Thursday, September 13, 2007

அறத்துப்பால்-பாயிரவியல்-கடவுள் வாழ்த்து-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துகளெல்லாம் 'அ' கரத்தை அடிப்படையாகக்கொண்டுள்ளதைப்போல், இவ்வுலகமானது பரம்பொருளான கடவுளை அடிப்படையாகக்கொண்டது. (இறைவன் ஒருவனே! அவனே உலகத்தின் தலைவன்)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய ஞானத்தின் வடிவாக விளங்குபவனின் தூய்மையான பாதங்களைத் தொட்டு வணங்காதவர்கள், கற்றவர்களாயினும், அவர்கள் கற்றதனால் பயன் என்ன? (இறைவன் தூய ஞானத்தின் வடிவானவன்)

அருஞ்சொற்பொருள்:

வாலறிவன் - கடவுள்; வால் - மிகுதி, பெரிய;
வாலறிவன் - பேரறிவுடையவன், மிகுந்த ஞானமுடையவன்
நற்றாள் - இறைவனின் திருவடி

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

தன்னை நினைப்பவர்களின் மனமாகிய மலர் மீது வீற்றிருக்கும் கடவுளை வழிபடுபவர்கள், இறைவனடி சேர்ந்தாலும், இந்நிலவுலகில் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். (இறைவன் அடியவர்களின் மனங்களில் எல்லாம் பாரபட்சமின்றி எளியனுக்கு எளியனாய், அடியனுக்கு அடியவனாய் இருப்பவன்)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு, வெறுப்பில்லாத கடவுளின் திருவடிகளில் சரணடைபவர்களுக்கு, எந்நாளும் துன்பம் இல்லை. (இறைவன் விருப்பு வெறுப்புகளற்றவன்)

அருஞ்சொற்பொருள்:

இடும்பை- துன்பம்
யாண்டும்- எந்த நாளும்



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

நாம் செய்யும் நல்வினையும், தீவினையும் இரண்டுமே பிறவி என்னும் துன்பத்தைத் தரவல்லன. எனவே எவ்வினையாலும் பாதிக்கப்படாத இறைவனின் புகழைப்போற்றிப் பாடுபவர்களுக்கு, அவன் திருவடிகளைச் சரணடைபவர்களுக்கு எவ்விதத்துன்பங்களும் நேராது. நமது வினைகள் எதுவாயினும் அவற்றை இறைவன் திருவடிக்கே சமர்ப்பித்துவிட வேண்டும். (இறைவன் நல்வினை, தீவினைகளால் பாதிக்கப்படாதவன்)

அருஞ்சொற்பொருள்:

இருவினை - நல்வினை, தீவினை

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்புலன்களினால் வரக்கூடிய ஆசைகளற்ற இறைவனின் மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர்கள், இவ்வுலகில் நீண்ட நாள் வாழ்வார்கள். (இறைவன் புலன்களை எல்லாம் வென்றவன்)

அருஞ்சொற்பொருள்:

ஐம்பொறி-ஐம்புலன்கள் : மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தன்னிகரில்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தாரைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும். (இறைவன் தனக்கென்ற ஒப்புமை ஏதும் அற்றவன்)

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளில் சரண்டைந்தவர்களைத்தவிர, ஏனையோர்க்கு பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது அரிதானதாகும். (இறைவன் அறவழியைப் போதிக்கும் சான்றோனாவான்)

அருஞ்சொற்பொருள்:

ஆழி - பெருங்கடல்

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எட்டு குணங்களையுடைய கடவுளை வணங்காதார், உணர்ச்சியற்ற உறுப்புகளைப்போல பயனற்றவர்கள். (எண்குணங்களின் வடிவாய் விளங்குபவன் இறைவன்)

அருஞ்சொற்பொருள்:

எண்குணம் - தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலா இன்பம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை வழிபடுபவர்கள் பிறவி எனும் பெருங்கடலை எளிதில் கடப்பர்.

3 comments:

MSATHIA said...

அருமையான ஆரம்பம்.
வாழ்த்துக்கள்.

முகவை மைந்தன் said...

அருமையான துவக்கம். அடுத்த அதிகாரங்களும் அணி வகுக்கட்டும்.

தமிழ் said...

நன்றி, வான்சிறப்பை நானே ஆரம்பிக்கட்டுமா?