Monday, November 12, 2007

பொருட்பால் -அங்கவியல் -தூது -69

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.


மக்களிடத்து அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்புகின்ற பண்புகள் அமைதலுமே தூதுரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள் ஆகும்.


அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.


தூதுரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று பண்புகளாவன மக்களிடத்தில் அன்பு, தெளிவான அறிவு, எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகியன ஆகும்.


நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.


நீதி நூல்களைக் கற்ற மந்திரிகளிடத்தில் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித் திறனைக் கொண்டவனாதலும் தூதுவனுக்கு வேண்டிய தகுதிகளாகும்.


அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.


இயல்பாக அமைந்த நுண்ணறிவு, தோற்றக் கவர்ச்சி, ஆராய்ந்து பெற்ற நூலறிவு இம்மூன்றன் செறிவுடையவனே தூதுவனாவான்.


தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.


விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்பவர் மனமகிழ உரைத்து, தன் நாட்டிற்கு நன்மை பயப்பவனே தூதனாவான்.



தொகச்சொல்லி -தொகுத்துச் சொல்லி
தூவாத -இன்னாத
நகச் சொல்லி -மனமகிழச் சொல்லி


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.


நூல்களைக் கற்று, மன்னர் கடும்பார்வைக்கு அஞ்சாமல், அவர் மனங்கொள்ள உரைத்து, காலத்தோடு பொருந்த தக்க உபாயத்தை அறிபவனே தூதனாவான்.


செலச்சொல்லி -மனங்கொள்ள உரைத்தல்



கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான் தலை.


வேற்றரசரிடத்தில், தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தைக் கருத்திற் கொண்டு, இடமறிந்து, தான் சொல்ல வேண்டியதை நன்கு சிந்தித்துக் கூறுபவனே சிறந்த தூதன்.


தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.


தூதுவனாகச் செல்பவன், தூய நடத்தையுடையவனாய், நல்ல துணைவனும், மனத்துணிவும், வாய்த்தவனாயிருத்தல் வேண்டும்.


விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.


தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தனிடம் சென்று உரைக்கும் தூதுவன், வடுப்படும் சொற்களைத் தன் வாய் சோர்ந்தும் சொல்லாத திறனுடையவனாய் இருக்க வேண்டும்.


வடுமாற்றம் -தாழ்வான வார்த்தை
வன்கணவன் -வலிமையுடையவன்


இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.


தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே தவறாது, தன் அரசனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன்.


இறைவற்கு -மன்னனுக்கு

No comments: