Saturday, September 15, 2007

அறத்துப்பால் -பாயிரவியல் -நீத்தார்பெருமை-3

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நல்லொழுக்க நெறிகளில் நிலைத்து நின்று, ஆசைகளைத் துறந்த முனிவர்களை சிறப்பாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவு.

அருஞ்சொற்பொருள்
நீத்தார் -ஆசைகளைத் துறந்தவர்
பனுவல் -நூல்


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

இவ்வுலக ஆசைகளைத் துறந்த முனிவர்களின் பெருமையைக் கூறுவதென்பது, இவ்வுலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களைக் கணக்கிட்டுக் கூறுவதை ஒத்தது ஆகும்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பு, வீடுபேறு ஆகிய இரண்டின் இன்பதுன்பங்களை ஆய்ந்தறிந்து தெரிவிப்பதற்காக , இப்பிறவியில் துறவு பூண்டவர்களின் பெருமையே இவ்வுலகில் முதன்மையானது ஆகும்.


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அறிவு என்னும் துறட்டியினால் தன் ஐம்புலன்களையும் அடக்கும் வல்லமையுள்ள முனிவர்கள், விளை நிலத்திற்கான மேலான விதைகளைப் போன்றவர்கள்.

அருஞ்சொற்பொருள்
உரன் -அறிவு
தோட்டியான் -துறட்டி, அங்குசம்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐம்புலன்களையும் அடக்கும் முனிவர்களின் வலிமைக்கு, வானவர்களின் தேவர்களான இந்திரனின் வலிமையே சிறந்த சான்று ஆகும்.

அருஞ்சொற்பொருள்
கோமான் -அரசன்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பிறரால் செய்ய இயலாத அரிய செயல்களைச் செய்யக் கூடியவர்களே பெரியர், அத்தகைய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியர்கள் ஆவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலன்களின் தன்மைகளான சுவை, ஒளி, தொடு உணர்வு, ஓசை, மணம் ஆகிய ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறியக் கூடியவனுடைய அறிவிற்குள் அடங்குவதே உலகம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

நன்மை நிறைந்த சொற்களையுடைய முனிவர்களின் பெருமையை, இப்பூவுலகில் அவர்கள் மந்திரமாகச் சொல்லிச் சென்ற வேதங்களே எடுத்துக்காட்டிவிடும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நல்ல குணங்களாகிய குன்றின்மேலிருக்கும் முனிவர்களின் சினமானது சிறிது நேரமே என்றாலும், அச்சினத்திற்கு ஆளாகும் சாதாரண மானிடர்களால் அதைத் தாங்க இயலாது.

அருஞ்சொற்பொருள்
வெகுளி -கோபம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் தன் குளிர்ந்த அன்பைக் காட்டுவதால்தான் முனிவர்களே சிறந்த அந்தணர்களாகக் கருதப்படுவார்கள்.

No comments: