Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - நெஞ்சோடு - கிளத்தல் - 125

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே, என் தீராத நோய் குணமாக ஏதாவது ஒரு மருந்தை எண்ணிப் பார்த்து சொல்லேன்?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

வாழ்க என் நெஞ்சே! அவரிடத்து உன்னை குறித்து காதல் இல்லை. ஆதலால் அது குறித்து நீ வருந்துவது பேதைமை.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே, இன்னும் இருந்து அவரை நினைத்து வருந்துவது ஏன்? இத்துன்ப நோய்க்கு காரணமானவர் உன்னைப் பரிந்து நினைப்பது இல்லை.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே, அவரைக் காணச் செல்லும் போது இக்கண்களையும் உடன் அழைத்துச் செல். இல்லை எனில் அவரைக் காண வேண்டி என்னைத் தின்பது போல் தொல்லை செய்யும்.

சேறி - செல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே, நான் விரும்பியும் என்னை விரும்பாதவரை 'வெறுக்கிறார்' என்று எண்ணிக் கைவிட வழி இருக்கிறதா?

செற்றார் - வெறுத்தவர்
உற்று - விரும்பி

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

என்னுடன் கலந்து ஊடல் நீக்க வல்லவரான காதலரிடம் ஒருமுறையும் பிணங்காத நெஞ்சே, நீ இப்போது அவர் மீது பொய்க்கோபம் கொண்டு வாட்டுவதேன்.

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நன்னெஞ்சே, ஒன்று காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; என்னால் இரண்டையும் ஒரு சேர தாங்க முடியவில்லை.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

எனக்காகப் பரிந்து என் துன்பத்தைப் போக்குவார் என்று நம்பி என்னைப் பிரிந்தவர் பின் செல்லும் நெஞ்சே, நீ ஒரு பேதை.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே, காதலர் உள்ளத்தில் இருப்பதை அறிந்திருந்தும் வேறு யாரிடம் தேடிச் செல்கிறாய்.

உழை - இடம்

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

நெருங்காது நீங்கிச் சென்றவரை நெஞ்சத்தால் நினைத்து வருந்துவதால் மேலும் அழகை இழப்போம்.

No comments: