இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடத்து இயல்பாகவே ஒழுங்கும், பழிக்கு அஞ்சும் குணமும் இருக்கும்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
நல்ல குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கமும், உண்மையும், பழிக்கு அஞ்சும் இயல்பும் தவற மாட்டார்கள்.
இழுக்கு - தவறுதல்
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
புன்சிரிப்பு, உதவும் பண்பு, இனியன பேசுதல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கு குணங்களும் வாய்மை தவறாத குடிப் பிறந்தவருக்குரியது.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடிக் கோடிப் பொருள் தந்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் தம் குடிப் பெருமை குன்றும் செயலைச் செய்ய மாட்டார்கள்.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பிறருக்கு கொடுத்து உதவுவதால் பொருள் நிலையில் குறைந்த போதும் நெடிய குடிப்பிறந்தவர் தம் பண்பில் தவற மாட்டார்கள்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
குற்றமற்ற குலத்தில் வாழ்வதாக கருதுவோர் வஞ்சனையின் காரணமாக மேன்மை இல்லாத செயல் செய்ய மாட்டார்கள்.
சலம் - வஞ்சனை
சால்பு - மேன்மை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
வான் நிலவின் களங்கம் போல் நல்ல குடியில் பிறந்தவர் செய்யும் தவறு தெளிவாகத் தெரியும்.
விசும்பு - வானம்
மறு - களங்கம்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
நல்ல குடிப் பிறந்தவன் அன்பில்லாது இருந்தால் அவன் நல்ல குடிப் பிறந்தவனா என உலகத்தார் ஐயுறுவர்.
நார் - அன்பு
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் வளத்தை துளிர்க்கும் முளை காட்டும்; நல்ல குலத்தில் பிறந்தவனா என்பதை ஒருவன் பேசும் சொல் காட்டிவிடும்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
தனது நன்மை கருதுபவன் பிறர் பழிக்கும் செயலுக்கு அஞ்ச வேண்டும். நல்ல குடியில் விளங்க வேண்டும் என்றால் அனைவரிடமும் பணிவு வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment