Sunday, November 18, 2007

காமத்துப்பால்-கற்பியல்-கனவு நிலையுரைத்தல்-122

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

என்னை வருத்துகின்றதை அறிந்து அது தீர என் தலைவரின் தூதுவனாய் வந்த கனவினுக்கு விருந்தாக என்ன செய்வேன்.

-- என் பிரிவுத் துயருக்கு மருந்தாக, காதலரின் தூதினைக் கொண்டு வந்து என்னிடம் சேர்த்த கனவுக்கு நான் என்ன விருந்து படைப்பேன்??

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

கயல் போல மையுண்ட கண்கள் என் காதலரின் ஏக்கத்தால் தூங்காமல் இருக்கின்றன. அவை தூங்குமாயின் கனவில் காதலரை காண்பேன் கண்டால் அவரால் ஏற்படும் துன்பத்தை விரியச்சொல்வேன்

-- என் கணவனுடன் இணைந்திருந்த காலத்திலே, மையுண்டு செவ்வையாயிருந்த
என் கண்கள், இன்று என் வேண்டுகோளுக்கிணங்கி உறக்கம் கொள்ளுமாயின், என்னுடன் இணைந்த என் காதல் கணவருக்கு கனவிலே, நான் இன்னும் உயிர் வாழ்கின்ற உண்மையை உரைப்பேன்.
இரப்ப- வேண்டுகோள், யாசித்தல்
துஞ்சில் - துயில் கொள்ளுமாயின்
கலந்தார்க்கு - கணவர்க்கு
உயல் - உயிர்வாழ்தல்


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் நேரில் வந்து அருள்செய்யாத தலைவர் கனவில் வந்து காணுதலாலேயே என் உயிர் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நனவில் நேரில் வந்து அருள்செய்யாத தலைவன் கனவில் வருவதாலே கனவே எனக்கு மிக்க இனித்தாயிற்று

நனவினான் நல்காரை, நாடித் தரற்கு கனவினான் உண்டாகும் காமம்
-- என்னுடைய காதலானது, கனவினாலேயே நிலைப் பெற்றிருக்கிறது. அ-து நிகழ்காலத்தில் என்னுடன் இருந்து என்னை அன்பு செய்யாத காதலரை, கனவுதான் தேடிக் கொணர்ந்து என்னிடத்து சேர்ப்பிக்கின்றது.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

முன்னர் என் காதலனை நேரில் கண்டு நுகர்ந்த பொழுது இன்பம் உண்டாயிற்று. அவ்வின்பம், இன்று கனவினைக் கண்டவுடன் உண்டானது. ஆதலால் எனக்கு இரண்டுமே ஒத்தது

-- முன்பு, நேரில் என் காதலரைக் காணும் பொழுது எத்துனை இன்பமாய் இருந்ததோ, அதே அளவு இன்பம் இப்பொழுது அவரைக் கனவில் காணும் பொழுதும் இருக்கின்றது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

நனவு என்ற கெட்ட ஒன்று இல்லாதாயின் நான் என் காதலனை (கனவினால்) பிரியாமலிருப்பேனே.

நனவு - பகல்

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

இது என்ன கெட்ட இயல்பு நேரில் வந்து அருள்செய்யாத தலைவன் கனவிலே வந்து துன்புறுத்துவது.

பீழிப்பது - வருத்துவது, துன்புறுத்துவது


துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

நான் தூங்கும்போது என் தோளிலே ஆட்படுகின்ற தலைவன் விரைந்து என் நெஞ்சில் நிறைகின்றான் நான் விழித்தபிறகு

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

கனவிலே, தன் காதலர் வரக்காணாதோரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து மனம் நொந்து கொள்வர்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

நனவில் என்னை என் காதலன் பிரிந்துவிட்டான் என்று கொடுமை கூறுவர் இவ்வூரின் மகளிர் ஆனால் அவர்கள் அறியார் அவர் என்கனவில் வருவதை.

No comments: