அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
காக்கும் அறம், பொருள் மேல் உள்ள பற்று, விரும்பும் இன்பத்தின் வகை, உயிர் குறித்த பரிவு ஆகிய பண்புகளால் ஒருவனைத் தேர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
(அரசன்) நல்ல குடும்பத்தில் பிறந்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல், பழிக்கு அஞ்சி வாழ்பவனைத் தேர்ந்து கொளல் வேண்டும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
சிறந்தனவற்றை கற்ற குற்றமற்றவர்களை கவனித்தால் அவர்களிடம் அறியாமை இல்லை என்பது புலனாகும்.
ஆசு - குற்றம்
வெளிறு - அறியாமை
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவரின் நல்ல குணங்களையும், குறைகளையும் ஆராய்ந்து மிகுந்த தன்மையால் வகைப்படுத்த வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ஒருவரின் புகழுக்கும், சிறுமைக்கும் அவரவர் செயல்களே அடிப்படை.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
உற்றார், பொருள் எதுவும் இல்லாதவரை தேர்ந்திடல் வேண்டாம். பிறர் பற்றி கருதாதவர்கள் பழி வரும் செயலுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.
ஓம்புக - தவிர்த்திடுக (கவனம் தேவை, ஓம்பல் என்பது காத்தலையும் குறிக்கும்)
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
ஒருவர் மீது கொண்ட அன்பால் எதையும் அறிந்து தெளியும் அறிவற்றவரை தேர்ந்து கொள்வது எல்லா அறியாமையையும் உடன் கொண்டு வரும்.
காதன்மை - அன்புடமை
கந்தா - வழியாக, அடிப்படையாக
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
ஒருவனைப் பற்றி சரியாக ஆராயாமல் துணையாகக் கொண்டு செயலாற்றும் வழி, விலகாத துன்பத்தைத் தரும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
தெளிவாக ஆராயாமல் யாரையும் சேர்க்க வேண்டாம். அவ்வாறு ஆராய்ந்து சேர்த்த பின் அவர் காட்டும் வழியைத் தேர்ந்து கொள்ளலாம்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
ஆராயாமல் ஒருவனைச் சேர்த்தலும், ஆராய்ந்து சேர்த்தவனை ஐயப்படுதலும் விலகாத துன்பத்தைத் தரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment