Tuesday, April 01, 2008

எல்லாருமே என் சொந்தக்காரங்க!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்


யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தன்துளி தளைஇ யானாது

கல்பொரு தியங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

குட்டீஸ்!
என்னடா இந்த அங்கிள் இவ்வளவு நேரமா புரியற மாதிரி பாடிட்டு, திடீர்னு என்னமோ உளறாரே ன்னு பாக்குறீங்களா? இந்தப் பாட்டு தான் புறநானூறு அப்படிங்கிற புத்தகத்து ல, நம்ம கணியன்பூங்குன்றனார் அப்படிங்கற அங்கிள் பாடினது. இது அந்த புக் ல 192 வது பாடலா இருக்கும்.

அது சரி! ஆனா இந்த பாட்டுக்கு அர்த்தமே புரியலயே! அப்படின்னு கேட்குறீங்களா. இதோ சொல்றேன் பாருங்க!

இந்த பாட்டு வேணும்னா உங்களுக்குப் புரியாம இருக்கலாம்; ஆனா இதுல இருக்குற கருத்து எல்லாமும் இந்த கண்மணிகளுக்குத் தெரியும்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

கேளிர் ன்னா சொந்தக்காரங்கன்னு அர்த்தம். இந்த உலகத்துல இருக்குற எல்லா ஊருமே என்னுடைய ஊர் தான். அதே மாதிரி எல்லா மனிதர்களும் எனக்கு சொந்தக்காரங்க; என் ஃப்ரெண்ட்ஸ்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

அப்படின்னா என்ன?

தீது - தீமை
நன்று - நன்மை
பிறர் தர - பிறரால்
வாரா - வருவதில்லை

நமக்கு ஏதாவது நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அது மத்தவங்களால நமக்கு வரல. நம்மலாலேயே தான் நமக்கு வந்தது ன்னு அர்த்தம்.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்

அதாவது, நாமல்லாம் மழைக்காலத்துல வீட்டு முன்னாடி மழைத்தண்ணீ ஓடும்- ல அப்போ, வீட்டுல இருக்குற பழைய பேப்பரால காகித கப்பல் செஞ்சு விடுவோம் தெரியுமா! அந்த கப்பல் எந்த பக்கமா போகும்? ஞாபகமிருக்கா? ஆமாம். நீ சொன்னது சரிதான். தண்ணி போற திசையில தானே போகும். அதே மாதிரி தான் நம்ம வாழ்வும் ஊழ்வினைப் பயன் படி தான் இருக்கும். அப்படின்னு பெரியவங்க தங்களோட அனுபவத்துல இருந்து சொல்லியிருக்காங்க.

அதனால,

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இந்த உலகத்துல உன்ன விட பெரியவங்க யாரும் இல்ல; அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்ன விட சின்னவங்களும் யாரும் இல்ல; அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!

இந்த வசனம் எங்கயோ கேட்ட மாதிரி இல்ல! அதேதான், நம்ம சூப்பர் இஸ்டார் தில்லுமுல்லு படத்துல சொல்லுவாறே அதே வசனம் தான்! அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சொன்னது. இதத்தான் அந்தக் காலத்துலயே நம்ம கணியன் பூங்குன்றனார் அங்கிளும் சொன்னாங்க.

இப்ப சொல்லுங்க! இந்த பாட்டுக்கு அர்த்தம் உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் தானே! பாட்டுதானே தெரியாது! சரி, பாட்டை மட்டும் இன்னொரு தடவை சொல்லலாமா? ஓ, சொல்லலாமே! வாங்க எல்லாரும் சேர்ந்து பாடலாம்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தன்துளி தளைஇ யானாது
கல்பொரு தியங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

2 comments:

ரவிசங்கர் said...

குட்டீஸ், அங்கிள் போன்ற சொற்களைத் தவிர்க்கலாமே? குட்டிங்களா, மாமா என்றே சொல்லலாமே?

தமிழரசன் said...

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, இரவிசங்கர்.

ஆனால், இன்று அனைவரும் பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஆங்கில வழியிலேயே அனைத்தும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் பழக்கத்திலும் கொஞ்சம் சொன்னால், படிப்பார்கள் என்ற எண்ணத்தில்தான்....

எப்படியாவது, குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியங்கள் தெரியப்படுத்தவே இந்த சிறு முயற்சி....