ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
பகைவர் மேல் செல்பவருக்கும், வரும் படைக்கு அஞ்சி தறகாத்துக் கொள்ள நினைப்பவருக்கும் இன்றி அமையாதது அரண்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
மணி நிறமுடைய நீரும், மணல் வெளியும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் உடையதே அரண் ஆகும்.
மணி நீர் - நீண்ட நாள் தேங்கி நிறம் கொண்டு இறங்க இயலாத நீர் நிலை
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
ஏற இயலாத உயரமும், முற்றம் சூழ இயலாத அகலமும், எளிதில் பிளக்க இயலாத உறுதியும், பகைவர் அஞ்சும் பெருமையும் கொண்டதே நூல்கள் உரைக்கும் அரண் ஆகும்.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
சிறிய காவலே போதும் ஆயினும் பெரிய பரப்பில் அமைந்து வலிமை மிக்க பகையின் ஊக்கத்தை அழிக்க வல்லது அரண்.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
வெற்றி கொள்ள கடினமானதும், வேண்டிய உணவை கொண்டதும், உள்ளே இருப்போருக்கு எளிதான நிலையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது அரண்.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
உள்ளே இருப்பவருக்குத் தேவையான பொருள் நிறைந்து, களத்தில் உதவும் மறவர்களையும் கொண்டது அரண்.
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
முற்றுகையிடுதல், வலிவு குறைந்த இடத்தில் தாக்குதல், அறைகூவி வெளியே இழுத்தல் போன்ற வழிகளிலும் வெல்வதற்கு அரியது அரண்.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
உள்ளே இருப்பவர்கள் தங்கள் பிடியை விடாது முற்றுகையில் வல்ல பகைவரையும் வெல்ல உதவுவது அரண்.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
போர்முனையில் பகைவர் வீழ, உள் இருக்கும் வீறு கொள்ளும் சிறப்பு வாய்ந்தது அரண்.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
எவ்வளவு சிறப்புகள் இருந்த போதும் போரில் சிறந்தவர்கள் என்னும் சிறப்பு இல்லாவிட்டால் காக்கும் அரண் ஏது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment