Wednesday, October 03, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல்-9

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்வாழ்க்கை மேற்கொண்டு வாழ்வது விருந்தினரை வரவேற்று ஈதலின் பொருட்டு.

வேளாண்மை இவ்விடத்தில் ஈதல், அறிந்து உதவுதல் என்னும் பொருளில் வந்துள்ளது.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தோம்பலை பண்பாக கொண்டவர் விருந்தினர் காத்திருக்கும் போது அமுதமே ஆயினும் தான் மட்டும் உண்ண மாட்டார்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விருந்தோம்பலை தன் கடமையாக கொண்ட வாழ்க்கையில் கேடு நேர்வது இல்லை.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள் நலம் தரும் இறைவி விருந்தோம்பலை கடமையாக கொண்டவன் இல்லத்தில் மகிழ்ச்சியுடன் உறைவாள்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தோம்பலை முதற்பொருளாக கொண்டவர், விதை நெல்லையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

விருந்தினர் அகமகிழ்ந்து சென்றபின் அடுத்து வரும் விருந்தினருக்காக காத்திருப்பவன் நல்ல விருந்தினன் என வானோர் காத்திருப்பர்.

*வருந்து எனும் சொல் விக்கிபீடியா, மதுரைத் திட்டம் போன்றவற்றில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும் போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

எவ்வகை செல்வம் உடையவர்களாக இருந்தாலும் விருந்தோம்பும் பண்பு இல்லையெனில் எதுவும் இல்லாதவர்களாகவே கருதப் படுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்தவுடன் குழையும் அனிச்சம் மலர் போல, நம் முகம் சுருங்கினாலே விருந்தினர் வாடிப் போய்விடுவர்.

No comments: