Tuesday, November 13, 2007

பொருட்பால் -கூழியல் - பொருள் - செயல்வகை - 76

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

ஒரு பொருட்டாக கருதப் படாதவரை மதிக்கச் செய்வதே பொருள் ஆகும்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள் இல்லாதவரை எல்லோரும் எள்ளி நகையாடுவர். செல்வம் உடையவரை சிறப்பு செய்வர்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

உண்மையை தான் கொண்ட பொருளாகக் கருதுபவர் செல்லும் இடத்தில் உள்ள துன்பத்தை அப்பொருள் விலக்கும்.

இருள் - துன்பம்
தேயம் - இடம்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

நல் வழி அறிந்து ஈட்டிய செல்வம் அறத்தையும், இன்பத்தையும் தரும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

அருளோடும், அன்போடும் வராத பொருள் பகைவரால் நீங்கி விடும்.

புல்லார் - பகைவர்

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

உரியவர் இல்லாத பொருளும், தீர்வையான பொருளும், பகைவரை வென்று திறையாக வரும் பொருளும் மன்னனுக்குரியவை.

உல்கு - தீர்வை
ஒன்னார் - பகைவர்
தெறு - திறை


அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

அன்பு ஈன்ற அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலியால் வளரும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

தன் கைப்பொருள் கொண்டு தொழில் செய்வது குன்றில் அமர்ந்து யானைப் போர் பார்ப்பது போல் பாதுகாப்பானது.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

பகைவரின் செருக்கை அழிக்கும் எஃகு போன்ற பொருளைச் சேர்க்க வேண்டும். அதை விட கூர்மையான ஆயுதம் வேறு இல்லை.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

அறம், பொருள், இன்பம் மூன்றினுள் நல்வழியில் அதிகமாகப் பொருள் சேர்க்க வல்லவர்க்கு மற்ற இரண்டையும் அடைதல் எளிதான ஒன்று.

ஒள் பொருள் - (நல்வழியில் வந்ததால்) சிறந்த பொருள்
காழ்ப்ப - மிகுதியாக

No comments: