Thursday, October 04, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - இனியவை கூறல்-10

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இன்சொல் என்பது கனிவுடன், வஞ்சமின்றி உண்மை பேசுதலே ஆகும்.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

அகம் மலர்ந்து ஈதலை விட, முகம் மலரந்து இன்சொல் பேசுவது நல்லது.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

இனிய முகத்துடன், அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதால் ஆனதே
அறம் எனப்படும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாக்கும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பிறர் மனம் மகிழ இன்சொல் பேசுபவர் துன்புற்று வறுமையில் வாழ்வது இல்லை.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பிறரிடம் கனிவுடன், இன்சொல் பேசுவது, ஒருவருக்கு சிறந்த அணிகலன் ஆகும்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

நல்லவற்றின் பொருட்டு பேசப்படும் இனிய மொழிகள், தீயவற்றை விலக்கி அறத்தை நிலை நாட்டும்.

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பண்புடன் கூடிய இன்சொல் பேசுபவன், அதன் நல்ல பயனை அடைவான்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

சிறுமையற்ற இன்சொல் பேசுபவன், இவ்வுலகம் மற்றும் மறுமையில் இன்பமுடன் வாழ்வான்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

இன்சொல் பேசுவது இன்பம் தரும் என அறிந்தவர் கடுஞ்சொல் கூறுவதற்கு காரணம் உள்ளதா? இல்லை என்பது வெள்ளிடை.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கும் போது, கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிய பழம் இருக்கும் போது காயை விரும்புவதைப் போன்ற மடம் ஆகும்.

No comments: