Wednesday, September 26, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை-5

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் ஈடுபடுபவன் அதில் தன் வாழ்வின் பகுதியாய் வரும் பெற்றோர், வாழ்க்கைத்துணை, மக்கள் ஆகிய மூவருக்கும் துணையாய் நிற்பதே நல்லறம் எனப்படும்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறவு கொண்டோருக்கும், இரந்து வாழ்வோருக்கும், வாழ்ந்து மறைந்தோருக்கும் இல்லறம் பேணுபவரே இயல்பான துணை.

துவ்வாதவர் - துப்பாருக்கு எதிர்ப்பதம்
உணவுக்கு துப்பில்லாதவர்

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், பிறருக்கு வழிகாட்டி கடவுளை ஒப்ப வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் நாடுதல் ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலை நிறுத்திக் கொளல் ஆகிய ஐந்தும் இல்லறம் வாழ்பவன் கடைபிடிக்க வேண்டியவை.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பிறர் பழிக்கும் செயல்களுக்கு அஞ்சுதல், உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணல் ஆகிய போற்றுதலுக்குரிய குணங்களை உடையவன் வாழ்வு நிறைவானதாக இருக்கும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அன்புடனும், நூலோர் வகுத்த அறநெறியிலும் அமையும் வாழ்வே இல்லறத்தின் பண்பு. அவ்வாறான வாழ்வு இல்லறத்தின் பயன் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவ தெவன்.

அறம் ஓம்பி வாழ்ந்ததால் இல்லறம் தரும் பயனை வேறு வழியால் பெற்றிட யாரால் முடியும்?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இல்லறத்தின் இயல்பான அறத்தை பற்றி வாழ்பவன் அதன் பயனாக குறிக்கப் படுவனவற்றை எளிதில் அடைவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

இல்லறத்தில் இழுக்கு ஏற்படாமல் அறத்தின் வழியால் வாழ்பவனின் வாழ்வு தருமம் தவறாத துறவிகளின் வாழ்வினை ஒத்தது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பிறர் பழிக்க முடியாத இல்லறம் என்பதே அறம் போற்றும் வாழ்வாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பிறர் ஒப்புமை கூறத்தக்க இல்லறம் பேணியவன் கடவுளை ஒத்தவனாகவே போற்றப் படுவான்.

1 comment:

MSATHIA said...

வருக முகவை மைந்தன்.
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்