Monday, October 01, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடமை-8

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்பினை யாரும் உள்ளத்தே மறைத்து விட முடியாது. அவ்வாறு அன்பு கொண்டோர் (மறைத்து வைத்தோர்) பலரும் அறிய விடும் கண்ணீர் துளிகள் காட்டிக் கொடுத்து விடும்.

பூசல் - பலரும் அறிய, வெளிப்படையாக

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

உள்ளத்தில் அன்பில்லாதவர்கள் அனைத்தும் தமக்கே உரியது என தவறாக நினைத்து இறுமாப்படைவர். அன்புடையவர் தன் உயிரும் பிறர்க்கு பயன்படவே என அகம் மகிழ்வர்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

எவரையும் அன்புடனே அணுகும் இயல்பு, உயிரும், உடலும் இணைந்திருப்பது போன்று இயல்பானது.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

ஒருவர் மீது நாம் ஆர்வம் கொள்ள காரணமாகும் அன்பு, அவருடன் நாம் கொள்ளும் நட்பிற்கு அடிப்படை.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அன்புடன் வாழ்வதை இயல்பென கொண்டவர், இவ்வுலகில் இன்பமுற வாழ்வர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

மறவாழ்வுக்கும் அன்பே அடிப்படை என்பதை அறியாதவர்களே, அன்பு அறவாழ்வுக்கு மட்டும் உரியது என்பர்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லாத உயிர்கள் வெம்மை வாட்டுவது போல், அன்பில்லாத உயிர்களை அறம் வாட்டும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மனதில் அன்பின்றி உயிர் வாழ்வது, பாலை நிலத்தில் வற்றிப் போன மரம் துளிர்த்தலை ஒத்தது.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

அன்பில்லாத மனம் படைத்தோர், பயனுள்ள செயல் செய்தல் அரிது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியில் நில்லாதவனின் வாழ்க்கை உயிரற்ற உடல் கொண்டு வாழ்வதைப் போல் ஆகும்.

1 comment:

MSATHIA said...

நன்றாக இருக்கிறது இந்த பொழிப்புரை.