Thursday, October 04, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - செய்ந்நன்றி அறிதல்-11

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தக்க நேரத்தில் செய்த உதவி சிறிதென்றாலும், உலகில் பெரியதாகவே கொள்ளப் படும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பயன் கருதாது ஒருவர் செய்த உதவி, கடலை விடப் பெரியது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

சிறிய உதவியைக் கூட அதன் நன்மையை கருத்தில் கொண்டு பெரிதாக கருதுவர் பயன் அறிந்தவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி என்பது உதவியின் தன்மையை பொறுத்து அல்ல, உதவி பெற்றவரின் தன்மையைப் பொறுத்தது.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

நல்லவர் நட்பை மறக்கக் கூடாது. துன்பத்தில் தோள் கொடுத்தோர் நட்பை துறக்கக் கூடாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

தாங்கள் தாழ்வுற்று இருந்த போது தாங்கிய நண்பரை ஏழேழு பிறப்பிலும் மறக்கக் கூடாது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நற்பண்பல்ல. ஆனால் நல்லது அல்லாதவைகளை அன்றே மறத்தல் நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

கொலைக்கு ஒப்பான தீமை செய்தாலும், அவர் செய்த நன்மைதான் நினைவில் கொள்ளப் படும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தகைய நல்ல செயல்களை மறந்தாலும், தனக்கு உதவியவரை மறந்தவர்களுக்கு செழிப்பு சேராது.

No comments: