Tuesday, November 13, 2007

பொருட்பால் -அங்கவியல் -அவை அஞ்சாமை -73

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

சொற்களின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, அறிவிற் சிறந்தவர் அவையில், வாய்சோர்ந்தும் பிழையானதை சொல்லமாட்டார்.


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

'கற்றவர்களுள் கற்றவர்' என்று புகழப்படுபவர்கள், கற்றவர் அவையின் முன், தான் கற்றவற்றை அவர்கள் மனங்கொள்ள எடுத்துச் சொல்லக் கூடியவரே ஆவர்.


பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பலர்; ஆனால் கற்றவர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர் மிகமிகச் சிலரே.


கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

தாம் கற்றவைகளைக் கற்றவர்கள் மனங்கொள்ளச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவரிடம், எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும்பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயமறிந்து கற்றுக் கொளல் வேண்டும்.


வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அஞ்சாமை இல்லாதவர்களுக்கு அவர்கள் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவுடையோர் அவையில் பேச அஞ்சுபவர்க்கு நூலறிவால் என்ன பயன்?

என் -என்ன


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலுள்ள கூரிய வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுபவனின் நூலறிவும் பயன்படாது.

ஒள்வாள் -கூரிய வாள் ( ஒளி பொருந்திய வாள்)


பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

நல்லவர்கள் அவையில், அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள், பல வகையான நூல்களைக் கற்றவரானாலும் பயனில்லாதவரே.


கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.

தாம் பல நூல்களைக் கற்றவரானாலும், நல்லறிவு உடையவர் அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள், கல்லாதவரினும் கடைப்பட்டவரே.


உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

அவைக்கு அஞ்சி, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சொல்ல இயலாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள்.

களன் -சபை
செல -ஏற்க

No comments: