Monday, December 30, 2019

தொழில் முனைவோர் - இராம்குமார்

ஏன் தொழில் தொடங்குற எண்ணம் அல்லது உந்துதல் ஏற்பட்டது
- பெற்றோரைக் கூட இருந்து பாத்துக்கணும்
- திறன் மழுங்கும் வயசுல வேலைல இருந்து தூக்கி எறியப் படலாம்
- நாளை அலுவலகப் பணிச்சூழல் இன்னும் மோசமாகும். பசங்க ஓடுனது போதும்ன்னு முடிவு பண்ணா வந்து நிக்க ஒரு இளைப்பாறுதல் கூடம்.

ஏன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தீங்க
- பாதுகாப்பான, கலப்படமில்லாத உணவு
- எனக்கு இருக்கும் பிற ஆர்வங்களுக்குப் போதுமான நேரம் ஒதுக்க முடியும்
- 2.5 ஏக்கர்ல ஒரு குடும்பம் தன்னிறைவு அடைய முடியுமான்ற பரிசோதனை
- என்னால ரொம்பக் கவனத்தோட எந்த வேலையையும் தொடர்ந்து செய்ய முடியாது. உற்பத்தி மற்றும் விற்பனைத்துறைகள்ல விலகவே முடியாத படி தொடர்ந்து கண்காணிப்போட செயல்படணும். வேளாண்மைல எந்த ஒரு நாளிலும் ஆண்டுக்கணக்காக் கூட வேலைகளை ஒத்தி வைச்சுட்டு மத்த வேலைகளைப் பாத்துட்டு திரும்பவும் விட்ட இடத்துல இருந்து தொடங்கலாம்.
- ஒவ்வொரு நாளும், பருவமும், ஆண்டும் புத்தம் புதுசு
- எவ்வளவு வெறுப்பா இருந்தாலும் கால்நடைகளை ஓட்டிட்டுப் போனாப் போதும். நாலு மணி நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு அவை புல் மேயுறதைப் பாத்துட்டு இருந்தாலே கவலைகள் காணாமப் போயிரும்.

தொழில் சூழல் - முதலீடு, சந்தை வாய்ப்பு போன்றவை
சில ஆயிரங்களிலும் தொடங்கலாம். இல்லை, என்னைய மாதிரி பல லட்சங்களைக் கொட்டியும் தொடங்கலாம். நிலம், வீடுன்னு வாங்குனதுனால செலவு கூடப் போயிருச்சு. நிலம் கருவை மண்டிக் கிடந்தது. கிணறு தரை மட்டத்தில் தூர்ந்திருந்தது. இதெல்லாம் சரி பண்ணி முடிக்கும் போது 30+ லட்சம் வரை செலவானது. என் பிள்ளைகள் விரும்பினால் செலவே இல்லாமல் தொடரலாம்.

சந்தை வாய்ப்புகள்
பாலை பக்கத்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றலாம். ஆடுகளை விற்க தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றான சமயபுரம் சந்தைக்கு ஓட்டிச் செல்லலாம்.7 கிமீ. நெல் போன்றவற்றை வாங்கிக் கொள்ள மண்ணச்சநல்லூரில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. திருச்சி காய்கறி சந்தையில் இருந்து அன்றாடம் காய்கறி கொள்முதல் செய்வார்கள். கால்நடை மருத்துவமனைகள் 5 கிமீ சுற்றளவில் இருக்கின்றன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை 4 கிமீ தொலைவில்.

பணமதிப்பிழப்பு, பொருள்சேவை வரியோட தாக்கம்
பெரும்பாலும் இல்லை.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு
நான் வீட்ல இருந்தா அறவே கிடையாது. வெளியூர் போனா, சில வேலைகளுக்கு ஆள் அமர்த்துவேன். என் முனைவர் மனைவி தன்னோட வண்டில மாடுகளுக்குத் தேவையான அறுத்து வைக்கப் பட்ட சோளப்பயிர் கட்டுகளை கொண்டு வந்து விடுவார். என் பையன் பால் கறக்க வருபவரிடம் கணக்கைக் குறித்துக் கொள்வான். யாரும் மாடுகளை மாற்றிக் கட்ட மாட்டார்கள். அச்சம். அதுக்கு பனிரெண்டு மணியளவில் என் நண்பர் வந்து இரண்டு மணி நேரம் சிறு மேய்ச்சல் காட்டிக் கட்டுவார். சொந்த ஊர் இல்லை என்பதால் சிறு இடர் நிறைய உண்டு. எவ்வளவோ பாத்துட்டோம்ன்னு தேத்திக்குவேன். யாரிடமும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் இயன்ற வரை உதவியும், விட்டுக் கொடுத்தும் போவேன். கால்நடைகளை பிறர் காடுகளுக்குள் செல்லாதவாறு கூடுதல் கவனத்தோடு மேய்ப்பேன். பொதுவான நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன்.

அரசின் வேளாண்/கால்நடைத் திட்டங்களை, வறுமை ஒழிப்புத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வேன். சில திட்டங்களை முன் மாதிரியாக நானே செலவுகளை எதிர்கொண்டு செயல்படுத்திப் பார்ப்பேன். எங்கள் ஊராட்சிக்கான நீடித்த நிலையான மானாவாரி இயக்கக் குழு தலைவராக இருக்கிறேன். இருபது பேர் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் தலைவராக இருக்கிறேன். போக வேண்டிய தொலைவு இன்னும் நிறைய. திட்டங்கள் இருக்கின்றன. பார்க்கலாம்.

1 comment:

Navin Kumar said...

அருமை. நீங்கள் நிறைய நண்பர்களுக்கு வேளாண்மையில் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பீர்கள். வாழ்க வளமுடன்.