வுலகத்தார் வசையாக வாழ்ந்ததாகவே கருதுவர்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

புகழில்லாத மனிதரை தாங்கிய நிலமானது (பழியில்லாத) வளம் குன்றும்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
வாழுபவர் என்று யாரைகூறலாமென்றால் வசைபெறாமல் வாழ்பவரே. புகழிழந்து வாழ்வோரெல்லாம் வாழாதவர்.

*********************இல்லறவியல் முற்றிற்று****************************

அறத்துப்பால்- இல்லறவியல்- ஈகை- 23

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

சுவர்க்கம் கிடைக்கும் என்றாலம் ஏற்றுக்கொள்ளுதல்(பிச்சை எடுத்தல், இருக்கும் போது ஏற்றுக்கொள்ளல்) தீதானது. சுவர்க்கம் கிடைக்காது எனினும் ஈய வேண்டும்.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

இல்லை என்னும் துன்பதை உரைக்காமல் இருப்பது ஈதல் என்னும் பெரும் பண்பையுள்ள குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே இருக்கும்.
எவ்வம் - துன்பம்

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

இரக்கப்படுதல் இனிமையானது இல்லை. இரந்தவர் இன்முகம் எப்போது அடைகிராறோ அப்போதே இரத்தல்போல இரக்கப்படுதலும் இனிமையானதாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவம் செய்பவர்களுக்கு பெரும் ஆற்றல் பசி இல்லாமல் போதல் அல்லது பசி பொறுத்தல் ஆனால் அந்த ஆற்றலையும் விட சிறந்தது கொடையினால் மாற்றுவார் ஆற்றலே.

ஆற்றுவார்- தவம் செய்பவர்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவறின் பசி தீர்த்தலே பொருளை பெற்றவன் பொருளை வைக்குமிடம். அதாவது தான் பெற்ற செல்வத்தை வைக்கும் இடம் எவ்விடமென்றால்
அடுத்தவர் பசி தீர்க்கும் இடமே.

அற்றார் - வறியவர்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

பகுத்து உண்ணுதல் என்னும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீப்பிணி என்றும் தீண்டாது.
பாத்தூண் - பகுத்துண்
மரீஇயவன்- பழகியவன்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

ஈந்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் யாரென்றால் தன் உடைமையை தானே வைத்துக்கொண்டு பின்பு அதை இழந்துவிடும் அருளில்லாதவர்களே
வன்கணவர்- அருளில்லாதவர்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

இரத்தல்(பிச்சை எடுத்தல்) இனிமையானது கிடையாது. அதையும் விட துன்பம் தரக்கூடியது நிச்சாயமாக எதுவென்றால் இது தன் செல்வம் போதாது என்று அடுத்தவர்க்கு கொடுக்காமல் தானே சேர்த்துவைத்து உண்ணுதல்.
மன்ற - நிச்சயமாக

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
சாதலே கொடுமையாது ஆனால் அதுவே இனிமை தரக்கூடியது அடுத்தவருக்கு கொடுக்க முடியவில்லை யென்றால்.

Wednesday, October 10, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒப்புரவு அறிதல் -22

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.

மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.

கடப்பாடு இங்கு ஒப்புரவு, ஒற்றுமை என்னும் பொருளில் வந்துள்ளது. கடமை என்ற பொருளும் உண்டு.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

முயன்று திரட்டிய பொருள் எல்லாம் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே.

வேளாண்மை - உதவி

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.

ஒற்றுமை போற்றுவர் தவிர மற்றவர்கள் இறந்தவர்களாகக் கருதப் படுவர்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

நீர் நிறைந்த குளம் போல், பரந்த மனம் உடையவனின் செல்வம் அனைவருக்கும் பயன்படும்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

நல்லவனின் செல்வம், மரத்தில் பழுத்த கனியைப் போல் எவருக்கும் இனிமையானது.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பெருந்தகையானவரின் செல்வம், மரம் மருந்தானது போல் முழுதும் பயன் வழங்க தவறாது.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

தம் கடமையை அறிந்தவர்கள் துன்பப் படும் காலத்திலும், ஒற்றுமையில் குறையாதவர்களாய் இருப்பர்.

இடன் - இடைஞ்சல்
ஒல்குதல் - சுருங்குதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பிறருக்கு உதவ முடியாத நிலையே நல்லவனுக்கு வறுமையாகக் கொள்ளப் படும்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஒற்றுமையால் வரும் கேடு எனின் ஒருவன் தன்னை விற்றும் பெற்றுக் கொள்ளலாம்.

Tuesday, October 09, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - தீவினை அச்சம் - 21

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.

விழுமியர் - சிறப்புடையோர்
செருக்கு - மயக்கம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும் ஆதலால் அவை தீயினும் கொடியதாக அஞ்சுவர்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

நம்மை வெறுத்தவருக்கும் தீமை செய்யாதிருப்பது நாம் அறிந்திருக்க வேண்டியவற்றுள் முதன்மையானது.

செறுதல் - கோபம், வெறுத்தல், கொலை

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது அப்படிச் செய்தால் அறமே அவனுக்கு கேடு விளைவிக்கும்.

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

துணை எதுவும் இல்லாதவன் என்று ஒருவனுக்கு தீயவை செய்தால், தாமே இல்லாதவனாகும் நிலை ஏற்படும்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் தன்னை வாட்டக் கூடாது என நினைப்பவன், பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது.

அடல் - வருத்துதல்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

எந்தப் பகையானாலும் மீண்டு விடலாம், தீவினையான பகை உடன் வந்து கேடு விளைவிக்கும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

தீயவை செய்தவருக்கு நிழல் போன்ற விலகாத கேடு சூழும்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

தன்னை நேசிப்பவன் என்றும் தீவினையை நெருங்குவதில்லை.

துன்னல் - நெருக்கம்

அருன்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

மதி மயங்கி தீய செயல் செய்யாதவன் கெடுதல் அரிது.

அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை-20

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.

பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது.

நயன் - நன்மை
நட்டார் - உறவினர்

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

ஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை.

பாரித்தல் - நிறைய

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்.

நீர்மை - சிறப்பு

பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி.

பதடி - அற்பன், பதர், ஒன்றுமில்லாத

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

சான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

சிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

அப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்.

பொச்சம் - குறை

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

சொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்.

அறத்துப்பால்-இல்லறவியல்-புறங்கூறாமை-19

அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

அறச்செயல் செய்யாதவன் ஆயினும், புறம் பேசாதவன் என்றால் நல்லதே.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

அறம் அழித்து தீயவை நெய்வதை விட தீமையானது ஒருவர் இல்லாத நேரம் புறம் பேசி பின் அவர் முன் சிரித்திருப்பது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.

புறம் பேசி வாழ்தலை விட, சாதலே அறம் கூறும் ஆக்கமுள்ள செயலாகும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

நேரில் பரிவு காட்டாமல் பேசினாலும் ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

ஒருவன் புறம் கூறும் சிறுமை உடையவன் எனின் அவன் அறம் பேணுபவன் இல்லை எனத் தெரிந்து கொள்ளலாம்.

புன்மை - சிறுமை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறந்தெரிந்து கூறப் படும்.

பிறரைப் பற்றி தவறாகப் பேசுபவன், அப்பழிச் சொற்களில் கீழானவற்றால் பழிக்கப் படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

இனிமையாக பேசி நட்பு பாராட்டத் தெரியாதவர்கள், புறம் பேசி உள்ள நட்பையும் இழப்பார்கள்.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

நண்பரிடம் குற்றம் கண்டு தூற்றுபவர் அயலாரை என்ன பேச மாட்டார்?

துன்னியர் - நண்பர்
ஏதிலார் - அன்னியர்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

புண்படுத்தும் சொற்களை கூறுபவனையும் சுமப்பது, அற வழியில் செல்வதால் என உலகம் ஆறுதல் படும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறரை குற்றம் காண்பது போல் தன் குற்றமும் ஆராய்ந்தால் அனைத்து உயிர்களுக்கும் தீமை எவ்வாறு ஏற்படும்?

மன்னும் - பெரும்பான்மை

அறத்துப்பால் - இல்லறவியல் - வெஃகாமை-18

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

நடுநிலை தவறுவதற்காக வெட்கம் கொள்ளுபவர், தன் நன்மைக்காக ஆசைப்பட்டு பழிக்கு அஞ்சி செய்ய மாட்டார்கள்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

தற்காலிக இன்பத்துக்கு ஆசைப்பட்டு அறத்துக்கு ஆகாத செயல் செய்யாதவரே, ஆழ்ந்த இன்பத்தை அடைய முடியும்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

தன் புலன்களை அடக்கி தவறான ஆசைகளை மறுப்பவர், வறுமையிலும் செம்மையுடையவர் ஆவர்.

புன்மை - வறுமை

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

ஆசையால் தவறான செயல் செய்ய துணிபவருக்கு, நுண்ணிய அறிவிருந்து பயன் என்ன?

அஃகி - நுண்ணிய

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருள் வேண்டி அதற்கான வழியில் நிற்பவன், பொருளுக்கு ஆசைப்பட்டு செயல் பட்டால் கேடு நேரும்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

ஆசையால் செய்யும் செயல் சிறப்புப் பெறுவது அரிது ஆதலால் ஆசையை கை விடுதல் நன்று.

மாண்டல் - மாண்பு - சிறப்பு

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

பிறருடைய பொருளுக்கு ஆசைப் படாமையே, குறைவற்ற செல்வம் தரும்.

அஃகாமை - குறைவற்ற

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

அறன் எதுவென அறிந்து செயல்படும் அறிவுடையோரிடம் செல்வம் தானாய்ச் சேரும்.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

துன்பம் நேரும் என எண்ணாமல் ஆசைப்படுபவனுக்கு துன்பம் நேரும். அத்தகைய ஆசையை வேண்டம் என வெறுப்பவருக்கு வெற்றி கிட்டும்.

இறல் - துன்பம்
விறல் - வெற்றி

Monday, October 08, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - அழுக்காறாமை -17

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

ஒருவரிடம் பொறாமை குணம் இல்லை எனில், அவரிடம் அதை விட சிறப்பு வேறு இல்லை.

விழுப்பு - சிறப்பு
அன்மை - இல்லாமை

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பிறரிடம் பொறாமை பேணுபவன் அறத்தினால் ஆன செயல்களை வேண்டாம் என தள்ளி விடுவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொறாமையினால் விளையும் தீமைகளை அறிந்தோர், அதனால் தூண்டப்பட்டு தீமைகளைச் செய்ய மாட்டார்கள்.

ஏதம் - துன்பம்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

பொறாமை உடையோருக்கு அதுவே கேடு விளைவிக்கும் பகையாய் விளங்கும்.

சால் - நிறைந்தஒன்னார் - பகை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறன் கொடுப்பதில் கூட பொறாமை கொள்ளும் ஒருவன், தன் சுற்றத்தாருடன் உண்ணவும், உடுக்கவும் இல்லாத நிலையை அடைவான்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை உடையவனை திருமகள் வெறுத்து மூத்தவளுக்குக் காட்டுவாள்.

செய்யவள் - திருமகள்
தவ்வை - மூத்தவள், மூதேவி

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொறாமை உடையவனின் செல்வம் அழிந்து, தீயில் வாட்டும் கொடுமையில் விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமை கொண்டவனால் நற்செயலும், நல்லவனால் கேடு விளைவதும் அரிது.

அவ்வியம் - பொறாமை
செவ்வியம் - அழகு, இல் வாழ்வு

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை, பொறாமை தவிர்த்ததால் ஒருவர் வீழ்ந்ததும் இல்லை.

இல்லறவியல் - திருக்குறள் - பொறையுடமை - 16

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

தவறைப் பொறுத்தல் நீங்காத புகழ் தரும் என்றாலும், அதனை மறத்தல் அதனிலும் நல்லது.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விருந்தினரை வரவேற்க இயலாத வறுமை மிகவும் கொடியது; மடமுடையோரின் செயலைப் பொறுத்தல் மிகுந்த வலிமை உடையது.

பொறை - பொறுமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

தான் பெற்ற புகழ் நிலைத்திருக்க நினைப்பவர் பொறுமையை கடை பிடித்தல் வேண்டும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

தன்னை தண்டித்தவரை வெறுக்காது பொறுத்து அரவணைப்பவரை பொன்னைப் போல் போற்றுவர்.

ஒறுத்தல் - தண்டித்தல்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

தண்டித்தவருக்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தவறுக்கு அவர் மறையும் வரை புகழ் நிலைக்கும்.

பொன்று - இறப்பு

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

பிறர் நமக்கு தவறிழைப்பினும் அதனால் வெகுண்டு அறன் அல்லாதவற்றை செய்தல் கூடாது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

ஆணவத்தால் தவறிழைப்பவரை, அவற்றைப் பொறுக்கும் தகுதியால் வென்று விடலாம்.

துறந்தாரின் தூய்மை உடையவர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

தன்னை இகழும் சொற்களைப் பொறுத்தோர் துறவிகளை விட தூய்மை உடையவராக கருதப் படுவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உண்ணாமல் நோன்பிருக்கும் பெரியார் ஆயினும், தன்னை இகழ்ந்துரைத்த சொற்களைப் பொறுத்தவருக்கு பின்னால் தான் வரிசைப் படுத்தப் படுவர்.

அறத்துப்பால் - இல்லறவியல் - பிறன் இல் விழையாமை-15

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

அறத்தின் பக்கம் நிற்பவர் யாரும் பிறன் மனைவியை நாடி நிற்கும் பேதையர் இல்லை.

விளிந்தாரின் வேறல்லார் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.

நன்கு தெரிந்தவர் வீட்டில் தீமை ஏற்படுத்துபவர் பிணத்துக்கு ஒப்பானவர்.

விளிந்தார் - உயிரற்றவர்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

தன் தவறான செயலைப் பற்றி திணையளவும் ஆராயாமல் பிறன் மனையில் நுழைபவருக்கு எவ்வளவு துணை இருந்தும் பழியிலிருந்து மீள முடியாது.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதாக தன் இழி செயலை நிறைவேற்றலாம் என அடுத்தவர் வீட்டிற்கு செல்பவருக்கு என்றும் விலகாத பழி நேரும்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

அடுத்தவன் மனைவியை கவர நினைப்பவனுக்கு வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி அகிய நான்கும் விலகாது.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

அறத்தினின்று வழுவாத இல்வாழ்க்கை நடத்துபவன், பிறன் மனைவியை நாடுவதில்லை.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பிறர் மனைவியை தவறாக நோக்காமை சான்றோருக்கு பேராண்மை மட்டுமன்றி அறன் சார்ந்த ஒழுக்கமும் ஆகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

கடல் சூழ் உலகில் பிறன் மனைவியின் தோள் தீண்டாதவரே நம் நலத்துக்குரியவர் ஆவார்.

நாமநீர் - உப்பு நீர்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

அறன் வழி நில்லாவிட்டாலும் பிறன் மனைவியை வேண்டாமை நன்று.

Sunday, October 07, 2007

அறத்துப்பால்- இல்லறவியல்- ஒழுக்கமுடைமை-14

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே வாழ்க்கைக்கு சிறந்தது என்பதால் அதை பேணிக் காத்திடல் வேண்டும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர் குடியினர் எனவும் அஃதிலார் இழிந்தவர் எனவும் கொள்ளல் தகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

ஒழுக்கம் தவறியவன் தான் இழிபிறப்பின் நிலை எய்தியதை காண்பான்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

மனத்தூய்மை இல்லாதவனின் செயல் பயனுடையதன்று, அது போல் ஒழுக்கமில்லாதனுக்கு உயர்வு வாய்க்காது.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கம் தவறியதால் நேரும் துன்பம் அறிந்தவர், ஒழுக்கத்தினின்று பிறழ மாட்டார்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கமுடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் தவறியவர் கொடும் பழியைப் பெறுவர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்ல செயல்களுக்கு நல்ல ஒழுக்கமே அடிப்படை; தீய ஒழுக்கம் தீமையையே தரும்.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கமுடையவர் தீயனவாயின் வாயால் கூட, தவறியும் கூற மாட்டார்கள்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பல கல்வி கற்றும் உலக வழக்கத்தை ஏற்று நடக்க கல்லாதவர் அறிவற்றவராகவே கருதப் படுவர்.

Friday, October 05, 2007

அறத்துப்பால்- இல்லறவியல்- அடக்கமுடைமை -13

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

ஒருவருக்கு அடக்கத்தைவிட அவரின் உயிர்க்குக் காவலாய் அமைவது வேறெதுவுமில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

ஒருவர் அறிவாற்றலுடன் அடக்கமுடனும் நடந்துகொள்வானாயின் அதுவே அவனுக்குப் பெருமையளிக்கும்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனே மலையைக் காட்டிலும் பெரியவனாய் கருதப்படுவான்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவு என்பது எல்லார்க்கும் நன்மையேயாயினும் செல்வந்தர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாகக் கருதப்படும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறவியில் ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கினால் அது அவனுக்கு ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பளிக்கும்.

அருஞ்சொற்பொருள்

ஏமாப்பு - பாதுகாப்பு

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

ஒருவன் தன் நாக்கை அடக்காவிட்டால் அதுவே அவனுக்குத் தீராதப் பழியை உண்டாக்கி விடும்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒரே ஒரு தீயசொல்லினால் அப்போது பொருட்பயன் கிட்டுவது போலிருந்தாலும் அதனால் விளையப்போகும் நன்மை ஒன்றுமில்லை.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஒருவரைத் தீயினால் சுட்டாலும் அது காலப்போக்கில் ஆறிவிடும், ஆனால் அவரின் மனம் புண்படும்படி பேசியது என்றும் ஆறாத்தழும்பாய் இருந்து வருத்தும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

தன் சினத்தை காத்து, கல்வி கற்று, அடக்கத்துடனும் நடப்பவனை அவன் வழியிலே சென்று அறக்கடவுள் அவனைத் தகுந்த காலத்தில் பார்க்கும்.

ருஞ்சொற்பொருள்

கதம் - சினம்
செவ்வி - தகுந்த காலம்