Sunday, September 30, 2007

அறத்துப்பால்-இல்லறவியல்-மக்கட்பேறு-7

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பெறு அல்ல பிற.

தன் அறிவை உணர்ந்த அறிவாற்றலுடைய மக்களைபெற்றதை விட பெரும் பேறு வேறெதுவுமில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பழியை பெறாத பண்புள்ள மக்களைபெற்றால் ஏழுதலைமுறைக்கும்(அல்லது ஏழு பிறப்பிலும்) தீமை நம்மை நெருங்காது

தம்பொருள் என்பதன் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாம் வரும்.

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

அமிழ்தினும் ஆற்ற இனிதெதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம் குழந்தைகள் தன் பிஞ்சுக்கரத்தால் அளாவும் கூழே அமிழ்த்த்தை விட இனியது

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

உடலுக்கு இன்பம் குழந்தைகள் தொடுவது, தழுவுவது. மற்றொறு இன்பம் அவர் சொல்கேட்டு செவி அடையும் இன்பம்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

தம்மிந்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரை காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

ஈன்ற் பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

ஈன்ற பொழுதே ஒரு தாய் பெரிதும் மகழ்ச்சிகொள்ளும் தருணம். அதையும் தாண்டி மகிழ்ச்சியை எப்பொழுது ஒரு தாய் அடைவாளெனில் அது தன் மகன் சான்றோன் என மற்றவர்
கூறுவதை கேட்கும் தருணமே

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகன் தந்தைக்கு செய்யும் உதவி 'இவனைப்பெறுவதற்கு எந்த நோன்பை நோற்று இவனைப்பெற்றான் இவன் தந்தை' என்ற சொல்லைக்கேட்பது.

3 comments:

முகவை மைந்தன் said...

தந்தை மகற்காற்றும் உதவி.. சரியான பொருள் விளக்கப் பட்டுள்ளது. இல்லையெனில் தகுதியில்லாத மகனையும் அவையில் பிறரை முந்தச் செய்வது என்னும் தவறான பொருள் வந்திருக்கும்.

முகவை மைந்தன் said...

இன்னொரு கேள்வி, தந்தை மக்களுக்கு உதவியும், மக்கள் தந்தைக்கு நன்றியும் அல்லவா செய்ய வேண்டும். ஒருவேளை, மழலைப் பருவத்தில் தரும் இன்பத்தால் தந்தை மகனுக்கு நன்றி இயம்ப நேர்ந்ததோ?

Sathia said...

நல்ல கேள்வி. இதே சந்தேகம் எனக்கும் வந்தது. என் புரிதல்.
1)
இது மக்கட்பேறு அதிகாரத்தில் வருவதால். மக்களே இந்த அதிகாரம் முழுவதும் முன்னிறுத்தப்படுகிறார்.அதனால் மகன் தந்தைக்காற்றும் உதவி, தந்தைமகற்காற்றும் நன்றி என்று வைத்திருக்கலாமோ?

2) திருவள்ளுவர் ஒரு உள்குத்து மாஸ்டர் என்றே நினைக்கிறேன். எல்லாவற்றிலும் ஒரு பொடி வச்சே இருக்கார். அதனாலேயே அந்த மாதிரி எழுதி இருக்கலாம். எப்படி வேணுமோ அப்படி புரிஞ்சுக்கோங்க அப்படின்னு.

3) இன்னோரு உள்குத்து கவனி, 'தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்', 'தம் மக்கள் மழலைச்சொல்' . தம் மக்கள் தான், அடுத்தவன் குழந்தையெல்லாம் இல்லை ;-)

4) கடைசியா.. ரொம்ப குழப்பிக்கொள்ளவேண்டாம் நன்றின்னா என்னான்னு அர்த்தம் பாத்தா. நல்லது செய்யறது கூட நன்றிதான். ;-)