Tuesday, June 17, 2008

வெண்பா - துவக்கப்படி

முன்பு கல்லூரி நண்பர்கள் குழுமத்தில் இட்ட மின்னஞ்சல் கீழே தருகிறேன்.

வெண்பா இலக்கணம் எளிதான ஒன்று. நீ சொன்ன 'rhythamic' அந்த இலக்கணத்தின் படி எழுதுனா தன்னால வந்துரும், பெரும்பாலும். அதை செப்பலோசைன்னு சொல்றாங்க.

இப்ப முதல் பாடமா ஒரு செய்யுளின் அடிப்படையை பாக்கலாம். அசை என்னும் உறுப்புதான் அந்த அடிப்படை. (எங்கயாவது தப்பு விட்டுருந்தேன்னா, தெரிஞ்சவங்க குட்டுங்க)

இரண்டு அசைகள் உண்டு. நேரசை, நிரையசை.
தனிக்குறில், தனி நெடில் நேரசை எனப்படும். அடுத்தடுத்து வரும் குறில், குறில் தொடர்ந்த நெடில் நிரையசை. புள்ளி வைத்த எழுத்துக்களுக்கு அசை மதிப்பு கிடையாது.

இப்ப சில காட்டுகளைப் பாக்கலாம்.
நேர், பார், ஏ, நீ - நேரசை - தனிநெடில், புள்ளியைத் தவிர்க்கலாம்.
குறில், அவர், இடு, அணல் - நிரையசை - குறில் தொடர்ந்து வருகிறது
நிரை, இசை, (கூ)வுமே - நிரையசை - குறில் தொடர்ந்த நெடில் (ஐகாரக்குறுக்கம்? எடுத்துக் காட்டுறதுக்குள்ள கண்ணைக் கட்டுது ;-)

அசைகள் தனித்தோ, சேர்ந்தோ வந்தால் சீர் எனப்படும். பெரும்பாலும் ஒரு சொல்லை ஒரு சீராகக் கொள்ளலாம்.

சுங்கம் தவிர்க்கவா சுட்டினேன்? இந்தத் தொடரில் மூன்று சீர்கள் உள்ளன. அவற்றை கீழ்வருமாறு அசை பிரிக்கலாம்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்?
நேர்/நேர் நிரை/நிரை நேர்/நிரை

இந்த சீர்களை நினைவில் வைத்துக் கொள்ள இன்னொரு உத்தி உண்டு.
நேர்நேர் - தேமா (தே/மா)
நேர்நிரை - கூவிளம்(கூ/விளம்)
நிரைநேர் - புளிமா(புளி/மா)
நிரைநிரை - கருவிளம்(கரு/விளம்)
நேர்நேர்நேர் - தேமாங்காய்(தே/மாங்/காய்)
நிரைநேர்நேர் - புளிமாங்காய்(புளி/மாங்/காய்)
நிரைநிரைநேர் - கருவிளங்காய்(கரு/விளங்/காய்)
நிரைநேர்நேர் - கூவிளங்காய்(கூ/விளங்/காய்)

குறிப்பு - வெண்பாவில் கனிச் சீர் (தேமாங்கனி முதலியவை) மற்றும் நாலசைச் சீர்கள் வராது. எனவே தவிர்த்திருக்கிறேன்.

தேமாவும், புளிமாவும் பொருளற்ற குறிச்சொற்கள். ஒரு சீரை அடையாளம் காண உதவும், அவ்வளவே. எப்படி அடையாளம் காட்டுகிறது?

தேமாவைப் பிரித்தால் தே/மா, நேர் நேர் - அவ்வளவு தான். அதுபோலவே மற்ற சீர்ப் பெயர்களும். முழுப்பாடலையும் கீழே இவ்வாறு அசை/சீர் பிரித்திருக்கிறேன், சரி பாருங்கள்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்? அன்/பர்/கள்
நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர்
தேமா கருவிளம் கூவிளம் தேமாங்காய்

சங்/கம் கவ/னிக்/கத் தான்/தந்/தேன் - வெண்/பா
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா

விளை/யா/டி ஒன்/றிட/வே, நண்/பா/வுன் அஞ்/சல்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா

விதை/யா/கக் கொண்/டேன் நான்.
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்

இப்ப அசை பிரிச்சாச்சா? இனி வெண்பா வாய்ப்பாடு பாத்தோம்னா எளிதா இருக்கும்.

மா முன் நிரை - மாவில் முடியும் சீருக்கு அடுத்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

தேமா, புளிமாவைத் தொடர்ந்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

விளம் முன் நேர் - விளத்தில் முடியம் சீருக்கு அடுத்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

கருவிளம், கூவிளத்தை தொடரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

காய் முன் நேர் - காய்ச்சீருக்கு அடுத்த சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் சீர்களைத் தொடரும் சீர்

இதுதான் அந்த வாய்ப்பாடு. இப்படி எளிதாக நினைவில் வைக்கத்தான் தேமா, புளிமான்னு குறிச்சொற்கள்.

இந்த வாய்ப்பாடு பொருந்தும் படி நான்கு சீர் கொண்ட மூன்றடிகளும், நாலாவது அடியில் மூன்று சீரும் அமைய எழுதினால் வெண்பா எழும்.

ஈற்றடி, ஈற்றுச்ச்சீருக்கு தனி வாய்ப்பாடு உண்டு. (இறுதி அடி, இறுதிச் சொல்)
ஒரசையில் முடிய வேண்டும்.

கீழ்க்கண்ட அசைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நேரசை - நாள், நான், தேன், தா, நீ
நிரையசை - மலர், அவன், அது
நேர்பு - காசு, அன்பு, பண்பு, (உகரம் தொடர்ந்து வரும் நேரசை)
நிரைபு - பிறப்பு, உறுப்பு, தவிப்பு, தொடர்பு, உவந்து, அறிவு (உகரம் தொடர்ந்து வரும் நிரையசை)

அடிப்படை அவ்வளவுதான். இன்னும் சில நுண்குறிப்புகள் உண்டு.

அடிதோறும் எதுகை, முற்சீர், மூன்றாம் சீரில் மோனை (முதல் எழுத்து ஒன்றுதல்) , இரண்டாம் அடி ஈற்றுச்சீர்(தனிச்சொல்) முதற் சீருக்கு எதுகையாக அமைதல் (மேற்கண்ட பாடலில் உள்ளது போல - நேரிசை வெண்பா)
நேரிசை வெண்பா (இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும் மேலே உள்ள பாடல்), இன்னிசை வெண்பா பிரிவுகள் உண்டு.

குறள் வெண்பா (இரண்டடி), சிந்தியல் வெண்பா (மூன்றடி), பஃறொடை வெண்பா (நான்கடிக்கும் அதிகமாக) வகைகள் உண்டு. ஆனால் அனைத்திற்கும் மேலே சொன்ன அடிப்படை பொருந்தும்.

வெண்பாவில் பெரும்பாலும் தனிப் பாடல்கள் தாம் இயற்றப் பட்டுள்ளன. முழுவதும் வெண்பாவிலேயே பாடப் பட்ட காவியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா. 'வெண்பாவிற்கோர் புகழேந்தி' என்றே அவரது பெயர்!

என்பால் இயன்ற(து) எடுத்தே இயம்பினன்
வெண்பா எழுதவே ஆவலர் யார்உளர்
உன்பால் எழுந்திடும் ஐயம் இருந்திடில்
பண்பாய் அவையில் மொழி.

* இதுதாங்க இன்னிசை வெண்பா! இரண்டாவது அடியில் தனிச்சொல் பெறாமல் எதுகை அமைந்து வருவது.

* என்பால் இயன்ற தெடுத்தே இயம்பினன் - அப்படின்னு தான் இருக்கணும். படிக்க வசதியா இது மாதிரி அடைப்புக்குள் பிரிச்சு எழுதுவாங்க.

நண்பர்களுக்கான குறிப்பை இடுகையாப் போட அச்சமாத்தான் இருக்கு. தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பதால் துணிகிறேன்.

11 comments:

கோவை விஜய் said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

அகரம் அமுதா said...

அட! மரபுப் பிரியரா? உமக்கென் முதல் வணக்கங்கள். தங்களுடைய வெண்பா -துவக்கப் படியைப் படித்தேன். அது ஒருபடித் தேன். நேரம் இருந்தால் எனது வெண்பா எழுதலாம் வாங்க! வலைக்கு வருகை தரவும். இலக்கிய இன்பம் என்ற வலையையும் நிறுவி சங்கப் பாடல்களுக்கு விளக்கம் அளித்து வருகிறேன். நேரம் கிடைத்தால் அதற்கும் வருகை தரவும். நன்றி!

நசரேயன் said...

மாப்பிளை .. தொடர்ந்து எழுது.. ரெம்ப நல்லா இருக்கு

தமிழ் said...

tamil visai palagai illathathal english la pinnootam idugiren... mannikkavum.

migavum payanulla pathivu Ram. keep it up. intha mathiri ellam seyyanum nu thonuthe athuve romba periya vishayam.

//இந்த வாய்ப்பாடு பொருந்தும் படி நான்கு சீர் கொண்ட மூன்றடிகளும், நாலாவது அடியில் மூன்று சீரும் அமைய எழுதினால் வெண்பா எழும்.//

venba vai porutha varai, 4 adigal enbathu kanakku illai.

2 adi muthal, 12 adi varai varum. aanal eetru adi SINDHADI yagavum, yenaiya adigal ALAVADI yagavum iruppathu mukkiyam.

KURALADI: 2 seergalai konda adi
SINDHADI: 3 seergal ulla adi
ALAVADI: 4 seergal konda adi
NEDILADI: 5 seergal konda adi
KAZHI NEDILADI: 6 seergal muthal...


eetru adiyin iruthi asai il, oru asai mattume vara vendum. ithu kattaayam.

nerbu - kaasu
niraibu - pirappu.


tamil visai palagaiye payanpaduthiyathal, ippothu aangila visai palagai yil tamizhai payanpaduthuvathu satru kadinamaga ullathu. :-)))

முகவை மைந்தன் said...

ஆ! இத்தனை பேர் வந்துட்டுப் போயிட்டாங்களா?

அய்யா தள நிர்வாகி, அன்பு கூர்ந்து எம் அஞ்சல் முகவரிகளுக்கு பின்னூட்ட நினைவூட்டல் வரும்படி தோது செய்யுங்கள்.

வருகை தந்தவர்களுக்கு நன்றி. அமுதா அவர்களுடன் ஒரு நேரடி சந்திப்பே முடிந்து விட்டது.

வாழ்த்துக்களுக்கு நன்றி ஏசு.

தமிழ், வெண்பாவின் வகைகள் குறித்து குறிப்பிட்டு விட்டேனே. இது வெண்பாவின் அடிப்படை இலக்கணம் மட்டுமே, மட்டுமே, மட்டுமே!

நேர்பு ஈற்ற்றடிக்கான எ.கா.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


நிரைபு கொண்ட ஈற்றடிக்கு எ.கா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.

நீர்இன்றூ அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


நேர்பு

தமிழ் said...

அப்பாடா, ஒரு வழியா தமிழ் விசைப்பலகை கிடைச்சுடுச்சு.... ;-)))

வெண்பாவின் அடிப்படை இலக்கணத்திலே அடிக் கணக்கும் உண்டு, மைந்தா!

வெண்பாவிற்கு இரண்டடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை மட்டுமே வரும். இது கட்டாயம் கட்டாயம் கட்டாயம்!

அகரம் அமுதா said...

என்பால் இயன்ற(து) எடுத்தே இயம்பினன்
வெண்பா எழுதவே ஆவலர் யார்உளர்
உன்பால் எழுந்திடும் ஐயம் இருந்திடில்
பண்பாய் அவையில் மொழி.

வணக்கம் முகவை!

அதென்ன ஆவலர்? ஆ+வலர் என்ன பொருள்?

ஆர்வலர் என்றிருக்க வேண்டும்.

அகரம் அமுதா said...

/////// தமிழரசன் said...
அப்பாடா, ஒரு வழியா தமிழ் விசைப்பலகை கிடைச்சுடுச்சு.... ;-)))

வெண்பாவின் அடிப்படை இலக்கணத்திலே அடிக் கணக்கும் உண்டு, மைந்தா!

வெண்பாவிற்கு இரண்டடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை மட்டுமே வரும். இது கட்டாயம் கட்டாயம் கட்டாயம்!///////

யாரது? தமிழரசனா? கலிவெண்பா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 100, 200, 300 ஏன் ஆயிரம் அடிகாறும் வளரும்.

தமிழ் said...

//யாரது? தமிழரசனா? கலிவெண்பா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 100, 200, 300 ஏன் ஆயிரம் அடிகாறும் வளரும்.//

ஆமாங்க, பிழையைச் சுட்டிக் காண்பித்ததற்கு மிகவும் நன்றி!!!

கலிவெண்பாவில் 12 அடிகளுக்கு மேல் வரும்.
கலிவெண்பாவின் சிறப்பு என்னவென்றால், அதில் இரண்டிரண்டு அடிகளுக்கு எதுகை வர வேண்டும்.

கலிவெண்பா,
1.இன்னிசைக் கலிவெண்பா
2.நேரிசைக் கலிவெண்பா என இரண்டு வகை உண்டு.

நேரிசைக் கலிவெண்பாவில், ஒரு தனிச்சீர் வரவேண்டும். அதில் எதுகையும் இருக்க வேண்டும்.

ஆனால், இன்னிசைக் கலிவெண்பாவில் அவ்வாறு வர வேண்டிய அவசியமில்லை.

-தமிழ்

Anonymous said...

ஆகா, அகரம் அமுதாவுக்கே வெண்பா இலக்கணமா.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.

தமிழ் said...

எல்லா பதிவுகளுக்கும் வந்து போறியள், நம்மோட ஆழ்வார் மொழி அம்போன்னு நிக்குதே, அத நாம எப்பத்தான் தூசு தட்டி எடுக்கறது??? அம்பி நாராயணா, நாதமுனிகள் ல்ல யாராவது முடிச்சுக் குடுங்க ப்பா.... மார்கழி மாசம் ஆரம்பிக்கலாம் ன்னு இருந்தேன், முடியாமப் போச்சு, சரி விடுங்க தைப் பொறந்தா வழி பிறக்கும்....

தையும் பிறந்துடுச்சு, வழிதான் இன்னும் ஒன்னும் பிறக்கல்ல... ராமண்ணா, வாங்கோண்ணா ஊர்க்கூடி தேர் இழுப்போம்.... சீக்கிரம் 4000 முடிச்சுட்டு, 5000 மடக் மடக்குன்னனு மடக்குறது இல்ல...

தமிழ்