Sunday, November 18, 2007

காமத்துப்பால் -களவியல் -காதற் சிறப்புரைத்தல் -113

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

பணிவான சொல்லையுடைய இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போன்ற மிகுந்த சுவையுடையதாகும்.
வால் - வெண்மை, தூய்மை

உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

இப்பெண்ணோடு எமக்கு உண்டான நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் இடையேயான நட்பினைப் போன்றது.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

-கருமணியின் பாவாய் நீ போதாய்! யாம் வீழும் திரு நுதற்கு இல்லை இடம்
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடுவாயாக! நான் விரும்புகின்ற அழகிய நெற்றியையுடையவள் இருப்பதற்கான வேறு இடம் இல்லை.
வீழும் -விரும்பும்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிர்க்கு வாழ்வைத் தருகிறாள். பிரியுமிடத்து அவ்வுயிர்க்கு சாதலையேத் தருகின்றாள்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

(ஒள்ளமர்க் கண்ணாள் குணம் மறப்பறியேன்; மறப்பின் மன்யான் உள்ளுவன்)
ஒளியினவாகிப் போர் செய்கின்ற கண்களையுடையவளது குணங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு; அவளை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்.

மறந்தால் தானே நினைக்கணும் மாமா! நினைவே நீதானே! நீ தானே! - கரகாட்டக்காரன் ~ குடகுமலைக் காற்றில் வரும் பாட்டு கேட்குதா ங்கற பாடல்ல வருமே.

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.

என் காதலுக்குரியவர் என் கண்ணை விட்டு ஒருபோதும் நீங்கார்; என் கண்களை இமைத்தாலும் வருந்துவதுஞ் செய்யார்; அத்துனை நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.

(காதலவர் கண்ணுள்ளார்; ஆகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து )
என் காதலுக்குரியவர், என் கண்ணுள்ளேயே இருப்பதனால், மை எழுதும் காலம் வரை
அவர் மறைதலை சகிக்க இயலாமையின் கண்ணுக்கு மை எழுதவும் மாட்டேன்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(நெஞ்சத்தார் காதலவர், ஆக வே பாக்கறிந்து வெய்துண்டல் அஞ்சுதும்)
என் காதலுக்குரியவர் என் நெஞ்சத்திலே இருப்பதனால் அவருக்கு சூடு உண்டாவதை எண்ணி நான் எதனையும் சூடாக உண்ணவும் மாட்டேன்.

இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் வூர்.

கண்ணிமைக்கும் காலத்து அவர் மறைதலை அறிந்து, நான் துயிலற்றுக் கிடப்பதனால், இவ்வூர் அவரை (தூங்காது நோய் செய்தார்) அன்பற்றவர் என்கிறது.

கரப்பாக்கு -மறைதல்

ஏதிலர் -அன்பற்றவர்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(உள்ளத்துள் என்றும் உவந்துறைவர்; ஏதிலர், இகந்துறைவர் என்னும் இவ்வூர்)
என் காதலர், என் மனத்தில் எப்போதும் மகிழ்ந்து வாசஞ்செய்கிறார்; அதனையறியாமல் இவ்வூர் 'பிரிந்து போய்விட்டார்', அன்பில்லாதவர் என்று பழி கூறுகின்றது.

No comments: