Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - குடி - செயல்வகை - 103

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

தான் மேற்கொண்ட நற்செயலை கைவிடேன் என்னும் பெருமையை விட பெருமிதம் கொள்ளத்தக்கது வேறு இல்லை.

துவ்வுதல் - நீங்குதல், எதிர்ப்பதம் - துவ்வா

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

மனித முயற்சியும், நிறைந்த அறிவும் கொண்டு செய்யப் படும் பெருஞ்செயலால் குடிப்பெருமை உயரும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

குடிப்பெருமை உயரும் செயலுக்கு ஒருவர் முன் வரும் போது தெய்வமும் ஆடை வரிந்து கட்டி உதவிக்கு முன்னால் வரும்.


மடி - ஆடை

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

தமது குடியை காப்பதற்கு விரைந்து முயல்பவருக்கு செயலானது ஆலோசனை தேவைப்படாது தானே விரைந்து முடியும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

பிறர் குற்றம் காணாத வகையில் குட்பெருமை காத்து வாழ்பவனை தம் சுற்றம் என உலகோர் விரும்பி வாழ்வர்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

நல்ல ஆண்மை என்பது ஒருவன் தான் பிறந்த குடியை அதன் நறபெயர் கெடாதவாறு ஆளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்வதாகும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

களத்தில் படையை நடத்தும் ஆற்றலுடையவரைப் போன்றவரால் மட்டுமே தம் குடியையையும் அதன் புகழ் குன்றாமல் வழி நடத்த இயலும்.

அமரகம் - போர்க்களம்
வன்கண்ணர் - வலுமை மிகுந்தவர்

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

குடி உயத்தும் செயலில் உள்ளவர்க்கு எந்நேரமும் தகுந்த நேரமே. சோம்பலால் காலம் கருதி, மானம் காக்க எண்ணிணால் செயல் நிறைவேறாது.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

தன் குடியை குற்றத்திலிருந்து காக்க எண்ணுபவன் உடல் துன்பத்திற்கே கொள்கலன் போன்றதாகும்.

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

துன்பம் வரும் போது தாங்கி காப்பதற்கு தகுந்த ஆள் இல்லை எனில் அக்குடி துன்பத்தால் வீழும்.

No comments: