கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
இல்லையென்று சொல்லாதவரிடத்தும் வறுமையால் சென்று இரந்து கேட்காமை, இரப்பதால் கிடைக்கும் கோடிப் பொருளுக்கு ஒப்பாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
இரந்து உயிர் வாழ்வதும் தொழில் என்றால் அவ்வாறு உலகைப் படைத்தவன் தானும் அலைந்து அழிவானாக. இரப்பதால் அன்றி உழைத்துப் பிழைக்க வேண்டும்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்க்கலாம் என்று கருதினால் அதைவிட கொடுமை வேறு இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
வறுமையால் துன்புற்ற நிலையிலும் பிறரிடம் இரந்து கேட்காதிருத்தல் மாபெரும் சிறப்பத் தரும்.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
இருப்பது தெளிந்த நீரும், சிறு அரிசிக் கஞ்சி ஆனாலும் உழைத்துப் பெற்றதால் உண்பதற்கு அவற்றை விட இனிமையானது இல்லை.
அடுபுற்கை - சிறு அரிசிக் கஞ்சி
தாள் - முயற்சி
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
தவிக்கும் பசுவுக்கான நீர் என்று கேட்டாலும் இரந்து கேட்ட நாவிற்கு இழிவே.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
இரப்பவருக்கு இல்லை என்று சொல்பவரிடம் இரந்து கேட்க வேண்டாம் என்று இரந்து கேட்டுக் கொள்கிறேன்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
வறுமையில் இருந்து விடுபட ஏறும் இரத்தல் என்னும் காவலற்ற தோணி இல்லை என்போர் கல்நெஞ்சில் மோதி உடைந்து விடும்.
ஏமாப்பு இல் - காவலற்ற
பக்கு - பிளந்து
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
இரத்தலை நினைத்தால் உள்ளம் உருகும். இல்லை என்று கூறவதை நினைத்தால் உள்ளமே இல்லாது நொறுங்கி விடும்.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
இரந்து கேட்பவர் இல்லை என்ற சொல்லைக் கேட்ட உடன் அவமானத்தால் உயிர் துறப்பர். இல்லை என்று சொன்னவன் உயிரற்ற உடல் ஆதலால் உயிர் எங்கே ஒளிந்திருக்குமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment