ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
வழக்கை ஆராய்ந்து ஒருபக்கம் சாராது நடுநிலையில் நூல் வகுத்த வழியில் நீதி வழங்க வேண்டும்.
கண்ணோடாது - இரக்கப் படாமல்
இறை புரிந்து - அனைவருக்கும் பொதுவாக, நடு நிலையில்
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
உயிர் வாழ உதவும் மழை போல் ஒரு நாட்டின் குடிகளுக்கு மன்னன் ஆட்சி (அனைவருக்கும் பொதுவான பயன் வழங்குமாறு) அமைதல் வேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மன்னவன் ஆட்சி அந்தனர் கற்கும் அறத்திற்கும் மூலமானது.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிகளை அரவணைத்து செல்லும் மன்னனின் அடிகளைப் பற்றி நிற்பர் மக்கள்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நூல் வகுத்த விதிகளின் படி ஆளும் மன்னன் நாட்டில் தவறாது பெய்யும் மழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்து அமையும்.
உளி - விதிமுறை
தொக்கு - சேர்ந்து, கூடி
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது வளையாத செங்கோல் அன்றி வேல் அல்ல.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
நாட்டை ஆளும் அரசனை அவன் வழுவாது ஆளும் முறை காக்கும்.
முட்டா - முட்டாது, தடை இல்லாமல்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
அணுக எளிமையாக, நீதி ஆராய்ந்து முறை வழங்காத மன்னன் தன் நிலையில் தாழ்ந்து கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
தன் குடிமக்களை பிற துன்பங்களில் இருந்து காத்து, தானும் வருத்தாமல், தவறைத் தண்டித்தல் மன்னனுக்கு பழியன்று; அவன் கடமையே ஆகும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர்களை வேந்தன் தண்டித்தல், பயிர் வளர களை அகற்றுவதற்கு ஒப்பானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment