அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
என் காதல் மாதின் அழகிய உருவத்தைக் கண்டால்," தெய்வ மகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது செறிவான, அழகிய கருங்கூந்தலையுடைய ஒரு மானுடப் பெண்தானோ! என்று புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.
அணங்கு -பெண்
கொல் -தெய்வம்
மாதர் -மானுடப்பெண்
மாலும் -மயங்கும்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.
என்னை அவள் நோக்கினாள்; நான் அவளை நோக்குங்கால், என்னை எதிர் நோக்கினாள்; அப்போது, அவள் பார்வையின் வலிமையானது, அவள் ஒருத்தியேயாயினும், பெருஞ்சேனைக் கொண்டு என்னைத் தாக்கியதைப் போன்றதாயிருந்தது.
தாக்கு -தாக்கி வருத்துகிற
தானை -சேனை
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
கூற்றுவனை இதன் முன்னர் அறிந்திலன்; இப்போது அறிந்து விட்டேன், அது பெண்குணங்களுடன் பெரியவாயப்போர் செய்கின்ற கண்களையுடையது.
பண்டு -கண்டு
கூற்று -எமன்
தகையால் -குணங்கள்
பேரமர் -பெரிய வாய்
கட்டு -கண்கள்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
தோற்றத்தில் பேதை பெண்ணாய்த் தோன்றினும், அவளுடைய கண்களானது தம்மைக் கண்டவரது, உயிரையுண்ணுந் திறத்துடனே கூடி மாறுபட்டிருந்தன.
அமர்த்தன -மாறுபட்டிருந்தன
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.
வருத்தும் கூற்றமோ? இயல்பான கண்ணோ? மருளும் பெண்மானோ? - இப்பெண்ணின் கண்கள் இம்மூன்றனையும் தன்பால் கொண்டதாய் இருக்கின்றதே!
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
வளைந்து நிற்கின்ற கொடிய புருவங்கள் , நேராக அமைந்திருந்தால் அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!
கோடம் - வளைவு; கோடா - வளையாமல்
அஞர் -துயர்
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
இப்பெண்ணின், சாயாத முலைகளின் மேலிடப்பட்ட ஆடையானது, அவைகள் என்னைக் கொல்லாதபடிக் காத்ததால், அது மதக்களிற்றின் முகப்படாத்தை ஒத்ததாகும்.
கடாக் களிறு -மத யானை
கட்படாம் -முகப்படாம்
துகில் -ஆடை
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
போர்க்களத்துக்கு வராதவர்கள் கூட, பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவாகிய என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்துபோயிற்றே!
ஒண்ணுதற்( ஒள்+நுதல்) -ஒளி பொருந்திய நெற்றி
ஞாட்பு -போர்க்களம்
நண்ணார் -எதிர்த்தவர்
உட்கும் -அஞ்சுவதற்கு எதுவாகும்
பீடு -வலிமை
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
பெண்மான் போன்ற மருளும் பார்வையையும், உள்ளத்தே நாணத்தையும் உடைய இவளுக்கு, இவையே சிறந்த அழகாயிருக்க, வேறு அணிகலன்கள் பூட்டி அழகுபடுத்தல் ஏனோ?
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
காய்ச்சப்பட்ட மதுவானது, தன்னை உண்டவருக்கு மட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காமத்தைப் போல் கண்டவருக்கும் மகிழ்வைத் தரும் ஆற்றலுடையதில்லையே!
அடு நறவு -காய்ச்சப்பட்ட மது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment