Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -வெகுளாமை -31

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

தன் கோபம் செல்லக்கூடிய (தன்னின் மெலியார்) இடத்தில் அதனைக் காத்தவனே காத்தவனாவான். அது செல்லாத (வலியார்) இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.

தன் கோபம் தன்னின் வலியார் மேல் உண்டாயின் தனக்கே தீதாகும்; தன்னினெளியார் மேல் உண்டாயின் அதனினும் தீமையுடையது வேறில்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

தீய விளைவுகளனைத்தும் சினத்தினால் வருவதனால், யாவரிடத்தும் சினத்தை மறத்தலே நலமாகும்.

வெகுளி -சினம் (கோபம்)

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.

முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் கெடுக்கக் கூடிய சினத்தைவிட உயிருக்குப் பகையானது வேறு உண்டோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால், முதலில் சினம் எழாமல் காக்க வேண்டும்; இல்லையேல் அச்சினமே அவனைக் கொன்றுவிடும்.

சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினமாகிய கொடிய நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை மட்டுமல்லாமல் அவருக்குக் காவலாய் (இனமாய்) அமைந்த தெப்பத்தையும் சுட்டுவிடும்.

ஏமம் -பாதுகாவல்
புணை -தெப்பம்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

சினத்தைத் தன் வல்லமையைக் காட்டுகின்ற குணமென்று கொண்டவனின் கேடு, நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பலசுடர்களையுடைய பெரு நெருப்பு வந்து தழுவினாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும், கூடுமாயின் அவன்பால் வெகுளாமையே நலம்.

இணர் -பல சுடர்களையுடைய
தோய்வன்ன -தழுவினாற் போன்ற
புணரின் -கூடுமாயின்

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

தன் மனத்தாலும் கோபத்தை நினையாதவன், நினைத்தது எல்லாம் ஒருமிக்க பெறுவான்.

உள்ளான் -நினையான்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

அளவுகடந்த கோபத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை ஒழித்தவரே சாவை வென்றாரொடு ஒப்பாவார்.

No comments: