Thursday, November 08, 2007

பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை - 54

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

அடங்காத சினத்தை விட அளவு கடந்த மகிழ்ச்சியினால் வரும் மறதி தீங்கானது.

இறந்த - அடங்காத

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

நாளும் இரந்து உண்பவன் அறிவு அழிவது போல், மறதி ஒருவன் புகழை அழிக்கும்.

பொச்சாப்பு - மறதி
நிச்ச - நாள்தோறும்
நிரப்பு - இரந்து

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

மறதி உடையவருக்கு புகழ் கிடைக்காது என்பது உலகில் எவ்வகை நூல் கற்றவருக்கும் தெரியும்.

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

அஞ்சுபவருக்கு எவ்வகை காவலும் காப்பாக தோன்றாது. அதுபோல், மறதி உடையவருக்கு எவ்வகை நலமும் நலனாய் தோன்றாது.

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

துன்பம் வரும் முன் காக்க மறந்த பிழைக்கு துன்பத்தில் வருந்துவர்.

இழுக்கு - மறதி

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

மறதி என்பது ஒருவருக்கு என்றும் இல்லையெனில் அதைப் போல் நன்மை ஒருவருக்கு இல்லை.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

மறதியின்மையைக் கைக்கொண்டவருக்கு செய்வதற்கு அரியது என எதுவும் இல்லை.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

பிறரால் புகழப்படும் செயல்களை செய்ய மறந்தவருக்கு ஏழு பிறப்பும் நன்மை அமையாது.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

தன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது மகிழுச்சியால் ஏற்பட்ட மறதியால் அழிந்தவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.

மைந்து - வலிமை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

குறிக்கோளை மனதில் கொள்பவருக்கு, அதனை அடைதல் எளிதானது.

உள்ளியது - எண்ணியது, குறிக்கோள்

No comments: