ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
எடுத்த செயலை செம்மையாக முடிக்கக் கூடியவர்களின் ஆற்றலை இகழாது இருப்பது ஒருவர் போற்றிக் காக்க வேண்டிய குணங்களில் சிறந்தது.
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
பெருமை மிக்கவர்களை மதிக்காது நடந்தால், அப்பெரியவர்களால் விலகாத துன்பம் நேரும்.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
பகைவரை அழிக்க வேண்டுமெனில் செய்து முடிப்பவரை இகழ்வது, நல்லவை கேளாமல் தான் அழிய விரும்பியவன் செய்யக் கூடியது.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
எடுத்த செயலை முடிப்பவர்களுக்கு அவ்வாறு முடிக்க இயலாதவர்கள் துன்பம் விளைவிப்பது கூற்றுவனை கை தட்டி அழைப்பது போலாகும்.
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
மிக்க வலிவுடைய வேந்தரால் பகைவர் எனக் கருதப் படுபவர் எங்கே செனுறாலும் பிழைத்து வாழ இயலாது.
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டவரும் பிழைக்கலாம், பெரியோர்களுக்கு தீங்கிழைத்து பிழைத்திருப்பது இயலாது.
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
தமது பண்பால் சிறந்த பெரியோர் சினந்து பகைத்தால், சிறந்த வகை வாழ்க்கை வாழ்ந்தும், வானளவு பொருள் இருந்தும் காக்க இயலாது.
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
குன்று போல் உறுதியான புகழை உடையவர் புகழை குலைத்திட நினைத்தால் நிலைத்த பொருளுடையவர் ஆயினும் தம் குடியோடு மாய்ந்து விட நேரும்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
உயர்ந்த கொள்கைகள் உடையவர் சினம் கொண்டால் வேந்தனும் தன் அரசின் நிலைத்தன்மை குலைந்து கெடுவான்.
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
நிறைந்த சுற்றமும், செல்வமும் அமைந்திருந்தாலும் சிறந்த பண்புகள் அமைந்த சான்றோர் சினந்தால் வாழ்தல் இயலாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment