Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - மடியின்மை - 61

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

குடிப்பெருமை என்னும் விளக்கு சோம்பலினால் இருண்டு ஒளி குன்றும்.

மடி - சோம்பல்
மாசூர - மாசு ஊர

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

தன் குடி நற்குடியாக விளங்க வேண்டுவோர் சோம்பலை விட்டொழிக்க வேண்டும்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

சோம்பலை விடது ஒழுகும் அறிவற்றவனின் குடி அவனுக்கு முனபாக அழியும்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

சோம்பலில் வீழ்ந்ததால் சிறந்த தூண்டுதல் இழந்தவர்களின் குடி மடிந்து குற்றம் பெருகும்.

மாண்ட - சிறந்த

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெடும் தன்மையுடையவர் விரும்பியேறும் தோணி ஆகும்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

நாடு ஆள்பவரின் செல்வம் அமைந்தாலும் சோம்பல் உடையவர் அதனால் விளையும் பயனை அடைய முடியாது.

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

சோம்பல் விரும்பி சிறந்த ஊக்கத்தை இழந்தவர்கள் அதனால் பிறர் கடிந்தும், இகழ்ந்தும் கூறும் சொற்களைக் கேட்பர்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

சோம்பல் ஒரு குடியில் தங்கினால் அக்குடியை பகைவருக்கு அடிமையாக்கி வடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

ஒருவன் தன் சோம்பலை விட்டொழித்தால் அவன் குடிக்கு நேர்ந்த குற்றம் நீங்கும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லாத மன்னன் கால் அளந்த இடமெல்லாம் ஒருங்கே ஆளப் பெறுவான்.

No comments: