Sunday, September 16, 2007

அறத்துப்பால் -பாயிரவியல் -அறன் வலியுறுத்தல்-4

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

ஒருவனுக்்கு சிறப்பையும், செல்வத்தையும் தரக்கூடிய அறத்தைக் காட்டிலும் உயிர்க்கு ஆக்கம் தருவது ஒன்றும் இல்லை.


அருஞ்சொற்பொருள்
ஆக்கம் -நன்மை


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒருவனுக்கு அறம் செய்வதே சிறந்த நன்மைத் தரும் செயலாகும். அவ்வறத்தைச் செய்யாமல் மறப்பதே அவனுக்குக் கேடு விளைவிக்கும் செயலும் ஆகும்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

ஒருவன் தம்மால் இயன்ற வகைகளில் எல்லாம் அறச்செயல்களை இடைவிடாது செய்ய வேண்டும்.

அருஞ்சொற்பொருள்
ஓவாது -இடையறாது

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


அறச்செயல்களில் ஈடுபடும் ஒருவனின் மனமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் செய்யும் அறச்செயலானது அறமாகக் கருதப்படாமல், வெறும் ஆராவாரத் தன்மையானதாகவேக் கருதப்படும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கனையும் விலக்கி நடத்தலே அறமாகும்.


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

ஒருவன் தன் இளமைக்காலத்தில், பிறகு செய்துக்கொள்ளலாம் என்று அறச்செயல்கள் செய்வதை கடத்தாமல் இளமைத் தொட்டே செய்ய வேண்டும். அந்த அறம் மட்டுமே அவரின் இறுதிக் காலத்தில் அவரைவிட்டு நீங்காதத் துணையாகும்.

அருஞ்சொற்பொருள்
பொன்றுங்கால் -இறுதிக் காலம்
பொன்றா -நீங்காத

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் என்னவென்று ஆராய்பவர்க்கு, பல்லக்கில் அமர்ந்து செல்பவனும் அப்பல்லக்கைத் தூக்கிச் செல்பவனைக் காணும் காட்சியினாலேயே அது அறியப்படும்.

அருஞ்சொற்பொருள்
சிவிகை -பல்லக்கு

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒருவன் தன் வாழ்நாள் வீணாகாதவாறு ஒவ்வொரு நாளும் இடையறாது அறம் செய்வானாயின், அதுவே அவனுக்கு வீடுபேற்றை அளிக்கும். (மீண்டும் பிறப்பு உண்டாக்கும் வழியை அடைக்கும் கல்)

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

ஒருவனுக்கு அறத்தின் பயனாய் வரும் இன்பமே உண்மையான இன்பமாகும். மற்றவழியில் வருபவையனைத்தும் இன்பத்தைப் போல் தோன்றினாலும் அவை அனைத்தும் வெறும் மயக்கமே ஆகும். அதனால் துன்பமேயன்றி இன்பமுமில்லை, புகழுமில்லை.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் செய்யக்கூடிய செயல்களே அறமாகும். செய்யாமல் விலக்கக் கூடிய அனைத்தும் பழித் தரும் செயல்களே ஆகும்.

No comments: