கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
ஒரு செயலை செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றறிதலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் திருந்தவுடையவனே, அமைச்சன்.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
பகைவரோடு சேர்ந்துள்ளவரை பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்க்க வல்லவனே, அமைச்சன்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்ல்லும் வல்லது அமைச்சு.
எதையும் நன்கு ஆய்ந்தறிதலும், ஆராய்ந்தபின் செய்வதும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் துணிவு பிறக்கும் வகையில் சொல்ல வல்லவனே, அமைச்சன்.
அறன்றிந்து ஆன்றமைந்த சொல்லன்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எந்நாளிலும் தொழில் செய்யுந் திறங்களை அறிந்தவனே ஆலோசனைக்குத் துணையாவான்.
ஆன்ற -நிறைந்த
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
இயல்பான நுண்ணறிவும், அதோடு நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு எதிராக எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நில்லாமல் போய்விடும்.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்த போதும், அதனை உலக இயற்கையோடு இயைந்தவண்ணம் முறையாகச் செய்ய வேண்டும்.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
அறிந்து சொல்பவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
பக்கத்திலிருந்து தீங்கு செய்யவெண்ணும் மந்திரி ஓருவனில் எழுவது கோடி பகைவரும் உளர்.
தெவ்வோர் -பகைவர்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
முறையாக ஆராய்ந்தறிந்து உணர்ந்த போதும் செயல் திறமையற்ற அமைச்சர்கள், முடிவில்லாத (நிறைவுறாத) செயல்களையே செய்வர்.
திறப்பாடு -செயல் திறன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment