கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே!
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
உடலுக்கு நோய் செய்வதும், அந்நோய்க்கு உரித்தான மருந்தும் வேறு வேறான பொருள்கள் ஆகும்; ஆனால், அணிபுனைந்த இப்பெண்ணினால், என் மனதினுக்கு வந்த நோய்க்கு இவளே மருந்து ஆயினளே!
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
தான் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோள்களைத் தழுவித் துயிலும் இன்பத்தைப் போல, கமலக்கண்ணனின் போக உலக இன்பமும் இனிதாக இருக்குமோ?
நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
(தீ - நெருங்கித் தீண்டினால் சுடுவதும், விலகினால் அதன் வெம்மை குறையும்; ஆனால் காதலில் அது தலைகீழாகிறது.)
தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் வந்தால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் எங்கிருந்துதான் பெற்றாளோ?
தெறும் -சுடும்
குறுகும் -நெருங்கும்
யாண்டு -எவ்வுலகில்
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
இனிய பொருள்களை விரும்பிய பொழுதே, அவைகள் வந்து தரும் இன்பத்தைப் போன்றன, மலரணிந்த கூந்தலையுடையவளான இவளின் தோள்கள் தரும் இன்பம்.
வேட்ட -விரும்பிய
தோடு -மலர்
கதுப்பினாள் -கூந்தலையுடையவள்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இம்மங்கையின் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டவை போலும்.
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
(தம் இல் இருந்து, தமது பாத்து உண்டு அற்றால், அ மா அரிவை முயக்கு)
அழகிய மாமை நிறத்தையுடைய இம்மாதின்கண் புணர்ச்சியானது, தம் வீட்டிலிருந்து, தம் முயற்சியால் வந்த பொருளில், தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமைப் போன்றது.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
காற்றாலும் இடையில் புகுந்து பிரிக்க இயலாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிதேயாகும்.
போழப்படா -இடையறுக்கப்படாத
முயக்கு -புணர்ச்சி
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
ஊடலும், ஊடல் தீர்த்தலும், அதன்பின் உண்டாகின்ற புணர்ச்சியும் ஆகிய இவையெல்லாம் காதலை இடைவிடாதடைந்தவர் பெற்ற பயன்கள் ஆகும்.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
நூல்களாலும், நுண்ணறிவாலும் பொருள்களை அறியவறிய, நம் அறியாமையைக் கண்டறிதல் போன்றது, செம்பொன் ஆபரணத்தையுடைய இவளிடத்து புணரப்புணர உண்டாகும் காதல்.
செறிதோறும் -புணரப்புணர
சேயிழை -செம்பொன் ஆபரணம்
மாட்டு -பெண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment