வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
வீடு கொள்ளாது பொருள் சேர்த்தவன் அதை பயன்படுத்தவில்லை எனில் இறந்தவனைப் போல் அச்செல்வத்தால் செய்யக் கூடியது எதுவுமில்லை.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொருளால் எல்லாம் நிறைவேற்ற இயலும் என்று கருதா எவருக்கும் தராமல் மயங்குபவன் பிறப்பு நிறைவு இல்லாதது.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
பொருளாசையால் (பொருள் தராத) புகழ் (தரும் செயல்) வேண்டாம் என்பவர் நிலத்திற்கு சுமையாவார்.
ஈட்டம் - பொருளீட்டுவது
இவறி - ஆசைப்பட்டு
இசை - புகழ்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
ஒருவராலும் (ஈயாமையால்) விரும்பப் படாதவன், தனக்குப் பின் எஞ்சுவது எது எனக் எதைக் கருதுவானோ?
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
பிறருக்கு கொடுத்தல், பிற வழிகளில் பயன்படுத்துதல் போன்ற இயல்பு இல்லாதவர்கள் செலவின்றி கோடிக் கோடியாய் பொருள் சேர்ப்பதால் எதுவும் பெறுவது இல்லை.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
தானும் பயன்படுத்தாமல், தகுதி உடையவருக்கும் தராமல் இருப்பவன் தான் வைத்திருக்கும் பெருஞ்செல்வத்திற்கு நோயைப் போன்றவன்.
ஏதம் - நோய்.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
இல்லாதவருக்கு ஈயாமல் இருக்கும் செல்வம் அனைத்துச் சிறப்புகளும் பெற்ற கன்னி தனிமையாய் இருந்து மூப்பெய்துவதைப் போன்றது.
தமியள் - தனிமையாய் இருப்பவள்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
எவரும் விரும்பாதவன் சேர்த்த செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
பிறரிடம் அன்பு கொள்ளாமல், தன்னையும் வருத்தி, அறம் கருதாது சேர்த்த பெருஞ்செலவத்தை பிறர் எடுத்துக் கொண்டு விடுவர்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
புகழ் உடையவரின் சிறு வறுமையும் மேகம் நீரின்றி வறண்டு போவதைப் போல் மிகுந்த துன்பம் ஏற்படுத்துவது.
துனி - வறுமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment