Wednesday, November 14, 2007

பொருட்பால் - நட்பியல் - தீ நட்பு - 82

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

அன்பால் நெருங்கிப் பழகுபவர் ஆனாலும் பண்பு இல்லாதவர் நட்பை
வளர்ப்பதை விட குறைப்பது நன்று.


உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?

தனக்குப் பயன் கருதி பழகி பயன் இல்லையெனில் விலகும் பண்பில்
ஒத்திராதவர் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஆவது என்ன?

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

கிடைக்கும் பயன் அளவு கருதும் நட்பும், பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒன்றே.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

போர்க்களத்தில் தள்ளி விட்டுச் செல்லும் கல்வி அறிவில்லாத குதிரையைப் போன்றவர்களின் நட்பை விட தனியே இருத்தல் மேலானது.

அமரகத்து - போர்க்களத்து
கல்லாமா - கல்லா + மா - கல்லாத விலங்கு

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

நட்பிற்கு ஏதுவாக நடந்த போதிலும் துன்பத்தில் காவலாக இல்லாத சிறுமை குணம் கொண்டவரின் தீய நட்பு கொள்ளவதை விட தள்ளுவதே நன்மை பயக்கும்.

ஏமம் - காவல்
செய்து + ஏமம் - செய்தேமம்

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

அறிவில்லாதவரிடம் கொண்டிருக்கும் பெரும் நட்பை விட அறிவுள்ளவரிடம் பகை கொள்வது கோடி பெறும்.

ஏதின்மை -பகைமை

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

பிறர் நம்மை நகைப்பதற்கு ஏதுவான நட்பை விட பகைவரால் ஏற்படும் தீமை கோடியில் பத்து மடங்கு பெறும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

நம்மால் முடியக் கூடிய வேலையையும், இயலாததாக செய்யக்கூடிய நட்பை அவரோடு பேசாது தளர விடுதல் நன்று.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

வீட்டில் நட்பு பாராட்டி பொதுவில் பழிப்பவரின் தொடர்பு எள்ளவும் நெருங்காமல் தள்ளத் தக்கது.

குறுகுதல் - இடைவெளி குறுகுதல்
ஓம்பல் - தவிர்த்தல்

No comments: