Thursday, August 23, 2007

வீராப்பு

அப்பா மீது எனக்கு இன்னும் கோபம் குறையவே இல்லை. அப்படி என்ன ஒரு வீராப்பு, இந்த வயசுல? பல தடவை கூப்பிட்டும் வர மாட்டேனுட்டார். சின்ன வயதில் இருந்து அவர் யாருடனும் ஒத்துப் போய் நான் பார்த்தில்லை. நானும் அவர் சொன்னதை எல்லாம் தட்டாமல் செயது விடுவேன். 'சைக்கிளை தொடைச்சி வை'ன்னு சொன்னார்னா துடைத்து முடிக்க அரை மணி நேரம் ஆகும் எனக்கு. அவர் அவ்வளவு எதிர்பார்ப்பார். இருந்தும் ஏதாவது குறை சொல்லுவார். காலப்போக்கில் நானும் கடமைக்கு செய்யும் நிலைக்கு வந்து விட்டேன்.

விவரம் தெரிய வந்த பிறகு சில நேரங்களில் எதிர் கேள்வி கேட்க தலைப்பட்டேன். நல்ல நினைப்புல இருந்தார்னா பொறுமையா பதில் சொல்லுவார், இல்லைன்னா, அரை மணி நேரம் என்னைய மெல்லுவார். நான் அம்மாட்ட 'உங்களைத் தான் திட்டறார்'ன்னு சொல்லிட்டு வெளிய கிளம்பிடுவேன்.
எனக்கும் அவருக்கும் வயது ஏற, ஏற ஏழாம் பொருத்தமும் ஏறுமுகமாக அமைய ஆரம்பித்தது. எனக்கு நல்ல வேலை கிடைத்து எல்லோரும் நகரத்திற்கு இடம் பெயர எத்தனித்த போது மறுத்து விட்டார். வேறு வழியின்றி அம்மாவும் அவருடன் இருந்து கொள்வதாக கூறிவிட்டார்கள். குழந்தை, குட்டின்னு ஆனதுக்கப்புறம் கவனித்துக் கொள்வதற்காக அம்மா இரண்டொரு தடவை வந்து போயிருக்கிறார்கள். மற்றபடி என் மாமியார் தான் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார். நண்பர்கள் ஆரம்பத்தில் ஓட்டுவார்கள் 'என்னடா, மாமியா வீட்டு மேல பாசம் பொங்குது' ன்னு. 'எங்கப்பா முசுடு' ன்னா சொல்ல முடியும்?

அம்மா இறந்த பின் அப்பா தோட்டத்து மர வீட்டிலேயே பெரும்பாலும் தங்க ஆரம்பித்தார். எப்போதாவது நான் ஒரு உந்துதலில் அவரைப் பார்க்கப் போவேன். அவரோ முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டார். சண்டை போட்டு விட்டுத் திரும்புவேன். சென்ற முறை கூட கோபத்துல 'கொள்ளி போட நாந்தான் வரணும், ஞாபகம் வச்சுக்கங்க' ன்னு சொல்லிட்டேன். அவரோ 'நீ வந்து கொள்ளி போடணும்னு இந்த ஒடம்பு காத்திருக்காது, போடா' ன்னுட்டார். தோட்டத்தில் இருந்த முத்தையா அண்ணன் தான் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ஏன் இப்படி யாரையும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறாரோ? ரொம்பவும் அலுப்பாகவே இருந்தது. சரி, ஆனது ஆகட்டும் என்று விட்டு விட்டேன்.

இதோ இப்போது மீண்டும் அப்பாவைத் தேடி இறுதி முறையாக கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆமாம், இறுதி முறையாகத் தான். நெஞ்சு வலி என்று சொன்னவர் அப்படியே மடங்கி சரிந்து விட்டாராம். மனதுக்குள் ஒரு அழுக்குச் சிரிப்பு. நான் போய்த்தானே கொள்ளி போட வேண்டும்.

பேருந்திலிருந்து இறங்கும் போதே மேகம் திரண்டிருந்தது. தூறலும் விழுந்தது. அங்கிருந்து விலக்கு ரோட்டில் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். தூரத்தில் பலமான இடிச் சத்தம் கேட்டது. ஊருக்குள் நுழைந்த போது யாரையும் காணோம். வாசலில் இருந்த சில பெண்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். ஒரு பொடியன் தோட்ட வீட்டுப் பக்கம் ஓடினான்.

நான் மேலும் நடக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் முத்தையா அண்ணன் சைக்கிளில் வந்தார். 'தம்பி, அப்பாவை தோட்ட வீட்ல வச்சிருந்தோம். இடி விழுந்ததுல மர வீடு ஒரு பக்கம் தீப்பிடிச்சுருச்சு. உயிரோட இருக்கவனுங்களை வெளிய இழுக்கறதுக்குள்ளயே வீடு முழுசா எரிய ஆரம்பிச்சிருச்சு.' ன்னார்.

ஓட்டமும் நடையுமா போனேன். திகு திகுவென எரிந்து கொண்டிருந்தது. சிலர் என்னை ஆறுதல் படுத்தினார்கள். எனக்கு அழுகையே வரவில்லை. சிறிது நேரம் பலதும் மூளைக்குள் அலை மோதியது. ஒருவேளை நான் தான் அப்பாவை சரியாக புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனோ என நினைத்த அந்த கணத்தில் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அதில் அழுக்கு கரைந்து கொண்டிருந்தது. இப்போது நான் அவருடைய சாம்பலுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

5 comments:

மனதின் ஓசை said...

நண்பா,
நல்ல முயற்சி.. தொடர்ந்து எழுது..

வாழ்த்துக்கள்.

MSATHIA said...

/* 'தம்பி, அப்பாவை தோட்ட வீட்ல வச்சிருந்தோம். இடி விழுந்ததுல மர வீடு ஒரு பக்கம் தீப்பிடிச்சுருச்சு. உயிரோட இருக்கவனுங்களை வெளிய இழுக்கறதுக்குள்ளயே வீடு முழுசா எரிய ஆரம்பிச்சிருச்சு./*
கதையை இதோட முடித்திருக்கலாம்.
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுது.

முகவை மைந்தன் said...

தந்தையின் புரிந்து கொள்ளப்படாத பக்கத்தை விளங்கக் கூற நினைத்தேன். சப்பையான முடிவுக்கு இது போதும்னு விட்டுட்டேன். நாலு வரி எழுதுவதற்குள் நாப்பது யோசனை தோணுது.

படைப்பு என்பது எளிதானதல்ல. பின்னூட்டம் விட்டு கவர்ந்த பதிவர்களை ஊக்குவிக்க எண்ணுகிறேன்.

Murali (முரளி) said...

நன்றாக உள்ளது நண்பா. தொடர்ந்து எழுதுக

Anonymous said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்.

முகவைத்தமிழன்
www.tmpolitics.net