நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
அனிச்ச மலரே வாழ்வாயாக! மென்மையான நீயே எல்லாப் பூவிலும் நல்ல குணமுடையாய்! இருந்தாலும் என்னால் விரும்பப் படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மெல்லிய குணத்தையுடையவள்.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
நெஞ்சே! யான் கண்டு மயங்கிய இவள் கண்கள் பலராலும் காணப்படும் குவளை மலரை ஒத்திருப்பதனால், தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைக் கண்டால், நீயும் மயங்குகின்றாயே!
மையாத்தி -மயங்குகின்றாய்
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.
அவளின் மேனியோ தளிர்வண்ணம்; பல்லானது முத்தாகும்; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்களோ கூர்வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை.
முறி -தளிர் வண்ணம்
முறுவல் -பல்
முத்தம் -முத்து
வெறி நாற்றம் -இனிய மணம்
வேய் -மூங்கில்
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
குவளை மலர்கள் இவளைக் கண்டால், மாட்சிமைப்பட்ட ஆபரணங்களையுடைய இவளது கண்களை நிகரோமென்று நாணித் தலைக்குனிந்து நிலத்தைப் பார்க்கும்.
மாண் -மாட்சிமை
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
இவள் தன் மென்மையை நினையாமல், அனிச்சமலரின் காம்பினைக் களையாமல் சூடிவிட்டாள். இனி இவள் இடைக்கு நல்லவைக்கான பறைகள் ஒலியா. (அனிச்ச மலரின் மலர்க்காம்பின் பளுவினைத் தாங்கும் வலிமை கூட இல்லாத, மென்மையானவளாம்)
பெய்தாள் -சூடினாள்
நுசுப்பு -இடை
படாஅ -ஒலியா
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.
பூரண சந்திரனையும், பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறிய இயலாமல், வானத்து மீன்கள் தன் நிலையில் நில்லாமல் கலங்கிப் போயின.
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
வானத்து மீன்கள் அவ்வாறு கலங்குவதும் ஏனோ? தேய்ந்து, பின் வளர்ந்து முழுமையடையும் நிலவினிடத்து உள்ள கறைகளைப் போல், இவள் முகத்திலும் களங்கம் உண்டோ?
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மதியே! வாழ்வாயாக. இப்பெண்ணின் முகத்தைப் போல், நான் மகிழும் வண்ணம் ஒளிவீச வல்லமையுடையாயின் நீயும் என்னால் காதலிக்கப்படுவாய். (ஆனால், நீ அவ்வாறு இல்லை)
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
வெண்ணிலவே! மலர் போன்ற கண்களையுடைய இப்பெண்ணின் முகத்தை நீயும் ஒத்திருப்பாயாயின், பலரும் காணும் வண்ணம் இனி நீ வானத்தில் தோன்றாதிருப்பாயாக!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
மிக மிக மென்மையான அனிச்சம் மலரும், அன்னப் பறவையின் மெல்லிய இறகும், இப்பெண்ணின் பாதத்தை வருடினால், அவை நெருஞ்சிற் பழம் போல அவளின் பாதங்களை நோகச் செய்யுமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment