Thursday, November 08, 2007

பொருட்பால் - அரசியல் - சுற்றம் - தழால் - 53

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

தன் பொருள் நிலையில் குன்றியவர்களிடமும் முன்பு போலவே பழகும் தன்மை சுற்றத்தவர்களிடம் காணப்படும்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

அன்பு குறையாத சுற்றம் அமையுமெனில் அது என்றும் பெருகும் பலவகை செல்வமும் தரும்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாருடன் அன்புடன் கலந்து பழகாதவன் வாழ்வு கரைகள் அற்ற குளத்தைப் பொல் பயன்றறது.

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தவர்கள் தன்னைச் சுற்றி இருந்து மகிழுமாறு செய்வதே ஒருவன் செல்வம் பெற்றதன் பயனாகும்.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

ஒருவனின் உதவும் பண்பும், அன்புடன் பேசும் குணமும் தொடர்ந்து சுற்றத்தாரை அவனுடன் இருக்கச் செய்யும்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

வேண்டியதைத் தரும் குணம், சினம் தவிர்த்தல் உடையவன் போல் சுற்றத்தாருடையவன் உலகில் இல்லை.

மருங்கு - நெருங்கிய, உடன் இருத்தல்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கை கரைந்து பிற காக்கைகளுடன் தனக்குக் கிடைத்த உணவை சேர்ந்து உண்ணும். அத்தைகைய தன்மை உள்ளவர்கள் மேலும் உயர்வார்கள்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

அனைவரையும் பொதுவாகக் கருதாமல், திறமைக்கேற்றவாறு கருதுபவனை நெருங்கி வாழ அனைவரும் விரும்புவர்.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

சுற்றத்தவராய் இருந்து பிரிந்தவர் அதற்கான காரணம் நீங்கினால் தாமாக வருவர்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்
திருந்து எண்ணிக் கொளல்.

பக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் பின் வேறு காரணத்தால் திரும்பி வந்தாலும் அவரை ஆராய்ந்தே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments: