Sunday, November 18, 2007

காமத்துப்பால்- கற்பியல்- கண்விதுப்பு அழிதல்-118

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

அன்று இந்த காம நோயை உண்டாக்கும் வகையில் தலைவனை காண்பித்தது இந்த கண்களே அவ்வாறிருக்க
இன்று அவனை காட்டச்சொல்லி அழுவது ஏனோ?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?

மையெழுதிய கண்களானது மேல்விளைவை அறியாது (அன்று தலைவனைப்பார்த்து) இருந்துவிட்டு இன்று தன்பிழை என்று அறியாமல் வருத்ததை அனுபவிப்பது ஏனோ?

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரை விரைந்து ஆவலால் நோக்கிவிட்டு தாமே இன்று அழுகின்ற அறியாமைச்செயல் நகைக்கத்தக்க இயல்பை உடையது கண்கள்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

உன் மையுண்ட கண்கள் பிழைக்கமுடியாத ஒழிவில்லாத நோயை உண்டாக்கி இன்று என்னால் அழக்கூட முடியாமல் நீர்வற்றி போய்விட்டது

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

கடலும் சிறியது எனும் வண்ணம் காம நோய் செய்த கண்கள் அத்தீவினையினால் தூங்க முடியாமை எனும் துன்பத்தை அனுபவிக்கின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

எனக்கு இந்த காமநோயை கொடுத்த இந்த கண்கள் தூங்காமல் இன்று துன்பமடைவது கண்டு என் மனம் மிகவும் இனிதாயிற்று

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

விழைந்து இழைந்து தலைவனைக்கண்ட இந்த கண்கள் துன்பத்தை அனுபவித்து அனுபவித்து நீர் வற்றிப் போகுக

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

வெறும் சொற்களினால் விரும்பி மனத்தினால் விரும்பாத தலைவரை காணாது ஏங்குகின்ற தன்மை உடையது கண்கள்.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

(தலைவன்)வராத நாட்களில் பிரிவினால் துஞ்சாது, வந்த நாட்களிலோ பிரிந்துவிடுவாரோ என்று ஏக்கத்தில் துஞ்சாது. இரய
இவ்விருவழியும் எனது கண்கள் பொறுக்கமுடியா துன்பத்தை கொள்கின்றது.
அஞர்- துன்பம்.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

என்னைப்போல பறை அறைதலை போல படபடக்கும் கண்களை உடையவர்களின் அகத்தில் மறைந்த இரகசியத்தை அறிதல் இவ்வூரிலுள்ளவர்க்கு எளிது.

No comments: