Sunday, November 18, 2007

காமத்துப்பால் -களவியல் -குறிப்பறிதல் -110

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

இவளுடைய மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய் செய்யும் பார்வை; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

நான் காணாமல் என்னைப் பார்க்கின்ற இவள் பார்வையானது, மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதி ஆவதன்று; அதனினும் மிகுதியானது.
செம்பாகம் -சரிபாதி

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தவள் போல் நாணித் தலைக் கவிழ்ந்தாள்; அக்குறிப்பானது, எங்கள் அன்புப் பயிருக்கு அவள் வார்த்த நீராயிற்று.
இறைஞ்சினாள் -நாணித் தலை குனிந்தாள்
அட்டிய -வார்த்த

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நான், அவளைப் பார்க்கும் போது தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்; பாராதபோது, என்னைப் பார்த்து அவள் மெல்ல நகுவாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னையே குறிக்கொண்டு பார்க்காமல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள். (ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ண சாய்க்கிறா... அப்படின்னு எம்ஜியார் திரைப் பாடல் கூட இருக்கே! திரைப்படம் - மாட்டுக்கார வேலன்)

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

புறத்தே நம்மை விரும்பாதவர் போல் சொன்னாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.
உறாதவர் -அயலார்
செறார் -பகையாதவர்
ஒல்லை -விரைந்து

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

சினம் கலவா சொல்லும், சினந்தார் போல் பார்க்கும் பார்வையும் - புறத்தில் அயலார் போல இருந்து உள்ளத்தில் அன்பு மிகுதியாக உடையவரின் உள்ளக் குறிப்பாகும்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கப் - பசையினள் - பைய நகும் - அசையியற்கு உண்டாண்டோர் ஏர்.

அவளை இரப்பதுபோல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அந்த மெல்லிய புன்னகையானது, காற்றில் அசைகின்ற கொடியினை போன்ற மெல்லிடை கொண்டவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய் உள்ளது.

அசையியற்கு -மெல்லிய சாயலையுடையவளுக்கு
ஏர் - அழகு
பசையினள் -இரங்கினள்


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், காதலர்களிடத்து காணப்படும் தன்மை ஆகும்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.

No comments: