Saturday, September 15, 2007

அறத்துப்பால் -பாயிரவியல் -வான்சிறப்பு-2

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மேகங்கள் நிலையாக மழைப் பொழிந்து வருவதால்தான் இவ்வுலக உயிர்கள் நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. ஆதலால் அது உலக உயிர்களுக்கு சாவாமருந்தான, அமிழ்தம் என்றறிவதற்கு உரியதாகிறது.

அருஞ்சொற்பொருள்
அமிழ்தம் -சாவாமருந்து
பாற்று - உரித்தானது



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை.

மழையானது, உண்ணும் உயிர்களுக்குச் சத்துள்ள நல்ல உணவை உருவாக்கித் தருவதோடு மட்டுமல்லாமல் அவ்வுயிர்களுக்குத் தானே உணவாகவும் அமைகிறது.

அருஞ்சொற்பொருள்
து -(துஞ்சுதல்) உண்ணுதல்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

வான்மழைப் பொழியாமல் போனால், கடல் சூழ்ந்த இப்பரந்த உலகத்தைப் பசி என்னும் கொடிய நோய் உள்ளிருந்து வருத்தும். மனித உடலுக்குள்ளே இருந்து வருத்தும் துன்பங்களில் கொடியது பசியாகும்.

அருஞ்சொற்பொருள்
விரிநீர் -கடல் நீர்
உடற்றும் - வருத்தும்.


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழையாகிய பெரிய வளம் இல்லாவிடில், நீர் நிலைகளும் நிரம்பாது. உழவர்கள் ஏர் பிடித்து உழமாட்டார். உலக உயிர்களைக் காக்கும் உழவுத்தொழிலும் நிகழாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் நின்று உயிர்களை வருத்துவதும், வருந்திய உயிர்களைப் பெய்து வாழ்விப்பதும் ஆகிய எல்லா நன்மை தீமைகளையும் செய்ய வல்லது மழை.

அருஞ்சொற்பொருள்
சார்வாய் -ஆதரவாய்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைக்காண்ப தரிது.

வானின் மழைத் துளி பூமியில் விழுந்தாலன்றி, இவ்வுலகில் சிறுபுல்லும் வளர இயலாது.

அருஞ்சொற்பொருள்
விசும்பு -வானம்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெருங்கடலிலிருந்து நீரை எடுத்துக்கொள்ளும் மேகம், மீண்டும் அந்நீரை மழையாகப் பொழிந்து, பூமிக்கு இறங்கிவராவிடில் நெடுங்கடலும் வற்றி விடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வான் மழை வாராது போனால், தேவர்களுக்காக, அவர்களை சிறப்பிப்பதற்காக இப்பூமியில் நடைபெறும் பூசையும், திருவிழாவும் மற்றும் எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறாது. மேலுலகத்திலுள்ள தேவர்களுக்கும் வறுமை வந்துவிடும்.

அருஞ்சொற்பொருள்
வானோர் -தேவர்கள்
வறக்கு - வறுமை

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இல்லறத்தார் செய்யும் தான தர்மங்களும், துறவறத்தாரின் தூய தவங்களும் இவ்வுலகில் தங்கு தடையின்றி நடைபெற வான்மழையே ஆதாரம் ஆகும்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

வான் மழை இல்லையானால் இவ்வுலகமும், உலக உயிர்களும் நிலைப்பெற்று வாழ இயலாததோடு, உயர்ந்த பண்புடைய மக்களின் ஒழுக்க நெறியும் நிலைபெறாது.

No comments: