Thursday, November 15, 2007

பொருட்பால் - ஒழிபியல் - பெருமை - 98

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

ஊக்கம் மிகுதியாக இருப்பது ஒருவருக்கு புகழைத் தரும். அவ்வாறு ஊக்கம் இல்லாமல் உயிர் வாழலாம் என்பது இழிவே.

ஒளி - புகழ்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றே. ஆனால் சிறப்பு அவரவர் செய்யும் செயல்களால் வேறுபடும்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

மேன்மையான குடியில் பிறந்தாலும் மேன்மையான செயல்களை செய்யாதவர்கள் மேன்மக்கள் ஆக மாட்டார்கள். கீழான குடியில் பிறந்தாலும் கீழ்மையான செயலைச் செய்யாதவர்கள் கீழ்மக்கள் இல்லை.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

தன் மனதை சிதறவிடாத மகளிரைப் போல் சிறுமையில் இருந்து தன்னை காத்துக் கொண்டு வாழ்பவனும் பெருமைக்கு உரியவனே.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

பெருமை உடையவர்கள் செய்வதற்கரிய செயல்களை செய்யும் வழி அறிந்து செய்வர்.

ஆற்றுதல் - செய்தல்
ஆறு - வழி

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள்வேம் என்னும் நோக்கு.

சிறுமை நிறைந்தவர்கள் செயலால், பண்பால் பெரியவர்கள் உடன் இருந்து அப்பண்புகளை கொள்வோம் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

சிறுமை உடையவர்கள் சிறப்பினைப் பெற்றால் அளவு மீறி செயல்படுவர்.

இறப்பு - மிகுதி

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமை உடையவர்கள் அதற்கு பணிவும் காரணம் என பணிந்திருப்பர். சிறுமை குணத்தை உடையவர்கள் தம்மை வியந்து இருப்பார்கள்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

காரணம் இருந்தும் பெருமிதம் இல்லாமல் இருப்பதே பெருமைக்கான குணம். காரணமின்றியும் பெருமிதம் கொள்பவர்கள் சிறியோராக இருப்பர்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பெருமை உடையவர்கள் பிறரின் குறைகளை விடுத்து அருமைகளைக் கூறுவர். சிறியோர் குறைகளையே கூறுவர்.

அற்றம் - கெடுதல், குறைகள்

3 comments:

Bharathiraja said...
This comment has been removed by the author.
Bharathiraja said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றே. ஆனால் சிறப்பு அவரவர் செய்யும் செயல்களால் வேறுபடும்.

>>>>>>>>

I think the meaning is wrong !
Actual meaning is the work that people do doesn't make any difference(சிறப்பொவ்வா).

தமிழ் said...

Bharathi, Please read this.

http://www.thirukkural.com/2009/02/blog-post_4848.html