வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
தான் வெல்லும் வல்லமையுடையவனாயிருந்தாலும், சூதாடுதலை விரும்பாதிருக்க வேண்டும். அவ்வெற்றியால் வரும் பொருளானது, இரையால் மறையப்பெற்ற தூண்டிலிரும்பை மீன் விழுங்குதலைப் போன்றது.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
வெல்வோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்கான பொருளினை இழந்து வறியவராகும், சூதாடுவோர்க்கு, அப்பொருளால் அறமும், இன்பமும் பெற்று வாழ்வதற்கு ஒரு வழியும் உண்டாமோ?
ஆறு -வழி
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
உருளும் கவற்றில் கிடைத்த ஆதாயத்தையே இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், அவன் பொருளும், வருவாயும் அவனை விட்டு நீங்கி, பகைவரிடத்தே சேரும்.
ஆயம் -ஆதாயம்
ஓவாது -இடைவிடாது
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
தன்னை விரும்பினவர்க்கு துன்பங்கள் பலசெய்து, அவரின் புகழையும் அழிக்கும் சூதினை போலத் துன்பம் தருவது வேறொன்று இல்.
சீர் -புகழ்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
முற்காலத்தில் செல்வமுடையவராயிருந்தும், இப்போது வறுமையிலிருப்பவர்கள், சூதினையும், அது ஆடுமிடத்தையும், ஆடுவதற்கான கைத்தொழிலையும் மேற்கொண்டு கைவிடாதவரே.
கவறு -சூது
கழகம் -களம்(ஆடுமிடம்)
கை -கைத்திறன்
தருக்கி -மேற்கொண்டு
இவறியார் -கைவிடாதவர்
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
சூதென்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், இம்மையில் வயிறு நிறையப் பெறார்; மறுமையிலும் நரகத்துன்பம் அனுபவிப்பர்.
அகடு -வயிறு
ஆரார் -நிறைவுபெறார்
அல்லல் -துன்பம்
முகடி -மூதேவி
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
நல்லன செய்வதற்குக் கிடைத்த காலமானது சூதாடுமிடத்தில் கழியுமானால், அது நெடுநாளாய் வந்த செல்வத்தையும், பழகிய நல்ல பழக்கங்களையும் அழிக்கும்.
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
சூதானது, தன்னைப் பழகினவனது, பொருளைக் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச்செய்து, அருளையும் கெடுத்து, இருமையிலும் துன்பம் விளைவிக்கும்.
உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
சூதினை விளையாட்டுத் தொழிலாக விரும்புவானாயின், உடை,செல்வம், ஊண், ஒளி, கல்வி ஆகிய ஐந்தும் அவனைவிட்டு நீங்கும்.
ஆயம் -சூது
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
சூதால் இருமைப்பயன்களையும் இழக்குந்தோறும் அதனை விரும்புகின்ற சூதனைப் போல், உயிரும், உடம்பு துன்பத்தால் வருந்த வருந்த அதனை விரும்பும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment