Wednesday, September 26, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத் துணைநலம்- 6

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

தான் பேண விரும்பும் இல்லறத்துக்கு ஏற்றவளை துணையாக கொண்டவன் வாழ்வு அதற்குறிய வளத்தைப் பெறும்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

கணவன், மனைவி இடையே கருத்தொத்த அறம் இல்லையெனின் வேறு சிறப்புகள் இருந்த போதிலும் போற்றுதலுக்குரிய இல்லறம் அமையாது.

மனைமாட்சி - வீட்டிற்கு சிறப்பு சேர்க்கும் செயல்கள் (அறம்)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

மனைவி நற்செயல்களால் சிறப்பு பெற்றவள் எனில் ஒருவனிடம் இல்லாதிருப்பது எது? அவ்வாறான துணை அமையவில்லை எனில் இருப்பது தான் எது?

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

தாங்கள் போற்றும் அறத்தை கற்பைப் போல் காக்கும் உறுதி கொண்ட பெண்ணை விட சிறந்த துணை ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

தலைவனைப் போலவே அறத்தை முதற் பொருளாய் கொண்டு வாழ்பவள் எப்பொழுதும் பெய்யலாம் என்றிருக்கும் சூல் கொண்ட மேகத்துக்கு ஒப்பானவள். இப்படிப் பட்ட ஆற்றலுக்கு தெய்வத்தை தொழ வேண்டிய அவசியம் இல்லை.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தமது அறத்தை காத்தல், அறம் செழிக்க துணையின் நலம் காத்தல், அதனால் பெற்ற குடியின் புகழை நிலை நிறுத்துதல் போன்ற கடமைகள் பெண்ணுக்கு ஒருபோதும் சோர்வைத் தராது.

சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

வீரனே ஆனாலும் இல்லறத்தை பேணுவதில் மனைவிக்கு துணையாக இருப்பதே அவனுக்கு முதற் கடமையாகும்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

புத்தேளிர் - கடவுளர்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்
முன் ஏறுபோல் பீடு நடை.

தான் போற்றும் அறத்தை போற்றும் மனைவி அமையவில்லை எனில் தன் இல்லறத்தை பழிப்போர் முன் அவமானத்தால் குன்ற நேரும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

அறத்தை ஒத்து வாழும் துணைவியால் ஒருவன் நல்லறம் பேண இயலும். அத்தகைய நல்லறத்தின் பயன் அறவழி போற்றும் குழந்தைகள் வாய்ப்பது.

1 comment:

MSATHIA said...

இந்த அதிகாரம் முழுதுமே அர்த்தம் மாறியே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை சரிபார்க்கலாமே. எல்லாமே 'அறம்' சார்ந்த விளகங்களாய் இருக்கிறது. எல்லாக்குறளுக்கும் ஒரே அர்த்தம் வருகிறது.