Sunday, November 18, 2007

காமத்துப்பால் -களவியல் -நாணுத் துறவுரைத்தல் -114

நாணுத்துறவுரைத்தல் - நாணத்தை துறந்து, தன் காதலை உரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

தன் காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின், அன்பை பெற இயலாமல் வருந்துகின்ற ஆடவருக்கு, வலிமையான பாதுகாப்பு, 'மடலேறுதல்' அல்லாமல் வேறு இல்லை.

(மடலூர்தல் - தலைவனின் காதலை தலைவி ஏற்றுக் கொள்ளாத நிலையில், தன் காதலை அவளுக்கு உணர்த்தும் வண்ணம், அவள் முகத்தை ஒரு துணியில் வரைந்து கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை மேல் ஏறி தலைவி இருக்கும் வீதியில் உலா வருதல் ஆகும்.

காய்ந்த பனை ஓலையில் தலைவன் உலா வருகையில், அவ்வோலை வீதியில் உருவாக்கும் இரைச்சலில், அனைவரின் கவனமும் அவன்பக்கம் திரும்பி, சீலைத்துணியில் வரையப்பட்டிருக்கும் பெண்ணிடமும், அவள் பெற்றோரிடமும் தலைவனின் காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு ஊரார் எடுத்துக் கூறுவர்.

மடலூர்தல் என்பது, மிகவும் இழிவான ஒரு செயலாகும். அதிலும் மகளிர் எந்நிலையிலும் மடலூர்தல் கூடாது என்பது மரபு.
"எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மையான்" - தொல்காப்பியம்)
மடலேறுதல் - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

காதலியின் அன்பைப் பெற இயலாதத் துன்பத்தைத் தாங்க இயலாத, என் உடலும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி, மடலூரத் துணிந்துவிட்டன.


நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணத்தையும், மிகுந்த ஆண்மையையும் முன்னர் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால், காம நோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.
பண்டு - முன்பு

காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணம், நல்லாண்மை ஆகிய புணை(தெப்பங்)களை, காமமாகிய கடிய வெள்ளம் என்னிற் பிரித்து கொண்டு போகின்றதே!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

அழகிய மணிகளைக் கொண்டு செறிவாகத் தொடுக்கப்பெற்ற கைவளையும், இடையணியும்(மேகலை) அணிந்தவள் எனக்கு,' மாலைப் பொழுதில் வருந்தும் துன்பத்தையும், மடலேறும் நிலையையும் தந்துவிட்டாளே!'
தொடலை - மணிமேகலை (இடையணி)
தொடி - வளையல்

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்.

அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் தூக்கத்தைப் பகைத்துக் கொண்டு இரவு முழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றன; அதனால், இரவின் நடுச்சாமத்திலும் மடலேறுதலை உறுதியாக மடலேறுதலைப் பற்றியே நான் நினைத்திருப்பேன்.
படல் - உறக்கம்
ஒல்லா - பகை
மன்ற - நிச்சயமாக, உறுதியாக

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.

கடல் போல் கரையற்ற(அளவற்ற) காமநோயை அனுபவித்தும் மடலேறாமல் தன் துயரைப் பொறுமையோடு சகித்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதியான குணம் ஆணுக்கில்லை.

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவர், மன உறுதி அற்றவர், உள்ளத்தில் எதையும் கள்ளத்தனமாக வைத்திருக்க அறியாதவர் என்று அவர் மேல் இரக்கம் கொள்ளாது, காதலானது தானே மறைந்திருக்காது, மன்றத்தில் வெளிப்படுகின்றதே!

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

நான்முன் அடங்கியிருக்கையில், என்னை பிறர் அறியவில்லை என்று எண்ணி, என் காமநோயானது, ஊரில் பலரும் அறிந்து என்னைத் தூற்றும்படிக்கு மயங்கிப் போய் வசவும், வதந்திகளுமாய் வீதியெல்லாம் திரிகின்றது.
மறுகில் - வீதியில்
மருண்டு - மயங்கி
மறுகும் - சுற்றுகின்றது (திரிகின்றது)

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

அறிவில்லாதவர்கள்! நான் பட்ட இந்தப் பெருந்துன்பத்தை அவர்கள் அறிந்ததில்லை போலும். அதனால் தான், என் கண்ணில் காணும்படி என் எதிரே நின்று என்னை எள்ளி நகைக்கின்றனர்.

No comments: